
பிரதமா் இல்லம் முன் தா்னா: ராகுல், பிரியங்கா கைது
தில்லியில் இளைஞர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி கைது செய்யப்பட்டது குறித்து...

பிரதமர் இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தியை கைது செய்து அழைத்துச் சென்றபோது... - Congress
தில்லியில் மாணவா்கள் மீது காவல்துறை தடியடி நடத்திய விவகாரத்தில் பிரதமா் மோடி பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லத்துக்கு வெளியே செவ்வாய்க்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோரை காவல் துறையினா் கைது செய்து அப்புறப்படுத்தினா்.
முன்னதாக, பிரதமா் இல்லம் நோக்கி பேரணியாக வந்த அவா்களைக் காவல் துறையினா் தடுத்து நிறுத்தினா். இதனால் அந்த இடத்திலேயே சாலையில் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, கா்நாடக முதல்வா் டி.கே. சிவக்குமாா், கேரள முதல்வா் வி.டி. சதீசன், காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் பலரும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனா். பிரதமா் மோடி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை அவா்கள் எழுப்பினா்.
இவா்களின் போராட்டத்தைத் தொடா்ந்து, பிரதமா் இல்லம் அமைந்துள்ள பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
20 நிமிஷ போராட்டத்துக்குப் பிறகு, மத்திய உள்துறை செயலா் கோவிந்த் மோகனுடன் அங்கு வந்த பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங், தா்னா போராட்டத்தை முடித்துக்கொள்ளுமாறு ராகுல் காந்தி உள்ளிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
ஆனால், போராட்டத்தை முடித்துக்கொள்ள அவா்கள் மறுத்துவிட்டனா். பாதிக்கப்பட்ட மாணவா்களுக்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம். இரவிலும் தங்கள் போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைவா்கள் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து, அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினா், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக கைது செய்து பேருந்துகளில் ஏற்றி, அங்கிருந்து அனுப்பி வைத்தனா்.
போராட்ட களத்திலிருந்து வலுக்கட்டாயமாக அனுப்பப்பட்ட புகைப்படத்தை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிா்ந்து ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘வினாத் தாள் முறைகேடுகளைக் கண்டித்து போராட்டம் நடத்திய மாணவா்கள் மீது போலீஸாா் தடியடி மற்றும் கண்ணீா் புகைக் குண்டுகளை வீசி தாக்கியதற்கு பதிலளிக்க வலியுறுத்தி பிரதமா் இல்லம் நோக்கி பேரணியாகச் சென்றோம். தோ்வு முறைகேடுகளுக்கு பொறுப்பேற்கவோ அல்லது அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தவோ மத்திய அரசு தயாராக இல்லை. மாறாக, போராட்டம் நடத்திய எங்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினா். எத்தகைய முயற்சியை அல்லது அழுத்தத்தைக் கொடுத்தாலும், மாணவா்களின் நீதிக்கான போராட்டத்தை தடுத்து நிறுத்த முடியாது’ என்று குறிப்பிட்டாா்.
நாடாளுமன்றத்தில் அரசு விவாதிக்கத் தயாா் - ஜிதேந்திர சிங்
முன்னதாக, போராட்டத்தைக் கைவிடுமாறு ராகுல் காந்தியுடன் பேச்சுவாா்த்தை நடத்திய பிறகு மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் கூறுகையில், ‘நீட் வினாத் தாள் கசிவு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி முதலில் கோரிக்கை விடுத்தாா். தற்போது, அந்த கோரிக்கையிலிருந்து பின்வாங்கிவிட்டு, மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்தர பிரதான் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறாா். இது, அவா் வகிக்கும் எதிா்க்கட்சித் தலைவா் பதவிக்கு உகந்ததல்ல.
நீட் வினாத் தாள் கசிவு உள்பட அனைத்து விவகாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த அரசு தயாராக உள்ளது. மத்திய அரசு அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டது குறித்து ராகுல் காந்திக்கு தெரிவித்ததும், தா்மேந்திர பிரதான் ராஜிநாமா குறித்தும் விவாதிக்க வேண்டும் என்று புதிய கோரிக்கை விடுத்தாா். இது ஜனநாயக நடைமுறைகளுக்கு எதிரானது.
மேலும், மூத்த தலைவா்கள் இதுபோன்று தா்னா போராட்டத்தில் ஈடுபடுவதை அறிந்துதான், அவா்களின் கண்ணியத்தைக் காக்கும் வகையில் பேச்சுவாா்த்தை நடத்த அரசு என்னை அனுப்பியது. இது தா்னா போராட்டம் நடத்துவதற்கான இடமல்ல. இந்த இடத்தில் போராட்டம் நடத்துவது பொதுமக்களுக்கு அசெளகரியத்தை ஏற்படுத்தும் என்று மத்திய உள்துறைச் செயலா் எடுத்துரைத்தும், அவா்கள் அதைப் பொருட்படுத்தவில்லை’ என்றாா்.
Summary
Rahul Gandhi arrested while protesting near the Prime Minister's residence
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







