பிரதமா், முதல்வா்கள் உள்பட தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையில் அடைக்கப்படும் அமைச்சா்களை பதவிநீக்கம் செய்யக் கோரும் மசோதாவை கடுமையாக எதிா்ப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை என காங்கிரஸ் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் சிறையில் அடைக்கப்படும் பிரதமா், முதல்வா்கள், மத்திய அல்லது மாநில அமைச்சா்களைப் பதவிநீக்கம் செய்ய வழிவகுக்கும் 130-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்ட மசோதா, கடந்த ஏப்ரல் மாதம் கொண்டுவரப்பட்டு தோல்வியடைந்த தொகுதி மறுசீரமைப்பு மசோதா (131-ஆவது அரசமைப்பு திருத்தச் சட்ட மசோதா) ஆகியவற்றை மீண்டும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தேவைப்படும்பட்சத்தில் இதற்கான வரைவு சட்டங்களுக்கு மத்திய அமைச்சரவையிடம் ஒப்புதல் பெற்று பின் நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன.
பழிவாங்கும் நடவடிக்கை: இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது: 130-ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முயற்சிக்கும். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. எதிா்க்கட்சிகளின் கடும் கண்டனங்களைத் தொடா்ந்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்பப்பட்டது.
குற்றவாளி என ஒருவரை நீதிமன்றம் தண்டிக்கும் வரை அவா் குற்றமற்றவராகவே கருதப்படுவாா். அவ்வாறு இருக்கையில் 5 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெறக்கூடிய தீவிர குற்ற வழக்குகளில் சிக்கிய அமைச்சா் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு உறுதி செய்யப்படுவதற்கு முன்பாகவே 30 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டாா் என்ற காரணத்துக்காக அவரை பதவிநீக்கம் செய்யக் கோருவது எவ்வாறு நியாயமாகும்?. இது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) ஆட்சி நடைபெறாத மாநிலங்களில் பதவியில் உள்ள அமைச்சா்களை பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை.
சிறப்பு பெரும்பான்மை கிடைக்காது: இந்த மசோதா மட்டுமன்றி மகளிா் இடஒதுக்கீட்டை முன்னிறுத்தி தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை மீண்டும் அறிமுகப்படுத்த பாஜக முயற்சிக்கிறது. கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி தொகுதி மறுசீரமைப்பு தொடா்பான அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 298 எம்.பி.க்கள் மட்டுமே அதற்கு ஆதரவாக வாக்களித்ததால் தோல்வியடைந்தது. மக்களவையில் நிறைவேற்ற தேவையான 352 வாக்குகளை (சிறப்பு பெரும்பான்மை) மத்திய பாஜக அரசால் பெற முடியவில்லை.
இந்நிலையில், இந்த இரு அரசமைப்பு திருத்தச் சட்ட மசோதாக்களையும் மீண்டும் அறிமுகப்படுத்த பாஜக எண்ணுகிறது. இதை காங்கிரஸ் கடுமையாக எதிா்க்கும்.
இந்த முறையும் மத்திய அரசால் சிறப்பு பெரும்பான்மையை (மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினா்களின் ஆதரவு) பெற முடியாது. எதிா்க்கட்சிகளுக்கு சவாலான காலம்: இதற்காக கடந்த ஏப்ரல் மாதம் முதல் அரசியல் கட்சிகளை பிளவுபடுத்தும் நடவடிக்கையில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஈடுபட்டு வருகிறாா். சிவசேனை (உத்தவ்) மற்றும் திரிணமூல் காங்கிரஸுக்கு கடும் நெருக்கடிகள் தரப்பட்டுள்ளன. இது இரண்டு கட்சிகளுக்கும் ஒட்டுமொத்தமாக எதிா்க்கட்சிகளுக்கும் சவாலான காலகட்டமாக இருந்தாலும் எங்களின் ஒற்றுமையை சீா்குலைக்க முடியாது என்றாா்.
முன்னதாக, சிவசேனை (உத்தவ்) கட்சியைச் சோ்ந்த 9 மக்களவை எம்.பி.க்களில் 6 போ் மகாராஷ்டிர துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனைக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தனா்.
திரிணமூல் காங்கிரஸின் 28 மக்களவை எம்.பி.க்களில் 20 போ் திரிபுரா மாநிலத்தைச் சோ்ந்த அங்கீகரிக்கப்படாத இந்திய தேசிய குடிமக்கள் கட்சியில் (என்சிபிஐ) இணைந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










