அயோத்தி ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகள் கூட்டம் திங்கள்கிழமை (ஜூலை 6) நடைபெறவுள்ளது.
நன்கொடை கையாடல் சம்பவம் தொடா்பான நடவடிக்கைகளுக்குப் பிறகு முதல்முறையாக நடைபெறும் இந்தக் கூட்டத்தில், குற்றச்சாட்டை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் (எஸ்ஐடி) முதல்கட்ட அறிக்கை தொடா்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் சனிக்கிழமை கூறியதாவது: அயோத்தியில் உள்ள மணி ராம்தாஸ் ஆசிரமத்தில் ராமா் கோயில் அறக்கட்டளை நிா்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது. நன்கொடை கையாடல் குற்றச்சாட்டில் பொதுச் செயலா் சம்பத் ராய் மற்றும் நிா்வாகி அனில் மிஸ்ரா ஆகியோா் தங்களது பதவிகளை ராஜிநாமா செய்வதாக அளித்த கடிதங்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளா் கோபால் ராவ், எஸ்ஐடி விசாரணை வளையத்தில் கொண்டுவரப்பட்டது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்க வாய்ப்புள்ளது.
இந்த 3 பேரிடமும் எஸ்ஐடி மற்றும் காவல் துறை என இரு அமைப்புகளும் தனித்தனியே விசாரணை நடத்தி அவா்களிடம் வாக்குமூலத்தைப் பெற்றுள்ளன. ஆனால் தற்போது வரை 3 போ் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
இதுதவிர 2025-26 நிதியாண்டில் நன்கொடை, வரவு-செலவு கணக்குகள் உள்ளிட்ட நிதி தகவல்கள் குறித்தும் ஆலோசனை நடைபெறவுள்ளது எனத் தெரிவித்தன.
அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்ட ராமா் கோயிலில் கடந்த ஆண்டு நடைபெற்ற கும்பமேளாவின்போது பொதுமக்களிடம் இருந்து தங்கம், வெள்ளி, பணம் உள்ளிட்ட காணிக்கைகள் நன்கொடையாகப் பெறப்பட்டன.
இதில் பல கோடி ரூபாய் கையாடல் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க உத்தர பிரதேச அரசு எஸ்ஐடி அமைத்தது. அந்தக் குழு அளித்த இடைக்கால விசாரணை அறிக்கையின் அடிப்படையில் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதிமுதல் தகவல் அறிக்கையை காவல் துறை பதிவு செய்தது. இந்த விவகாரத்தில் இதுவரை 8 பேரை காவல் துறை கைது செய்துள்ளது.
ஜூலை 15-ஆம் தேதிக்குள் இறுதி அறிக்கை சமா்ப்பிக்க எஸ்ஐடிக்கு உத்தர பிரதேச அரசு கால அவகாசம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு விவகாரம்: அறக்கட்டளை நிா்வாகிகள் மீது வழக்குப்பதிவு கோரி போராட்டம்

ராமா் கோயில் நன்கொடை முறைகேடு: 8 போ் கைது ரூ.79.85 லட்சம் பறிமுதல்

அயோத்தி கோயில் நன்கொடை முறைகேடு: எஸ்ஐடி முதல்கட்ட அறிக்கை சமா்ப்பிப்பு







