/

சட்டவிரோத கத்திகளை விற்றதாக "பிளிங்கிட்' மீது வழக்கு

சட்டவிரோத கத்திகளை விற்றதாகக் கூறி உடனடி டெலிவரி செயலியான பிளிங்கிட் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

News image
பிளிங்கிட் நிறுவனத்தின் மீது வழக்குப் பதிவு - (கோப்புப் படம்)
Updated On :18 பிப்ரவரி 2026, 9:48 pm

தினமணி செய்திச் சேவை

நமது நிருபர்

சட்டவிரோத கத்திகளை விற்றதாகக் கூறி உடனடி டெலிவரி செயலியான பிளிங்கிட் மீது தில்லி காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: பிளேடு அளவு மற்றும் விவரக் குறிப்புகளை ஒழுங்குபடுத்தும் அரசு அறிவிப்புகளை மீறிய விற்பனைக்கு கிடைத்த 50 கத்திகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

அதிகபட்ச பிளேடு நீளம் 7.62 செமீ மற்றும் 1.72 செமீ அகலம் வரை உள்ள பொருள்கள் விதிகளின்படி அனுமதிக்கப்படுகின்றன. அதற்கு மேல் உள்ள எதுவும் சட்டவிரோதமானது. இந்த விஷயத்தில் பிளிங்கிட்டிடமிருந்து உடனடி பதில் எதுவும் கிடைக்கவில்லை.

பரிந்துரைக்கப்பட்ட விவரக்குறிப்புகளை மீறிய கத்திகள் இணைய தளத்தின் மூலம் விற்கப்படுவதை போலீஸார் கண்டறிந்ததை அடுத்து பிப்.14- ஆம் தேதி ஆயுதச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆய்வு செய்தபோது, டெலிவரி செயலி மூலம் "ஸ்டான்லி கத்தி' ஒன்றை ஆர்டர் செய்ய முடியும் என்று கண்டறியப்பட்டது.

சரிபார்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாக, போலீஸôர் ஒரு ஆர்டரை வழங்கி, விநியோகத்திற்குப் பிறகு கத்தியை ஆய்வு செய்தனர். கத்தி கைமுறையாக மடிக்கக் கூடியதாகவும், அனுமதிக்கப்பட்ட பரிமாணங்களை மீறியதாக உள்ளதும் கண்டறியப்பட்டது. இந்த கத்தி 8 சென்டிமீட்டர் நீளமும் 2.5 சென்டிமீட்டர் அகலமும் கொண்டது.

இது சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது. இதைத் தொடர்ந்து, வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது. பிப்.15- ஆம் தேதி தில்லி முழுவதும் செயலி மூலம் இணைக்கப்பட்ட பல கடைகளில் போலீஸ் குழுக்கள் சோதனைகளை நடத்தி, 16 சட்டவிரோத கத்திகளை பறிமுதல் செய்தன.

பிப்.16- ஆம் தேதி போலீஸார் இந்த நடவடிக்கையை விரிவுபடுத்தி, குருகிராமின் ஃபரூக்நகரில் அமைந்துள்ள ஒரு கிடங்கில் சோதனையிட்டனர். அங்கு மேலும், 32 சட்டவிரோத கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன. மொத்தம் பறிமுதல் செய்யப்பட்ட கத்திகள் 50 ஆக இருந்தது.

விநியோகச் சங்கிலிகள், கொள்முதல் ஆதாரங்கள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருள்களை சேமித்து வைப்பதற்கும் விநியோகிப்பதற்கும் பொறுப்பான தனிநபர்களின் பங்கு குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.