/

திருமணமாகி 5 மாதங்கள்! வங்கி பெண் ஊழியர் கழுத்தறுத்துக் கொலை! அதிர்ச்சிதரும் காரணம்

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வங்கி பெண் ஊழியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 18 மணி நேரத்தில் குற்றவாளி கைதானது எப்படி?

News image
வங்கிப் பெண் ஊழியர் கொலை
Updated On :18 பிப்ரவரி 2026, 7:03 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டம், பஹதுர்கார் பகுதியில், கழுத்தறுக்கப்பட்ட நிலையில், வங்கியின் பெண் ஊழியர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் 18 மணி நேரத்தில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மனைவியின் நடத்தை மீது தொடர்ந்து சந்தேகம் அடைந்த கணவர், மனைவியைக் கொன்றுவிட்டு, கொள்ளைக்காக கொலை நடந்தது போல நாடகமாகியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

27 வயதான வங்கி பெண் ஊழியர் மஹக், குர்கானில் இயங்கி வரும் தனியார் வங்கி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கும் கணக்குத் தணிக்கையாளரான அன்சுல் தவானுக்கும் கடந்த 2025ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில்தான் திருமணமாகியிருக்கிறது.

திருமணமாகி வெறும் 5 மாதங்களுக்குள் இந்த கொலை நடந்துள்ளது. பிப். 15ஆம் தேதி மனைவியை காரில் தொலை தூரம் அழைத்துச் செல்வதாகக் கூறி அன்சுல் சென்றுள்ளார். அவர்கள் புறப்பட்ட 4 மணி நேரத்துக்குள் அன்சுல் காவல்துறைக்கு போன் செய்து, ஒரு கொள்ளைக் கும்பல் மனைவியைக் கொன்றுவிட்டு பொருள்களைக் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாகக் கூறியுள்ளார்.

விரைந்து சென்ற காவல்துறை மஹக்கின் உடலைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்கு அனுப்பிவிட்டு விசாரணையைத் தொடங்கினர்.

அன்சுலிடம் சம்பவம் நடந்தது பற்றி காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டு விசாரணையின் கோணம் மாற்றப்பட்டது. இறுதியில் அன்சுல் மனைவியைக் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

மனைவி மீது சந்தேகம் இருந்ததாகவும், அவ்வப்போது இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படும் என்றும் சம்பவத்தன்றும் வாக்குவாதம் முற்றியதில், மனைவியைக் கழுத்தை நெறித்துக் கொன்றுவிட்டு, கத்தியால் கழுத்தை அறுத்துவிட்டு கொள்ளை நடந்தது போல நாடகமாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கொலை நடந்தபோது மஹக் கர்ப்பிணியாக இருந்தார் என்று அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.