/

பெங்களூரில் பெரும் விபத்து! வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி 7 பேர் பலி

பெங்களூரில் கொடூர விபத்தில் வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதியதில் 7 பேர் பலியாகினர்.

News image
கவிழ்ந்துபோன டிரக்- பிடிஐ
Updated On :13 பிப்ரவரி 2026, 10:20 am

இணையதளச் செய்திப் பிரிவு

பெங்களூரில் இன்று அதிகாலை வேகமாக வந்த வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதிய விபத்தில் 7 பேர் பலியானதாகத் தகவல்கள தெரிவிக்கின்றன.

டொப்பாஸ்பெட் - ஹோஸ்கோட் நகர வட்டச் சாலையில் இரண்டு சொகுசு கார்கள், டிரக் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் ஒன்று மீது ஒன்று அடுத்தடுத்து மோதியதில் வாகனங்களில் இருந்த 7 பேர் பலியாகியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை 5.15 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்தில் சிக்கியவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹோஸ்கோடேவிலிருந்து தேவனஹல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த வாகனங்கள்தான் இந்த விபத்தில் சிக்கியிருக்கின்றன. முதலில் சொகுசு கார் ஒன்று அதிவேகமாகச் சென்று மோட்டார் சைக்கிள் மீது மோதி பிறகு டிரக் மீது மோதியிருக்கிறது.

இதில், மோட்டார் சைக்கிளில் வந்த 26 வயது ககன் என்பவர் மரணமடைந்தார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர், இரவுப் பணி முடிந்து வீடு திரும்பும்போது விபத்தில் சிக்கி பலியானார். சொகுசு காரில் வந்த ஆறு பேரும் கல்லூரி மாணவர்கள் என்றும், பொழுதுபோக்குக்காக காரில் வந்த போது விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியாகியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சொகுசு கார், எந்த விதமான வாகனம் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு உருகுலைந்து நிற்கிறது.

கார் மோதிய வேகத்தில் டிரக்கின் பின்பக்க டயர் தனியாக உடைந்து அடுத்தப் பக்கத்தில் இருந்த சாலையில் விழுந்துள்ளது. இந்த டயர் மோதியதில், மற்றொரு கார் ஒன்றும் விபத்தில் சிக்கியது.

விபத்தில் சிக்கிய வாகனங்களால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிரேன்கள் வந்து வாகனங்களை அப்புறப்படுத்திய பிறகே ஓரளவுக்கு நிலைமை சீரானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.