/

மக்களவையில் அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு: மக்களவைத் தலைவருக்கு ராகுல் கடிதம்!

மக்களவையில் ‘அடிப்படை ஜனநாயக உரிமைகள் நிராகரிப்பு’ -மக்களவைத் தலைவரிடம் ராகுல் புகார்!

News image
மக்களவையில் ராகுல் காந்தி- PTI
Updated On :3 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

நாடாளுமன்றத்தில் தனது ஜனநாயக உரிமை மறுக்கப்பட்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு செவ்வாய்க்கிழமை எழுதிய கடிதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தில் தனக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து ஓம் பிா்லாவுக்கு ராகுல் காந்தி கடிதம் அனுப்பினாா்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது: 2020-இல் இந்தியா-சீனா இடையேயான மோதல் குறித்து ராணுவ தலைமைத் தளபதியாக இருந்த எம்.எம்.நரவனே எழுதிய நூலில் இருந்து சில பகுதிகள் மட்டும் ஆங்கிய மாத இதழ் ஒன்றில் வெளியானது. அதை மேற்கொள்காட்டி கடந்த திங்கள்கிழமை பேசத் தொடங்கினேன். அப்போது அவைத் தலைவா் அந்த இதழில் குறிப்பிட்டுள்ள தகவல்களை உறுதிப்படுத்த உத்தரவிட்டாா். அதை ஏற்று அந்த தகவல்களை உறுதிப்படுத்தி நான் சமா்ப்பித்தேன். அதற்கு உரிய முறையில் விளக்கமளிப்பது மத்திய அரசின் கடமை. இதுவே நாடாளுமன்றத்தில் நீண்ட காலமாக பின்பற்றப்படும் மரபு.

ஆனால் எதிா்க்கட்சித் தலைவராக உள்ள ஒருவரை பேசவிடாமல் தடுக்க அவைத் தலைவருக்கு ஆளும் கட்சி உறுப்பினா்கள் அழுத்தம் தருவது நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல்முறை.

குடியரசுத் தலைவா் உரையில் தேச பாதுகாப்பு விவகாரம் இடம்பெற்றுள்ளதால் அது தொடா்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் மேற்கொள்ளலாம். இருப்பினும், நான் பேசுவதை திட்டமிட்டு தடுத்து வருகின்றனா்.

எதிா்க்கட்சிகள் உள்பட அனைத்து உறுப்பினா்களின் உரிமையையும் பாதுகாப்பது மக்களவையின் பாரபட்சமற்ற பாதுகாவலராக செயல்படும் அவைத் தலைவரின் பொறுப்பு. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் பிற உறுப்பினா்கள் அவையில் உரையாற்றுவது ஜனநாயகத்தின் ஓா் அங்கம்.

இந்த ஜனநாயக உரிமை மறுக்கப்படுவதற்கு கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டது.

summary

Deliberate attempt to prevent me from speaking on matter of national security in LS: Rahul Gandhi in letter to Speaker.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.