மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்காததால் தோல்வியடைந்தது.
மக்களவை மற்றும் பேரவைகளில் 33 சதவிகித மகளிர் இடஒதுக்கீட்டை 2029 ஆம் ஆண்டுமுதல் அமலாக்கவும், அதற்கு ஏற்றவகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 543-லிருந்து 850 வரை அதிகரிக்கவும் வகை செய்யும் அரசமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா உள்பட மூன்று மசோதாக்களை அறிமுகம் செய்து, விவாதித்து நிறைவேற்றும் நோக்கில் சிறப்பு அமர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள்தொகையின் அடிப்படையில் தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மகளிர் இடஒதுக்கீட்டின் பின்னணியில், மத்திய அரசு முன்மொழிந்த தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைக் காட்டின.
குறிப்பாக, மக்கள்தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய தென்மாநிலங்களின் முக்கியமாக தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக்கூடும் என தமிழக முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின் உள்பட பலர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இந்தச் சிறப்பு அமர்வு நேற்று காலை தொடங்கிய நிலையில், கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் மத்திய சட்டத்துறை மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்டவற்றை தாக்கல் செய்தார்.
ஆளும் தரப்பிலும் எதிர்க்கட்சிகள் தரப்பிலும் பலர் தங்கள் கேள்விகளையும் கடுமையான வாதங்களையும் முன்வைத்தனர். இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பேசினர். இந்த விவாதம் நேற்றிரவு சுமார் 1 மணி வரை நீடித்தது.
அதைத் தொடர்ந்து இன்றும் விவாதம் தொடர்ந்தது. இன்றைய விவாதத்தில் காங்கிரஸின் சசி தரூர், திமுக எம்.பி. கனிமொழி, சமாஜவாதியின் டிம்பிள் யாதவ், ஷிரோமணி அகாலி தளம் எம்.பி. ஹர்சிம்ரத் கௌர் பாதல், திமுக எம்.பி. ஆ. ராசா, காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி, பாஜக எம்.பி. ஹேமமாலினி, ஐக்கிய ஜனதா தளம் எம்.பி. ராஜிவ் ரஞ்சன் சிங், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி, தெலுங்கு தேசம் கட்சி எம்.பி. ஸ்ரீகிருஷ்ண தேவராயலு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர். எம்பிக்களில் பலர் மசோதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை நிறைவேற்ற ஆதரவளிக்க வேண்டும் என்று அமித் ஷா உள்ளிட்டோர் வலியுறுத்த அதற்கான பாதிப்புகள் குறித்து ராகுல் உள்ளிட்டோர் எதிர்க்கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா, தொகுதி மறுவரையறை திருத்த மசோதா உள்ளிட்ட வாக்கெடுப்பு இன்று (ஏப்.17) மாலை நடைபெற்றது. இதில், மொத்தமாக 489 மக்களவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 528 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர். மசோதாவிற்கு ஆதரவாக 298 உறுப்பினர்கள் வாக்களித்த நிலையில், 230 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு எதிராக வாக்களித்தனர்.
மத்திய பாஜக அரசு, மக்களவையில் தாக்கல் செய்த மகளிர் இடஒதுக்கீடு மசோதா மற்றும் தொகுதி மறுவரையறை மசோதாவை நிறைவேற மூன்றில் இரண்டு பங்கான 352 வாக்குகள் தேவை என்ற நிலையில், 298 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால், இந்த மசோதா தோல்வியடைந்தது.
மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, தோல்வியடைந்த மசோதாவைத் திரும்பப் பெற்றதைத் தொடர்ந்து, மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Summary
The Lok Sabha on Friday rejected a bill that sought to fast-track the implementation of women's reservation and carry out delimitation without conducting a fresh Census.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மோடியின் அகந்தை தோற்கடிக்கப்பட்டது: ரேவந்த் ரெட்டி
மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்: மக்களவையில் அமித் ஷா பதிலுரை
அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

