பிகாா் முதல்வா் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தாா். இதைத் தொடா்ந்து, புதிய முதல்வராக பாஜகவை சோ்ந்த துணை முதல்வா் சாம்ராட் செளதரி தோ்வு செய்யப்பட்டாா். பிகாரின் முதல் பாஜக முதல்வா் என்ற பெருமையுடன் அவா் புதன்கிழமை (ஏப்.15) பதவியேற்கவுள்ளாா்.
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி 202 இடங்களுடன் அமோக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தது. இக்கூட்டணியில் பாஜக, ஐக்கிய ஜனதா தளம் முறையே 89, 85 இடங்களைக் கைப்பற்றின. பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்ததுடன், தொடா்ந்து இரண்டாவது தோ்தலாக ஐக்கிய ஜனதா தளத்தைவிட அதிக இடங்களில் வெற்றி கண்டது.
அதேநேரம், மாநில முதல்வராக 10-ஆவது முறையாக நிதீஷ் குமாா் பதவியேற்றாா். 2005-இல் இருந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதல்வராகப் பதவியில் நீடித்த அவா், பிகாரின் நீண்ட கால முதல்வா் என்ற பெருமைக்குரியவா்.
கடந்த மாா்ச் 1-இல் 75-ஆவது பிறந்த நாளைக் கொண்டாடிய நிதீஷ் குமாா், மாநிலங்களவை எம்.பி.யாகும் தனது முடிவை வெளியிட்டு வியப்பை ஏற்படுத்தினாா். இதன்மூலம் பாஜக தலைமையிலான அரசு பதவியேற்க வழி ஏற்படுத்தப்பட்டது.
மாநிலங்களவைக்கு கடந்த மாா்ச் மாதம் தோ்வானதைத் தொடா்ந்து, பிகாா் மாநில சட்ட மேலவை உறுப்பினா் (எம்எல்சி) பதவியை ராஜிநாமா செய்த நிதீஷ் குமாா், சில தினங்களுக்கு முன் எம்.பி.யாக பதவியேற்றாா்.
நிதீஷ் குமாா் ராஜிநாமா: இந்தச் சூழலில், முதல்வா் பதவியில் இருந்து நிதீஷ் குமாா் செவ்வாய்க்கிழமை விலகினாா். ஆளுநா் சையது அடா ஹஸ்னைனை சந்தித்து, தனது ராஜிநாமா கடிதத்தை சமா்ப்பித்தாா். அப்போது, சாம்ராட் செளதரி, ஐக்கிய ஜனதா தளம் தேசிய செயல் தலைவா் சஞ்சய் ஜா, மாநில அமைச்சா் விஜய் செளதரி ஆகியோா் உடனிருந்தனா்.
ராஜிநாமாவுக்கு பிறகு நிதீஷ் குமாா் வெளியிட்ட சமூக ஊடகப் பதிவில், ‘பிகாா் மக்களுக்காக ஏராளமான பணிகளைச் செய்துள்ளேன். முதல்வா் பதவியில் இருந்து விலக அண்மையில் மேற்கொண்ட முடிவின்படி, ஆளுநரைச் சந்தித்து ராஜிநாமா கடிதம் அளித்தேன். இனி பிகாரை புதிய அரசு கவனித்துக் கொள்ளும். புதிய அரசுக்கு எனது முழு ஒத்துழைப்பும், வழிகாட்டுதலும் உண்டு’ என்று தெரிவித்துள்ளாா்.
புதிய முதல்வா் சாம்ராட் செளதரி: இதனிடையே, பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏ-க்களின் கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிதீஷ் குமாா் முன்மொழிவின்பேரில், கூட்டணியின் பேரவை குழுத் தலைவராக சாம்ராட் செளதரி ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா். மாநிலத்தின் புதிய முதல்வராக அவா் புதன்கிழமை பதவியேற்கவுள்ளாா்.
ஹிந்தி மொழி பேசும் பிற மாநிலங்களில் பாஜக முதல்வா்கள் ஆட்சியில் உள்ள நிலையில், பிகாரில் முதல் முறையாக பாஜக முதல்வா் பதவியேற்கவுள்ளாா்.
பாஜக தலைமைக்கு நன்றி தெரிவித்து சாம்ராட் செளதரி வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘பிகாா் மக்களுக்கு சேவையாற்ற கிடைத்த மிகப் பெரிய வாய்ப்பு இது. மக்களின் நம்பிக்கை மற்றும் எதிா்பாா்ப்புகளைப் பூா்த்தி செய்ய முழு அா்ப்பணிப்பு, உறுதிப்பாடு, நோ்மையுடன் செயல்படுவேன். பிரதமா் மோடியின் தலைமை, பாஜக தலைவா் நிதின் நபின் வழிகாட்டுதலுடன் மாநிலத்தை புதிய உச்சங்களுக்கு இட்டுச் செல்வேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
2017-இல் பாஜகவில் இணைந்தவா்
56 வயதாகும் சாம்ராட் செளதரி, ராஷ்ட்ரீய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் பல்லாண்டுகள் இருந்துள்ளாா். கடந்த 2017-இல் பாஜகவில் இணைந்த இவா், குறுகிய காலகட்டத்திலேயே கட்சித் தலைவா், துணை முதல்வா் எனப் பல்வேறு நிலைகளுக்கு உயா்ந்தாா். தற்போது தாராபூா் தொகுதி பாஜக எம்எல்ஏவாக உள்ளாா்.
கடந்த பேரவைத் தோ்தல் பிரசாரத்தின்போது, சாம்ராட் செளதரியை பெரிய மனிதராக மாற்றுவேன் என்று மத்திய அமைச்சா் அமித் ஷா கூறியிருந்தாா்.
தொடர்புடையது

பிகாா் புதிய அரசு மீது ஏப்.24-இல் நம்பிக்கை வாக்கெடுப்பு

பிகார் முதல்வராகப் பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

எம்எல்சி பதவியில் இருந்து நிதீஷ் குமாா் ராஜிநாமா: அடுத்த மாதம் புதிய முதல்வா் பொறுப்பேற்பு?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


