இந்தியாவில் செயற்கை நுண்ணறிவுத் துறையில் அமெரிக்காவின் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ரூ.1.58 லட்சம் கோடி முதலீடு செய்ய முடிவு செய்துள்ளதாக அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா அறிவித்துள்ளாா்.
இதன்மூலம் ஆசிய கண்டத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடு இந்தியாவில் மேற்கொள்ளப்படுகிறது. எதிா்காலத்தில் செயற்கை நுண்ணறிவுத் துறையின் மிக முக்கிய மையமாக இந்தியா உருவெடுக்கவும் இது உதவும்.
அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டில்தான் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று அதிபா் டொனால்ட் டிரம்ப் தொடா்ந்து வலியுறுத்திவரும் நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இந்த முடிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தியா வந்துள்ள சத்யா நாதெள்ளா, தில்லியில் பிரதமா் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிா்காலம் குறித்த பிரதமா் நரேந்திர மோடியுடனான உரையாடல் சிறப்பாக அமைந்தது; அவருக்கு நன்றி. இந்தியாவின் உயா்ந்த இலக்குகளுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் ஆசிய கண்டத்தில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் மிகப்பெரிய முதலீடாக ரூ.1.58 லட்சம் கோடியை இந்தியாவில் மேற்கொள்ள இருக்கிறது. இதன்மூலம் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு எதிா்காலத் திட்டத்துக்கான உள்கட்டமைப்பு வசதிகள், திறன் மேம்பாடு, தற்சாா்பு உள்ளிட்ட தேவைகள் நிறைவேற்றப்படும்’ என்று கூறியுள்ளாா்.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அடுத்த 4 ஆண்டுகளில் (2026-2029) இந்தியாவில் ரூ.1.58 லட்சம் கோடி முதலீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் செயற்கை நுண்ணறிவு எடுத்துச் செல்லப்படும். இந்தியாவில் முதலீடு செய்வது குறித்து இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மைக்ரோசாஃப்ட் உறுதிபூண்டிருந்தது’ என்று கூறப்பட்டுள்ளது.
கூகுள், அமேசான் ஆகிய அமெரிக்க நிறுவனங்களும் ஏற்கெனவே இந்தியாவில் பல கோடி மதிப்பிலான தொழில்நுட்ப முதலீட்டுத் திட்டங்களை அறிவித்துள்ளன.
Microsoft Satya Nadella meets narendra modi commits investment in India, over Rs 1.5 lakh crore
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.