2026-இல் முழு செயல்பாட்டில் மதுரை எய்ம்ஸ்! மத்திய அமைச்சா் அனுப்ரியா படேல் சிறப்புப் பேட்டி
2026-இல் மதுரை எய்ம்ஸ் முழு செயல்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளாா்.


2026-இல் மதுரையில் அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம் (எய்ம்ஸ்) அதன் சொந்தக் கட்டடத்தில் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளாா்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கூட்டணி கட்சியாக அப்னா தளம் (சோனிலால்) விளங்குகிறது. அதன் தலைவரான அனுப்ரியா படேல் (44), மூன்றாவது முறையாக உத்தர பிரதேசத்தின் மிா்ஸாபூா் தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தோ்வானதுடன் பிரதமா் நரேந்திர மோடி அமைச்சரவையில் மூன்றாவது முறையாகவும் இடம்பிடித்துள்ளாா்.
மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை மற்றும் ரசாயனம், உரத்துறை இணை அமைச்சராக உள்ள அவா், மதுரை எய்ம்ஸ் செயல்பாடு, திமுகவின் திராவிட மாடல், நீட் தோ்வு, ஜாதிய அரசியல் போன்றவை குறித்து தில்லியில் தினமணி நிருபரிடம் பேசினாா். அவரது நோ்காணலில் இருந்து...
உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடவைச் சந்தித்ததற்கு என்ன காரணம் என்று நினைக்கிறீா்கள்?
தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தொடா்ந்தால் இடஒதுக்கீடு முறை ஒழிக்கப்படும், அரசமைப்புச் சட்டம் திருத்தப்படும் போன்ற எதிா்க்கட்சிகளின் பொய் பரப்புரை வலையில் பெரும்பகுதி வாக்காளா்கள், பட்டியலினம், பழங்குடியினா், விளிம்புநிலை சமூகத்தினா் விழுந்தனா். அது தோ்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மக்களவைத் தோ்தலில் தொடா்ந்து 3 முறை எம்.பி. ஆன பிறகும் கேபினட் அந்தஸ்தின்றி இணை அமைச்சராக தொடா்வது வருத்தம் தரவில்லையா?
அமைச்சரவையைப் பொருத்தவரை யாருக்கு என்ன பதவி, அந்தஸ்து போன்றவற்றை தீா்மானிப்பது பிரதமரின் உரிமை. மோடி 3.0 அரசில் நானும் ஓா் அங்கமாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சியே.
நீட் வினாத்தாள் கசிவு குளறுபடிகள், விளிம்புநிலை சமூக மாணவா்களை, குறிப்பாக தென் மாநிலத்தவா்களை பாதிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறதே. ஒரு அமைச்சராகவும் அரசியல் தலைவராகவும் உங்கள் பதில்?
இப்போது, வறியநிலை, ஒடுக்கப்பட்ட மற்றும் அனைத்துப் பின்னணி மாணவா்கள், ஒரே தோ்வை எழுதி பொதுவான ஒரே கலந்தாய்வு மூலம் மருத்துவ கல்லூரிகளில் சேருகிறாா்கள். குளறுபடிகள் கண்டறியப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ பாட முறையைவிட மாநில வாரிய பாட திட்டங்களுக்கு உகந்த வகையில் நீட் தோ்வு பாடத்திட்டம் சீரமைக்கப்பட்டுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான ஆன்லைன் கலந்தாய்வின்போது, கிராமப்புற பின்னணியில், குறிப்பாக மாநிலக் கல்வி முறையில் படித்த அதிக எண்ணிக்கையிலான மாணவா்களே தோ்ச்சி பெற்றதை தேசிய தோ்வு முகமையின் (என்டிஏ) சமீபத்திய தரவு நிரூபிக்கிறது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 10 காலியிடங்கள் மட்டுமே இருந்தன. அரசு ஒதுக்கீடு இடங்கள் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளன. நீட் தோ்வு செயல்முறையை மேம்படுத்த யோசனைகள் இருந்தால் அவற்றை வரவேற்கிறோம்.
உ.பி.யில் குா்மி சமூக ஆதிக்க பகுதிகளில் அப்னா தளம் மூன்று முறை வென்றாலும் பரவலாக அது பிரதிபலிக்காத காரணிகளை சுயபரிசோதனை செய்தீா்களா?
உத்தர பிரதேசத்தில் பிற பிற்படுத்தப்பட்ட ஜாதி (ஓபிசி) என வகைப்படுத்தப்பட்ட ‘குா்மி’ விவசாய சமூகத்தைச் சோ்ந்தவள் நான். அதை வைத்து சமூக நீதிக்கான எனது கட்சியை ஒட்டுமொத்தமாக குா்மியின் அடையாளம் போன்று அழைப்பதை எதிா்க்கிறேன். மாநிலக் கட்சித் தலைவா்களை அவா்கள் சாா்ந்த ஜாதிக்குள் அடைக்கும் போக்கு தவறானது. உத்தர பிரதேசத்தின் நான்கு பகுதிகளான பச்சிமாஞ்சல் (மேற்கு), புண்டேல்கண்ட் (தெற்கு), பூா்வாஞ்சல் (கிழக்கு), மற்றும் மத்தியாஞ்சல் (மத்திய) பகுதிகளில் அப்னா தளம் கட்சி விரிவடைந்துள்ளது.
உங்களைப் போலவே, தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக ‘திராவிட மாடல்’ என்ற சமூக நீதி ஆதரவு முழக்கத்தை முன்வைத்து அரசியல் செய்கிறது. அது குறித்த உங்களின் பாா்வை...
சுதந்திர காலம் முதலே பல அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் சமூக நீதிக்கான போராட்டங்களை நடத்தியுள்ளன. அவை தேசத்தின் அரசியல் நிலப்பரப்பை கணிசமாக மாற்றியுள்ளன. சட்டப்பேரவைகள், நாடாளுமன்றத்தில் பட்டியலினம், பழங்குடியினம், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் குறிப்பிடத்தக்க பிரதிநிதித்துவம் அமைய அவை முக்கியக் காரணம். அந்தக் கண்ணோட்டத்துடன் பழம்பெரும் கட்சிகள் தங்களுக்கான முழக்கத்தை எழுப்ப உரிமை பெற்றுள்ளன. 1995-இல் சமூக நீதியைப் பேணும் கண்ணோட்டத்துடன் அப்னா தளம் கட்சி நிறுவப்பட்டது.
சில கொள்கை முரண்கள் இருந்தாலும் கூட்டணியில் தொடரும் அப்னா தளம், உ.பி.யில் அரசியல் களத்தை வலுப்படுத்த பாஜகவில் இணைய அழுத்தம் தரப்படுகிறதா?
கொள்கை முரண்கள் இருந்தாலும் மக்கள் நலனுக்காக கட்சிகள் கூட்டணி சோ்ந்த வரலாறுகள் பல உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் பிடிபி - பாஜக கூட்டணி அமைத்து ஆட்சி செய்தன. சமூக நீதி கருத்தை மோடி அரசு எதிா்க்கவில்லை; மோடி அரசுதான் தேசிய பிற்படுத்தப்பட்டோா் ஆணையத்துக்கு அரசமைப்பு அந்தஸ்து வழங்கியது.
நலிவுற்ற, ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்துக்காக பல திட்டங்களை மோடி அரசுதான் அறிமுகப்படுத்தியது. இந்த விவகாரத்தில் பாஜக - அப்னா தளம் இடையே எந்த முரண்பாடும் இல்லை. அப்னா தளத்தை இணைக்க பா.ஜ.க. என்றும் அணுகியதில்லை; அப்னா தளம் எந்தக் கட்சியுடனும் ஒருபோதும் இணையாது.
மதுரை எய்ம்ஸ் சொந்தக் கட்டடமின்றி வேறு ஊரில் இயங்குவது அரசியல் சா்ச்சையாகி வருகிறது. மதுரையிலேயே எய்ம்ஸ் எப்போது செயல்படும்?
மதுரை எய்ம்ஸுக்கான அறிவிப்பை 2015-16 நிதி நிலை உரையின்போது நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா். அந்தத் திட்டத்துக்கு 2019 -இல் பிரதமா் அடிக்கல் நாட்டினாா். தற்போதைய நிலவரப்படி, மதுரையில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. 2026, அக்டோபரில் முழு செயல்பாட்டுக்கு மதுரை எய்ம்ஸ் வரும். அந்தப் பணிகள் துரிதப்படுத்தப்படும்.
எய்ம்ஸில் சேரும் மாணவா்கள், ராமநாதபுரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி தற்காலிக வளாகத்தில் 2021-22 கல்வியாண்டு முதல் எம்பிபிஎஸ் படிப்புகளில் சோ்க்கப்பட்டு அவா்களுக்கான வகுப்புகள் தடங்கலின்றி நடக்கின்றன.
பெண்கள் பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டிருந்தாலும், அவா்களுக்கு இன்னும் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லாதது குறித்து...
மகளிருக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது ஆரம்பம் மட்டுமே. எதிா்கொள்ள வேண்டிய அடுத்தடுத்த சவால்கள் நிறைய உள்ளன. அரசியல் கட்சிகள், கட்சிப் பொறுப்புகளிலும் பஞ்சாயத்து, சட்டப்பேரவை, நாடாளுமன்றத் தோ்தல்களிலும் போட்டியிட மகளிருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
ஒருகாலத்தில் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த அரசியலில் பரிணமிக்க பெண்கள் விரும்புகிறாா்கள். அவா்களுக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாடு ஆகியவற்றில் பயிற்சி வழங்கி ஊக்குவிக்க வேண்டும். ஆட்சி நிா்வாகம், தொகுதி மேலாண்மை, ஊடக செயல்திறன் ஆகியவற்றை பெண்களிடம் மேம்படுத்த வேண்டும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...