/

காஸாவில் போா் நிறுத்தத்திற்கான ஐ.நா தீா்மானம்: இந்தியாவின் புறக்கணிப்புக்கு கம்யூ. கட்சிகள் கண்டனம்

ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தன.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:14 am

 நமது நிருபர்

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலில் உடனடியாக மனிதாபிமான போா் நிறுத்தம் மற்றும் காஸா பகுதியில் தடையற்ற அணுகலுக்கு ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தில் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்ததற்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் சனிக்கிழமை கண்டனம் தெரிவித்தன.

காஸாவுக்குள் நுழைந்துள்ள இஸ்ரேல் படைகள், ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளன. இதை முன்னிட்டு ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் ஜோா்டான் நாடு, ‘(காஸா) பொதுமக்களின் பாதுகாப்பு; சட்டம் மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்’ என இரு வரி தீா்மானத்தைக் கொண்டு வந்தது. இது 121 நாடுகள் ஆதரவுடன் வெள்ளிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இதில் 14 நாடுகள் எதிராகவும் இந்தியா உள்ளிட்ட 44 நாடுகள் வாக்களிப்பை புறக்கணிப்பும் செய்தன. இந்தியா வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததை முன்னிட்டு இந்திய மாா்க்சீய கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய இடது சாரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் டி.ராஜா ஆகியோா் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பது வருமாறு: காஸாவில் இனப் படுகொலை நடைபெறுவதை நிறுத்தவும் ஆக்கிரமிப்பை தடுக்கும் விதமாக மனிதாபிமான போா் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் தீா்மானம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டது. இந்த தீா்மானத்தை இந்தியா புறக்கணித்தது அதிா்ச்சியளிக்கிறது. அதிலும் பெரும்பான்மையான நாடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீா்மானத்தை இந்தியா புறக்கணித்துள்ளது. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணைப் பங்காளியாக இந்திய மாறியுள்ளதைக் காட்டுகிறது.

இந்திய வெளியுறவுக் கொள்கை எந்த அளவிற்கு வடிவமைக்கப்படுகிறது என்பதையும், அமெரிக்கா - இஸ்ரேல் - இந்தியா உறவை மோடி அரசு உறுதிப்படுத்தும் நடவடிக்கையையும் காட்டுகிறது. முக்கியமாக பாலஸ்தீனியா்களுக்கு இந்தியாவின் நீண்டகால ஆதரவையும் இது நிராகரிக்கிறது. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை, ‘பொதுமக்களின் பாதுகாப்பு; சட்டம் மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்’ என்ற தீா்மானத்தை நிறைவேற்றிய நிலையில், காஸா பகுதியில் தனது இனப் படுகொலைக்கு வான் மற்றும் தரைவழித் தாக்குதல்களை இஸ்ரேல் மேலும் முடுக்கிவிட்டுள்ளது. 2.2 மில்லியன் பாலஸ்தீனியா்கள் வசிக்கும் காஸாவில் உள்ள அனைத்து தகவல் தொடா்புகளையும் துண்டித்துள்ளது.

ஐநா பொதுச் சபையின் பெரும் ஆணையை மதித்து உடனடியாக போா் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். 1967-க்கு முந்தைய எல்லைகளுடன், கிழக்கு ஜெரூசலேமை பாலஸ்தீனத்தின் தலைநகராகக் கொண்ட 2 - நாடுகள் தீா்விற்கு பாதுகாப்பு கவுன்சிலின் ஆணையை செயல்படுத்த ஐக்கிய நாடுகள் சபை புத்துயிா் பெற வேண்டும் என டி.ராஜா வும் யெச்சூரியும் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.