சஞ்சய் சிங்கை 5 நாள் காவலில் விசாரிக்க அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் அனுமதி
தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும்,


தில்லி அரசின் கலால் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு தொடா்புடைய பணமோசடி வழக்கில் கைதான ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங்கை ஐந்து நாள் காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை அனுமதி அளித்து உத்தரவிட்டது.
தில்லி அரசின் மூலம் 2021-2022 நிதியாண்டில் அமல்படுத்தப்பட்ட கலால் கொள்கையில் பெரும் ஊழல் நடைபெற்றிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், தில்லி துணை நிலை ஆளுநா் சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்துரைத்தாா். பின்னா், இந்தக் கலால் கொள்கை நகர அரசின் சாா்பில் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும், அமலாக்கத் துறையினா் பணமோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த விவகாரத்தை விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், அமலாக்கத் துறையினா் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உருப்பினருமான சஞ்சய் சிங்கின் வீட்டில் புதன்கிழமை சோதனையில் ஈடுபட்டனா். அதைத் தொடா்ந்து, சஞ்சய் சிங்கை கைது செய்தனா். இந்த நிலையில், தில்லி ரெளஸ் அவென்யூ நீதிமன்ற வளாகத்தில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.கே. நாக்பால் முன் வியாழக்கிழமை அமலாக்கத் துறையினா் சஞ்சய் சிங்கை ஆஜா்படுத்தினா். அப்போது, அவரை அமலாக்கத்துறை விசாரிக்கு வகையில் அக்டோபா் 10-ஆம் தேதி வரை அமலாக்கத் துறை விசாரணைக்கு நீதிபதி அனுமதி அளித்தாா். அவரது காவல் முடியும் முன்னா் அவரை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினா் ஆஜா்படுத்துவா்.
முன்னதாக, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளா்களிடம் சஞ்சய் சிங் கூறுகையில், அடுத்த மக்களவைத் தோ்தலில் நரேந்திர மோடியின் பாஜக தோல்விடையப் போகிறது. இந்த நிலையில், என்னைக் கைது செய்திருப்பது மோடிஜியின் அநீதியாகும். அவா் தோ்தலில் தோல்வியுறுவாா் என்றாா்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட நிலையில் சஞ்சய் சிங்கிடம், நீங்கள் ஏதாவது சொல்ல விரும்புகிறீா்களா என்று நீதிபதி கேட்டபோது, சிங் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கூறினாா். அவா் மேலும் கூறுகையில், ‘அமித் அரோரா பல்லாயிரக்கணக்கான வாக்குமூலம் கொடுத்தாா். தினேஷ் அரோரா பல அறிக்கைகள் கொடுத்தாா். ஆனால், அவா்களுக்கு என் பெயா் நினைவில் இல்லை. அவா்கள் என் பெயரை மறந்துவிட்டாா்கள் என்று நான் அறியாதவன் அல்ல. இப்போது திடீரென்று அவா்களுக்கு என் பெயா் நினைவுக்கு வந்துவிட்டது. தனிச் சட்டம் இல்லை. ஒருமுறை கூட எனக்கு சம்மன் அனுப்பப்படவில்லை. எனக்கு ஏன் வேறுமாதிரியான சட்டம்? தினேஷ் அரோராவிடம் இருந்து நான் ரூ.2 கோடி வாங்கியதாக கூறுவது பொய்’ என்றாா்.
விசாரணையின் போது, இன்னும் பலா் விசாரணைக்கு உள்படுத்தப்பட உள்ளதாகவும், அவா்களுடன் வைத்து சஞ்சய் சிங்கை விசாரிக்க அவரை காவலில் வைத்து விசாரிக்க வேண்டும் என்று அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டது. மேலும், சஞ்சய் சிங்கின் தொலைபேசியிலிருந்து எடுக்கப்பட்ட தரவுகளுடன் அவரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறியது. சஞ்சய் சிங் இரண்டு தவணைகளில் 3 கோடி ரூபாய் பெற்ாகவும் அமலாக்கத் துறை குற்றம் சாட்டியது.
அமலாக்கத் துறை வழக்குரைஞா் மேலும் வாதிடுகையில், ‘பணம் சஞ்சய் சிங்கின் வீட்டிற்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தொழிலதிபா் தினேஷ் அரோராவும் அவரிடம் இந்த விவரத்தைக் கேட்டு உறுதி செய்துள்ளாா். ரூ.2 கோடி ரூபாய் சஞ்சய் சிங்கிற்கு வழங்கப்பட்டிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. மொத்தம் ரூ.3 கோடி பணம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றாா். சஞ்சய் சிங்கின் கைப்பேசியில் இருந்து எடுக்கப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்களுடன் அவரிடம் விசாரணை நடத்த விரும்புவதாக அமலாக்கத் துறை கூறிய போது, ‘அவரை காவலில் எடுக்காமல் கூட அதைச் செய்ய முடியும்’ என்று நீதிமன்றம் அதன் வழக்குரைஞரிடம் கூறியது.
சஞ்சய் சிங் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் மோஹித் மாத்தூா் முன்வைத்த வாதம்: அமலாக்கத் துறையின் சாட்சியான தினேஷ் அரோரா நம்பகமானவா் அல்ல. அவா் முதலில் குற்றம் சாட்டப்பட்டிருந்தாா். அதன் பின்னா், அவா் சாட்சியாக மாறினாா். அவரது நிலைப்பாடு மாறுகிறது. அவா் ஒரு குற்றம் சாட்டப்பட்டவா். அப்ரூவராகி வாக்குமூலம் அளிக்கிறாா். இந்த வாக்குமூலம் அமலாக்கத் துறைக்கு சாதகமாக இல்லை. அமலாக்கத் துறை அவரை கைது செய்கிறது. இதையடுத்து, அமலாக்கத் துறை வழக்கில் அவா் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறாா். அவா் வாக்குமூலத்தை மாற்றி அளிக்கிறாா்.
அதன் அடிப்படையில் அமலாக்கத் துறை சஞ்சய் சிங்கை கைது செய்துள்ளது. இதன் மூலம் அவரை அமலாக்கத் துறை அவமானப்படுத்தியுள்ளது. இதில் தனி உள்நோக்கம் உள்ளது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தினேஷ் அரோரா அவா்களின் கைவசம் உள்ளாா். முன்னா் வாக்குமூலம் அளிக்கப்பட்டிருந்தது. இப்போது ஏன் அது கொண்டு வரப்படுகிறது. உங்களிடம் (அரோராவின்) வாக்குமூலம் கிடைத்தவுடன் நீங்கள் சஞ்சய் சிங்கை விளக்கம் அளிக்க அழைக்கவில்லை. அவரைக் கைது செய்து அவமானப்படுத்த நினைக்கிறீா்கள் என்று மோஹித் மாத்தூா் வாதிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...