இந்தியாவில் பசுமை எரிசக்தித் துறையில் அபரிமித வாய்ப்பு: முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நாடாக இந்தியாவை திகழச் செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கிய பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது;


புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் முன்னணி நாடாக இந்தியாவை திகழச் செய்வதற்கு மத்திய நிதிநிலை அறிக்கையில் முக்கிய பங்களிப்பு அளிக்கப்பட்டுள்ளது; உலகில் உள்ள அனைத்து பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் இந்தியாவில் முதலீடு செய்ய அபரிமித வாய்ப்பு உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
மேலும் இத்துறையில் முதலீடு செய்ய வருமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மத்திய நிதிநிலை அறிக்கை 2023-24 இல் அறிவிக்கப்பட்ட முன்னெடுப்புகளை திறம்பட அமல்படுத்துவதற்கும் கருத்துக்களை பெறவும் 12 விதமான கருப்பொருள்களில், பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையக் கருத்தரங்களை வரும் மார்ச் 11 -ஆம் தேதி வரை மத்திய நிதியமைச்சகம் நடத்துகிறது.
இதில், முதல் நாளாக பசுமை வளர்ச்சி குறித்த இணையக் கருத்தரங்கில் பிரதமர் மோடி வியாழக்கிழமை பேசியதாவது:
பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்திற்கு 3 அடிப்படை பொருளாதாரத் தூண்களை அரசு ஏற்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் உற்பத்தியை அதிகரித்தல், புதைபடிம எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்தல், எரிவாயு அடிப்படையாகக் கொண்ட எரிசக்தி அதிகரித்தல் என 3 பொருளாதாரத்தை அதிவிரைவாக எடுத்துச் செல்லப்பட்டு வருகிறது. 2014-ஆம் ஆண்டுக்குப் பிறகு புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறனில் இந்தியா வேகம் பெற்று வருகிறது.
புதுப்பிக்கத்தக்க மரபுசாரா எரிசக்தி வளங்களில் நிர்ணயிக்கப்பட்ட 9 ஆண்டுகளுக்கு முன்பாகவே, மின் திறனில் புதைப்படிவமற்ற எரிபொருளில் இலக்கை அடைந்து 40 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளோம். இதே போன்று, நிர்ணயிக்கப்பட்ட இலக்கிற்கு 5 மாதங்களுக்கு முன்பாகவே பெட்ரோலில் 10 சதவீத எத்தனாலைக் கலக்கும் இலக்கையும் நாடு எட்டியுள்ளது.
2025-26-ஆம் ஆண்டுக்குள்ளேயே பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கையும் நாடு அடைந்துவிடும். இது 2030-ஆம் ஆண்டு என முன்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
2030-ஆம் ஆண்டுக்குள் 500 ஜிகாவாட் புதைப்படிவமற்ற எரிபொருள் திறனை நாடு பெற்றுவிடும்.
இந்தியாவின் சூரிய சக்தி, காற்று, உயிரி எரிவாயு ஆற்றலானது எந்தவொரு தங்க சுரங்கத்திற்கும் அல்லது நமது தனியார் துறையின் எண்ணெய் வளத்திற்கும் குறைந்தது அல்ல.
இதனால் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில், இந்தியா வலிமையான நிலையை உறுதி செய்யும். சர்வதேச பசுமை எரிசக்தி சந்தையில், இந்தியா முன்னணி நாடாக திகழச் செய்வதற்கு இந்த நிதிநிலை அறிக்கை பங்களித்துள்ளது. இது உலகில் உள்ள அனைத்து எரிசக்தித்துறை, பசுமை எரிசக்தி முதலீட்டாளர்களுக்கும் சிறந்த வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இந்தியாவில் முதலீடு செய்யவும் அழைப்பு விடுக்கிறேன் . மேலும் புதுயுக தொழில் முனைவுகளுக்கும் இது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தின் கீழ், 5 எம்எம்டி (மில்லியன் மெட்ரி டன்) பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி என்ற இலக்கை நோக்கி செல்ல இத்துறையின் தனியார் துறையினருக்கு ரூ.19,000 கோடி ஊக்கத்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.
பசு சாணத்திலிருந்து (கோபர்தன் யோஜனா) 10,000 மில்லியன் கியூபிக் மீட்டர் உயிரி எரிவாயு உற்பத்தி செய்யும் திறனை பெற்றுள்ளோம். இதைக் கொண்டு நகரப்பகுதிகளுக்கு தேவையான (ஒன்றரை லட்சம் கியூபிக் மீட்டர் எரிவாயு) எரிவாயுவில் 8 சதவீதம் அளவிற்கு விநியோகம் செய்ய முடியும். இதனால், தற்போதைய நிதிநிலை அறிக்கையில், கோபர்தன் திட்டத்தின் கீழ் 500 புதிய ஆலைகளை அமைக்க அரசு அறிவித்துள்ளது.
இதை நவீன ஆலைகளாக அமைக்க அரசு ரூ.10,000 கோடி நிதியை செலவு செய்ய இருக்கிறது. இந்தியாவின் வாகனக் கழிவுக் கொள்கை பசுமை வளர்ச்சி உத்தியில் மாசு ஏற்படுத்தும் பழைய வாகனங்களை கழிக்க வாகனக் கழிவுக் கொள்கை ஏற்படுத்தப்பட்டு, 3 லட்சம் அரசு வாகனங்களை கழிவு செய்வதற்கு ரூ.3,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 6 - 7 ஆண்டுகளில், இந்தியாவின் பேட்டரி சேமிப்புத் திறன் 125 ஜிகா வாட் மணி நேரங்களாக அதிகரிக்க உள்ளது. பசுமை எரிசக்திக்கான தொழில்நுட்பத்தில் உலகிற்கு வழிகாட்டும் திறன் இந்தியாவிடம் உள்ளது. நிதிநிலை அறிக்கையின் ஒவ்வோர் அம்சத்தையும் அமல்படுத்துவதற்கு விரைவாக செயல்படவேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...