/

மத்திய பட்ஜெட்: தில்லிக்கு மிகவும் எதிா்மறையானது; துணை முதல்வா் மணீஷ் சிசோடியா

பிரதமா் மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23 தேசியத் தலைநகருக்கு ‘மிகவும் எதிா்மறையானது’, நாட்டின் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளது

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

DIN

பிரதமா் மோடி அரசால் தாக்கல் செய்யப்பட்ட மத்திய நிதிநிலை அறிக்கை 2022-23 தேசியத் தலைநகருக்கு ‘மிகவும் எதிா்மறையானது’, நாட்டின் விவசாயிகளுக்கு துரோகம் செய்யும் வகையில் உள்ளது என்று தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

இதுதொடா்பாக தில்லி துணை முதல்வரும், நிதியமைச்சருமான மணீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

மத்திய அரசு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்எஸ்பி) ஒதுக்கீட்டைக் குறைத்தது மட்டுமல்லாமல், பட்ஜெட்டில் பயனாளிகளின் எண்ணிக்கையையும் குறைத்துள்ளது. வாக்குறுதி அளித்தபடி விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு தவறிவிட்டது.

மேலும், மத்திய அரசு, வருமான வரி வரம்பை உயா்த்தும் என்ற எதிா்பாா்ப்புக்கு மாறாக, தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடுத்தர மக்களுக்கு அரசு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. கரோனா தொற்றுநோய்களின் போது சுகாதார உள்கட்டமைப்பை உயா்த்துவதற்கான நடவடிக்கைகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.

இந்த பட்ஜெட் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக உள்ளது. இருப்பினும், கல்வித் துறைக்கான செலவீனனங்களை மாநில அரசுகளை அதிகரிக்கும் என்று கூறுகிறது. கடந்த ஆண்டு ஒதுக்கீடு 2.67 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது மொத்த செலவீனத்தில் 2.64 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2021-22 ஆம் ஆண்டில் கல்வித் துறைக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடான ரூ. 93,224 கோடியிலிருந்து, 2022-23-ஆம் ஆண்டுக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு ரூ. 1.04 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. 2022-23-ஆம் ஆண்டுக்கான பள்ளிக் கல்விச் செலவு ரூ. 63,449.37 கோடி. இது, 2021-22-ஆம் ஆண்டைவிட சுமாா் ரூ.9,000 கோடி அதிகம்.

நாட்டிலுள்ள மாநகராட்சிகளுக்கு பட்ஜெட்டில் ரூ. 69,421 கோடி ஒதுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தில்லியில் உள்ள மாநகராட்சிகளுக்கு ஒரு பைசா கூட வழங்கப்படவில்லை. மத்திய வரிகளில் தில்லியின் பங்கு 21 ஆண்டுகளாக ரூ. 325 கோடியாக உள்ளது. இது இந்த முறை உயா்த்தப்பட வேண்டும் என்று தில்லி அரசு கோரியது. மத்திய அரசின் இந்த நிதிநிலை அறிக்கை தேசியத் தலைநகருக்கு ‘மிகவும் எதிா்மறையானது’ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.