இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது : பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

கர்நாடகம்: பாஜகவுக்கு மீண்டும் "கை'கூடுமா "ஆபரேஷன் கமலா'?

2008 -ஆம் ஆண்டில் பாஜகவுக்கு வெற்றி தேடித்தந்த "ஆபரேஷன் கமலா' உத்தியை அந்தக் கட்சி இந்த முறையும் மீண்டும் கையிலெடுத்திருக்கிறது.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:32 am

ந.முத்துமணி

2008 -ஆம் ஆண்டில் பாஜகவுக்கு வெற்றி தேடித்தந்த "ஆபரேஷன் கமலா' உத்தியை அந்தக் கட்சி இந்த முறையும் மீண்டும் கையிலெடுத்திருக்கிறது.
 2008-இல் 110 இடங்களை ù வன்று, ஆட்சி அமைக்க பாஜகவுக்கு 3 இடங்கள் குறைவாக இருந்தன. 2018-இல் 104 இடங்களில் வென்று, ஆட்சி அமைக்க 9 இடங்கள் குறைவாக இருந்தன. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்க "ஆபரேஷன் கமலா' என்ற புதுவித அரசியல் நடவடிக்கையின் மூலம் 2008-இல் ஆட்சியைக் கைப்பற்றிய பாஜகவால், 2018-இல் அதை செயல்படுத்துவதில் ஏராளமான தடைகள் காணப்பட்டன.
 ஆபரேஷன் கமலா: 2008-இல் 110 இடங்களை வென்றிருந்த பாஜக, சுயேச்சை எம்எல்ஏக்கள் 6 பேரின் ஆதரவைப் பெறுவதில் வெற்றிபெற்று, எடியூரப்பா தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டது. 34 பேர் கொண்ட அமைச்சரவையில் 5 சுயேச்சை எம்எல்ஏக்களுக்கு அமைச்சராகும் வாய்ப்பு தரப்பட்டது. சுயேச்சைகளின் ஆதரவில் 5 ஆண்டுகள் நிலையாக ஆட்சியை நடத்த முடியாது என்பதை உணர்ந்த பாஜக, "ஆபரேஷன் கமலா'வை முதன்முறையாகச் செயல்படுத்தத் தொடங்கியது.
 கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி குறிப்பிட்ட கட்சியை சேர்ந்த எம்எல்ஏ, வேறொரு கட்சிக்குத் தாவினால், அவர் பதவிநீக்கம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. குறிப்பிட்ட கட்சியின் மூன்றில் ஒரு பகுதியினர், அக் கட்சியில் இருந்து விலகி, வேறொரு கட்சியில் சேர்ந்தால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி பதவிநீக்கம் செய்ய முடியாது.
 கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்படி பதவி நீக்கம் செய்யப்பட்டால், 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்பதால், ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவுவதில் மனத் தயக்கம் இருந்து வந்தது. சட்டத்தில் காணப்படும் தடையைச் சமாளிக்கும் வகையில், ஒரு கட்சியைச் சார்ந்த எம்எல்ஏவை, தனது பதவியை ராஜிநாமா செய்ய வைத்து, அவரைத் தங்கள் கட்சிக்கு இழுத்து, அத் தொகுதிக்கு நடக்கும் இடைத்தேர்தலில் அவரையே கட்சியின் வேட்பாளராக நிற்கவைத்து, வெற்றிபெற வைப்பதே எடியூரப்பா கொண்டுவந்த 'ஆபரேஷன் கமலா'வின் அடிப்படை.
 அதன்படி, 2008-ஆம் ஆண்டு மஜதவைச் சேர்ந்த 4, காங்கிரûஸச் சேர்ந்த 3 எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுத்து, அவர்களையே இடைத்தேர்தலில் பாஜக தனது வேட்பாளர்களாக அறிவித்தது. மொத்தம் போட்டியிட்ட 7 தொகுதிகளில் 5-ஐ பாஜக கைப்பற்றியதன் விளைவாக, கர்நாடக சட்டப்பேரவையில் பாஜகவின் சொந்த பலம் 115 ஆக உயர்ந்தது. இதன்காரணமாக தனது ஆட்சியை 5 ஆண்டுகளுக்கு பாஜக நிலைநிறுத்திக் கொண்டது.
 மீண்டும் ஆபரேஷன்: 10 ஆண்டுகள் கழித்து 2018-ஆம் ஆண்டிலும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு அதேபோன்றதொரு சூழ்நிலையை பாஜக எதிர்கொள்ள நேர்ந்தது. 104 இடங்களில் வென்றிருந்த பாஜக, அறுதிப்பெரும்பான்மை பலத்தைப் பெற 9 இடங்கள் கூடுதலாகத் தேவைப்பட்டன. ஆனால், இம் முறை 2 சுயேச்சைகள் மட்டுமே வெற்றிபெற்றிருந்ததால், பாஜகவின் திட்டம் எதிர்பார்த்தப்படி நடக்கவில்லை. இதனால் முதல்வராகப் பொறுப்பேற்ற எடியூரப்பா, சட்டப்பேரவையில் நடக்கவிருந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிபெற முடியாது என்பதை அறிந்ததும், தனது பதவியை 3 நாள்களில் ராஜிநாமா செய்துவிட்டார்.
 104 இடங்களில் வென்றிருந்தும், மத்தியில் பாஜக ஆட்சி இருந்தும், ஆட்சி அமைக்க முடியவில்லையே என்ற ஆதங்கம் எடியூரப்பாவுக்கு மட்டுமல்ல, பாஜகவுக்கும் உள்ளது. இதன்காரணமாகவே, எடியூரப்பாவின் ராஜிநாமாவுக்கு பிறகு அமைந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசை "ஆபரேஷன் கமலா' மூலம் கவிழ்க்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுவந்துள்ளது. கடந்த 14 மாதங்களில் காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களை பாஜகவுக்கு இழுக்க 6 முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அவை அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. எனினும், முயற்சியைக் கைவிடாத பாஜக, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு "ஆபரேஷன் கமலா'வை தீவிரப்படுத்தியது.
 தொடர் ராஜிநாமா: பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பாவின் திட்டமிட்ட முயற்சியின் விளைவாக காங்கிரஸ், மஜதவைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் 16 பேர் ஜூலை 1-ஆம் தேதி முதல் தங்கள் பதவியை அடுத்தடுத்து ராஜிநாமா செய்து, மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு அதிர்ச்சி அளித்துள்ளனர். அன்றுமுதல் தூக்கத்தைத் தொலைத்துள்ள மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசு, செய்வதறியாது திகைத்துள்ளது.
 காங்கிரûஸ சேர்ந்த 13, மஜதவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்திருப்பது, பாஜகவின் ஆட்சிக் கனவு நம்பிக்கையை உறுதிப்படுத்தத் தொடங்கியுள்ளது.
 கூட்டணி அமைச்சரவையில் அங்கம்வகித்த 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் தங்கள் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு, பாஜக பக்கம் சாய்ந்துள்ளனர். அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக ஓரிடத்தைப் பெற்றுள்ளது. இதனால் சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் 107-ஆக உயர்ந்துள்ளது. 117-ஆக இருந்த மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசின் பலம் 101-ஆகச் சரிந்துள்ளது.
 நம்பிக்கை வாக்கெடுப்பு: இந்தநிலையில், சட்டப்பேரவையில் தனது அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார். இதற்காக ராஜிநாமா செய்துள்ள காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்களிடம் சமாதானம் பேசும் முயற்சியில் முதல்வர் குமாரசாமி, துணைமுதல்வர் ஜி.பரமேஸ்வர், முன்னாள் முதல்வர் சித்தராமையா, அமைச்சர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்டோர் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளனர்.
 ஆனால், ராஜிநாமா முடிவைக் கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று மும்பையில் தஞ்சம் அடைந்திருக்கும் அதிருப்தி காங்கிரஸ், மஜத எம்எல்ஏக்கள் சமரச முயற்சிக்கு கைவிரித்துள்ளனர். ராமலிங்க ரெட்டி, எம்.டி.பி.நாகராஜ் உள்ளிட்ட அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் இடைவிடாமல் சமரச முயற்சிகள் தொடர்ந்தவண்ணம் இருக்க, ஆட்சியைக் கவிழ்க்கப்போகும் நம்பிக்கையில் பாஜக உலாவந்த வண்ணம் உள்ளது.
 மீண்டும் ஆட்சி: நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் முதல்வர் குமாரசாமியின் திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதியே (திங்கள்கிழமை) செயல்படுத்துமாறு பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார். எடியூரப்பாவின் ஆபரேஷன் கமலாவுக்கு பிரதமர் மோடி, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் சம்மதம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
 காங்கிரஸ் இல்லா இந்தியாவை உருவாக்கப் போவதாக அறிவித்திருந்த பிரதமர் மோடியின் எண்ணத்தை நிறைவேற்ற, இந்தியாவின் எந்த மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி நடக்கக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக உள்ளது. கர்நாடகத்தில் ஆட்சி அமைந்தால், அது தென்னிந்தியாவின் திறவுகோலாக மாறும் என்று பாஜக எதிர்பார்க்கிறது.
 எடியூரப்பாவின் ஆபரேஷன் கமலாவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தான் கை சேர்த்திருக்கிறார்கள். இது பாஜகவின் நம்பிக்கையை அதிகரித்துள்ளதோடு, முதல்வர் குமாரசாமி கொண்டுவரும் நம்பிக்கை வாக்கெடுப்பை தோற்கடிக்கும் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறது.
 கர்நாடகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற இரண்டாவது முறையாகச் செயல்படுத்தியிருக்கும் "ஆபரேஷன் கமலா'வால் பாஜகவின் ஆட்சிக்கனவு கைகூடுமா இல்லை, இன்னொரு முயற்சி தேவைப்படுமா என்பதை அடுத்த ஒரு வாரம் முடிவு செய்யும்!
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.