கர்நாடகத் தமிழர்களின் மொழிச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு?
தமிழர்களின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு பூகோள ரீதியாக மிகவும் நெருக்கத்தில் இருக்கும் கர்நாடகத்தில் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள்.


தமிழர்களின் தாயகமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு பூகோள ரீதியாக மிகவும் நெருக்கத்தில் இருக்கும் கர்நாடகத்தில் தமிழர்கள் ஆண்டாண்டு காலமாக வாழ்ந்து வருகிறார்கள். தற்போதைய கர்நாடகத்துக்கும், தமிழர்களுக்கும் இடையேயான தொடர்பு 10-ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். தமிழ் பேசும் சோழர்களுக்கும், கன்னடம் பேசும் சாளுக்கியர்களுக்கும் இடையே இணைப்புப் பாலமாக இருந்தது பெங்களூரு நகரம் என்பதை வரலாற்று ஏடுகள் உறுதி செய்கின்றன.
சோழர்களின் ஆளுகைக்கு முன்பே தற்போதைய பெங்களூரின் பூர்வ குடிகளாக தமிழர்கள் வாழ்ந்து வந்தனர் என்பதையும் வரலாற்று ஆதாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன. சோழ மன்னன் ராஜராஜன், அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சிவ, வைணவ வழிபாட்டுத் தலங்கள், சோழர் கால ஆட்சியின் ஆவணங்களாக இன்று சான்று பகர்கின்றன.
பெங்களூரின் புறநகர்ப் பகுதிகள், அந்தப் பகுதிகளுக்கு உள்பட்ட பெரும்பாலான கிராமங்களிலும் சோழர் ஆட்சியை நினைவூட்டும் கலைநயமிக்க சிறிய, பெரிய கோயில்களை இன்றும் காண முடியும். தற்போதைய கர்நாடகத்தில் எத்தனை ஆண்டுகளாக தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள் என்ற பூர்வீக வரலாற்று உண்மைகளை பெங்களூரில் தொம்ளூர் என்று அழைக்கப்படும் இடத்தில உள்ள பத்தாம் நூற்றாண்டு சொக்கபெருமாள் கோயில் கல்வெட்டுகள் மூலம் பல அரிய தகவல்களை அறிய முடிகிறது.
அது மட்டுமல்ல, மைசூரு மகாராஜா ஆட்சிக் காலத்திலும், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்திலும் கன்னடமொழி, இலக்கியம், கலை, உள்கட்டமைப்பு, சமூக, பொருளாதார, கல்வி மேம்பாட்டுக்கு தமிழர்களின் பங்களிப்பு மகத்துவம் வாய்ந்ததாகும் என்பதை அனைவரும் அறிவார்கள்.
பெங்களூரு, மைசூரு, கோலார், சிவமொக்கா, மண்டியா, சாமராஜ்நகர், தென் கன்னடம், பெல்லாரி, தும்கூரு உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தாலும், 1956-ஆம் ஆண்டில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழர்கள் மொழிச் சிறுபான்மையினராக ஆக்கப்பட்டுள்ளனர்.
சுதந்திர இந்தியாவில் கர்நாடகத் தமிழர்கள் எவ்வித அச்ச உணர்வும் இல்லாமல், முழுச் சுதந்திர உணர்வுடன் வாழ்ந்தது சில ஆண்டுகளே எனலாம்.
தமிழ்த் திரைப்படங்களைத் திரையிடுவதில் பிரச்னை, காவிரி நதிநீரைப் பகிர்ந்து கொள்வதில் பிரச்னை, தமிழ்ப் பள்ளிகள் இயங்குவதில் பிரச்னை, தமிழ் பேசுவதில் பிரச்னை, தமிழ் மொழியில் பெயர்ப் பலகைகளை வைப்பதில் பிரச்னை, தாய்மொழிக் கல்வியைப் பெறுவதில் பிரச்னை, வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் பிரச்னை, தமிழர்களின் சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்துவதில் பிரச்னை, தமிழ்த் தொலைக்காட்சிகளைக் காண்பதில் பிரச்னை, கிறிஸ்தவத் தேவாலயங்களில் தமிழில் ஆராதனை நடத்துவதில் பிரச்னை, தங்கச் சுரங்கத்தை நடத்துவதில் பிரச்னை, ரயில்,பேருந்து வசதிகளைப் பெறுவதில் பிரச்னை, தமிழ்ச் சங்கங்கள், அமைப்புகளை நடத்துவதில் பிரச்னை, ஊராட்சி, சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் மக்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்னை, தமிழர்களின் அரசியல் உரிமைகளை நிலைநாட்டுவதில் பிரச்னை, அரசாணைகளைத் தமிழில் பெறுவதில் பிரச்னை, பள்ளி, கல்லூரிகளில் தமிழை மொழிப் பாடமாகப் படிப்பதில் பிரச்னை, தமிழ்ப் பள்ளிகளில் தமிழாசிரியர்களை நியமிப்பதில் பிரச்னை, தமிழ்ப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைப் பெறுவதில் பிரச்னை, தமிழ்ப் பள்ளிகள் மூடப்படாமல் தடுப்பதில் பிரச்னை, காவிரி பிரச்னை எழுந்தால் தமிழகப் பேருந்துகள் கர்நாடகம் வந்து செல்வதில் பிரச்னை, தமிழக அரசுடன் கர்நாடக அரசுக்கு ஏற்படும் அரசியல் மோதல்களின் போது தங்களின் உடைமை, உயிர்களைப் பாதுகாத்துக் கொள்வதில் பிரச்னை- இப்படி எண்ணில் அடங்கா பிரச்னைகளுடன் சொந்த நாட்டில் அகதிகளைப் போல தமிழர்கள் வாழ்ந்து வரும் பரிதாபம், சுதந்திரம் பெற்று 69 ஆண்டுகள் கழிந்த பிறகும் தொடர்ந்தவண்ணம் இருப்பதை என்னவென்று சொல்வது.
திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதிலும், தமிழர்களும் கன்னடர்களும் இணக்கமாக வாழ முடியாத சூழல் உருவாகக் காரணமான நிகழ்வு எது என்பதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. கர்நாடகத்தில் மொழிச் சிறுபான்மையினராக வாழும் மராத்தியர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள், உருது பேசும் இஸ்லாமியர்கள் நமது அரசியலமைப்புச் சட்டம் மொழிச் சிறுபான்மையினருக்கு வழங்கியுள்ள சகல உரிமைகளையும் அனுபவித்து வரும் நிலையில், தமிழர்கள் மட்டும் அலைக்கழிக்கப்படுவது எதனால் என்பதும் புரியவில்லை. மொழியால், இலக்கியத்தால், கலையால், இனத்தால், பூகோளத்தால் ஒன்றுபட்டிருந்தாலும், கன்னடர்களின் மனதில் தமிழர்கள் முள்ளாகத் தைத்துக் கொண்டிருப்பது எதனால் என்பதும் புரியவில்லை.
தமிழகம், கர்நாடக மாநிலங்களுக்கு இடையே தீயாகக் கனன்று கொண்டிருக்கும் காவிரி நதி நீர்ப் பங்கீடு விவகாரத்தில் கர்நாடகத் தமிழர்களின் நம்பகத்தன்மையை கன்னடர்கள் சந்தேகப்படுவது எதனால் என்பதும் புரியவில்லை. கன்னட மொழியுடன் தாய்மொழியாம் தமிழைக் கற்க முனைந்தால், தமிழர்களின் மாநிலப் பற்றைக் குறை கூறுவது எதனால் என்பதும் புரியவில்லை. கர்நாடகத்தில் இருந்து காவிரி நதிநீர் தமிழகத்திற்கு பாய்ந்தோடக் கூடாது என்றால், தமிழகத்தில் இருந்து கர்நாடகத்திற்கு பேருந்தும், தமிழ்த் திரைப்படங்களும், தொலைக்காட்சிகளும் படிதாண்டக் கூடாது என்பது எதனால் என்பதும் புரியவில்லை.
கோலார் தங்கவயலில் தமிழில் பெயர்ப் பலகை வைக்கக் கூடாது என்று ஆவேசக்குரல் எழுப்பும் கன்னட அமைப்புகள், தமிழகத்தில் கன்னடர்கள் அதிகம் வாழும் தாளவாடி, ஒசூர் உள்ளிட்ட பகுதிகளில் கன்னடத்தில் பெயர்ப் பலகை வைக்க எதிர்ப்புத் தெரிவிக்காதது ஏன் என்பதும் புரியவில்லை.
தமிழகத்தில் கன்னடர்கள் தமிழ் பயில எதிர்ப்புத் தெரிவிக்கும் கன்னட அமைப்புகள், கர்நாடகத்தில் தமிழர்கள் கட்டாயம் கன்னடத்தைப் படிக்க வைத்திருப்பது எதனால் என்பதும் புரியவில்லை.
சுதந்திர இந்தியாவில் மொழிச் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட்டுள்ள மொழி உரிமை உள்ளிட்ட சமூக, பொருளாதார உரிமைகளை வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை. கர்நாடகத்தில் வாழ்ந்தாலும், தமிழகத்தில் வாழ்ந்தாலும் மொழியால் தமிழர்கள், கன்னடர்கள் எனப் பிளவுப்பட்டு நிற்காமல் தேசத்தால் ஒன்றுபட்டு நிற்பதுதான் இந்த பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள். கைக் குழந்தையை அரவணைத்துப் பாதுகாக்கும் தாயைப் போல மொழிச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பீர்கள என்ற நம்பிக்கையில்தானே, மொழி வழி மாநிலங்களைப் பிரித்த போது பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் பெங்களூரு, கோலார் தங்கவயல், சாமராஜ்நகரின் தமிழர் பகுதிகளை கர்நாடகத்துடன் இணைத்திருக்கிறார்கள்.
அந்த நம்பிக்கையை பொய்யாக்காமல் இருந்தால், கர்நாடகத் தமிழர்கள் நிம்மதியாகவும், சகல உரிமைகளுடனும் முதல்தர இந்தியக் குடிமக்களாக வாழ வழிபிறக்கும், வாழ்வும் சிறக்கும், மாநிலமும் செழிக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...