தினமணியில் விரைவில் "புதிய இணைப்பு': ஆசிரியர் கே. வைத்தியநாதன்
தினமணியில் விரைவில் புதிய இணைப்பு வெளியாகவுள்ளது என்று அதன் ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.


தினமணியில் விரைவில் புதிய இணைப்பு வெளியாகவுள்ளது என்று அதன் ஆசிரியர் கே. வைத்தியநாதன் கூறினார்.
"தினமணி' நாளிதழின் தில்லிப் பதிப்பின் நான்காம் ஆண்டு தொடக்க விழா தில்லியில் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லி தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து நடத்தப்பட்ட இவ்விழாவில் வாழ்த்துரை வழங்கிய பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிர்வாகிகள் "தினமணி' நாளிதழ் தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இதையடுத்து,ஆசிரியர் கே. வைத்தியநாதன் ஆற்றிய ஏற்புரை:
"தினமணி' தில்லி பதிப்பின் முதல் பதிப்பை வெளியிட்டுச் சிறப்பித்தது அன்றைய தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த எஸ்.ஒய். குரேஷி. அன்று முதல் பிரதியைப் பெற்றவர் பெரியவர் பட்டாபிராமன். இப்போது, நான்காவது ஆண்டில் தினமணி தில்லி பதிப்பு அடியெடுத்து வைத்திருக்கும்போது நடத்தும் விழாவில் தற்போதைய இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கலந்து கொண்டிருப்பதும், அதில் பெரியவர் பட்டாபியே வாழ்த்துரை வழங்குவதும் பெருமையாகவும், பெருமிதமாகவும் உள்ளது.
தேர்தல் ஆணையத்துக்கு பாராட்டு: இந்திய ஜனநாயகத்தில் மிக முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தும் தேர்தலின் போதெல்லாம் தலைமைத் தேர்தல் ஆணையராக தமிழர் ஒருவர் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
டி.என். சேஷனில் தொடங்கி, டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி, என்.கோபாலசுவாமி என்று தொடர்ந்த அந்தப் பாரம்பரியம் இப்போது சம்பத் தலைமையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கும் தேர்தலிலும் தொடர்ந்திருக்கிறது.
தமிழன் தனது நேர்மையான செயல்பாடுகளில் இருந்து மாறிவிடவில்லை. தமிழகம் இன்னும் பெருமைபடக் கூடிய தலைமகன்களை ஈன்றெடுத்துக் கொண்டுதான் இருக்கிறது என்பதை உலகுக்கு நாம் நினைவுபடுத்துவதாக அமைந்திருக்கிறது, தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத்தின் நிதானமான செயல்பாடு.
தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் "தினமணி' தில்லிப் பதிப்பு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார். தன்னைப் பாராட்டுவதற்காக இப்படியொரு நிகழ்ச்சி என்றால் அதில் கலந்து கொண்டிருக்க மாட்டேன் என்றார் சம்பத். இந்தப் பாராட்டு, அவருக்கு அல்ல. வெற்றிகரமாக தேர்தலை நடத்தி ஜனநாயகத்தைக் காப்பாற்றித் தந்ததற்காக நாங்கள் தேர்தல் ஆணையத்திற்கு செய்யும் நன்றிக் கடன்.
இந்தியாவில் அரசியல் தலைமை பற்றி நான் கருத்துக் கூற விரும்பவில்லை. ஆனால் உச்சநீதிமன்றத் தலைமைப் பொறுப்பு, தேர்தல் ஆணையத்தின் தலைமைப் பொறுப்பு, தகவல் ஆணையம், கணக்குத் தணிக்கை, ஊழல் கண்காணிப்பு போன்ற ஆணையங்களின் தலைமைப் பொறுப்பு ஆகிய அரசியல் சட்ட அமைப்புகளில் பதவி ஏற்றவர்கள் ஏதோ விக்கிரமாதித்தன் சிம்மாசனத்தில் அமர்ந்து செயல்படுகிறார்களோ என்று தோன்றுகிறது. அதுதான் இந்தியாவைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நமது ஜனநாயகத்தை நிலைநிறுத்தி வருகிறது.
புதிய இணைப்பு: இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய தில்லித் தமிழ்ச் சங்க பொதுச் செயலர் முகுந்தன் "தினமணி' நாளிதழில் கூடுதல் இணைப்பு வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். விரைவில் "இளைஞர் மணி' என்ற இணைப்பு தொடங்க இருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதேபோல, கர்நாடக சங்கீத சபா பொதுச் செயலர் மகாதேவன், "இசை உலா' கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட வேண்டும் என்று கோரினார். விரைவில் "இசை உலா' மட்டுமல்ல, "இந்த வாரம்' பகுதியும் புத்தகமாக வெளிவர இருக்கிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.
காயத்ரி ஃபைன் ஆர்ட்ஸ் காயத்ரி ராமச்சந்திரன் பேசுகையில் "இசை விமர்சனம் செய்ய வேண்டும்' என்று கோரினார்.
அவரே நல்ல விமர்சகர்களை அளிக்கட்டும். இசை விமர்சனம் தில்லிப் பதிப்பில் நிச்சயம் இடம்பெறும் என்று உறுதியளிக்கிறேன்.
தினமணி ஆயிரம் ஆண்டுகள் வாழ வேண்டும் என்று பெரியவர் பட்டாபி அளித்த வாழ்த்துக்கு நன்றியே கூற முடியாது. அவரது வாழ்த்தை மலைமேல் அமர்ந்திருக்கும் மால் முருகனின் வாழ்த்தாகக் கருதுகிறேன்.
தில்லி பதிப்பின் நோக்கம்?: "தினமணி' தில்லி பதிப்பின் முதல் நாள் வெளியீட்டு விழாவில் பேசும்போது, "குர்கானில் வசிக்கும் தமிழனுக்கும் மயூர் விஹார், நொய்டாவில் வசிக்கும் தமிழனுக்கும், ரோஹிணி, ஜனக்புரி, கரோல் பாக் என தில்லி மாநகரிலும் சுற்றுப்புறங்களிலும் வசிக்கும் தமிழர்கள் ஒருவருக்கொருவர் செய்திப் பரிமாற்றம் செய்து கொள்ளும் இணைப்புப் பாலமாக "தினமணி' பயன்பட வேண்டும்.
ஏதோ ஒரு பகுதியில் அமைந்துள்ள கோயில் திருவிழா என்றால், அது தில்லியின் ஏனைய பகுதிகளில் வசிக்கும் அனைத்துத் தமிழர்களுக்கும் தெரிய வேண்டும்.
எங்கோ ஒருவர் கிரஹப்பிரவேசம் நடத்துகிறார் என்றால் அதற்கான அழைப்பிதழை எடுத்துக் கொண்டு நண்பர்களையும் உறவினர்களையும் பார்க்க தில்லி முழுவதும் அலையக் கூடாது.
அச்செய்தி "தினமணி'யில் விளம்பரமாக வெளி வந்தால், அதைப் படித்து அவரது உறவினர்களும் நண்பர்களும் தெரிந்து கொள்ள வேண்டும்.
திருமணம் செய்து கொள்ள விரும்புவோர், "தினமணி' மூலம் அந்த வரன்களைத் தேர்வு செய்ய வேண்டும்.
இதேபோல, தில்லியில் உள்ள ஓவியர்கள், கலைஞர்கள், திறமைசாலிகள், பாடகர்கள் உள்ளிட்டோரை ஊக்குவித்து இங்குள்ள இளம் தலைமுறையினருக்கு மேடையாக தினமணி இருக்க வேண்டும் என்று விரும்பினேன்.
இதை செய்து முடிக்க எத்தனை ஆண்டுகள் ஆகுமோ எனக்குத் தெரியாது. ஆனால், இது கனவாக இருக்கக் கூடாது. அதை நனவாக்கி தீர வேண்டும் என்கிற உறுதியுடன் இருக்கிறேன்.
சென்னையில் இலக்கிய திருவிழா: சென்னை பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலக்கியத் திருவிழாவை ஜூன் 21, 22 தேதிகளில் "தினமணி' நடத்தவுள்ளது. அத்திருவிழா தமிழர்கள், தமிழ் ஆர்வலர்கள், கவிஞர்கள், வாசகர்கள் உள்ளிட்டோரை ஒருங்கிணைக்கும் பாலமாக இருக்கும். சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இத்திருவிழா நடத்தப்படவுள்ளது. இந்நிகழ்வை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தொடங்கி வைக்கவுள்ளார்.
எப்படி உள்ளூர் கோயில் திருவிழாவுக்குச் சென்றால் நட்பையும் உறவையும் சந்திக்க முடிகிறதோ அதேபோல, "தினமணி' இலக்கியத் திருவிழா தமிழ் ஆர்வலர்கள் அனைவரும் ஓரிடத்தில் கூடவும், அறிமுகமாகவும், பழகவும் களம் அமைத்துத் தருவதாக இருக்க வேண்டும். இதில் தமிழை நேசிக்கும் அனைவரும் பெருந்திரளாகக் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்' என்றார் ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...