தயாராகும் 20 புதிய செயற்கைக் கோள்கள்: 'இஸ்ரோ' தலைவர் தகவல்
இந்தியா 20 புதிய செயற்கைக்கோள்களைத் தயாரித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் தலைவர் கே. ராதாகிருஷ்ணன்...


திருவனந்தபுரம், ஜன.4: இந்தியா 20 புதிய செயற்கைக்கோள்களைத் தயாரித்து வருவதாக இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பின் (இஸ்ரோ) தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்று வரும் இந்திய அறிவியல் மாநாட்டின் 2-வது நாள் நிகழ்ச்சியில் ராதாகிருஷ்ணன் தலைமையில் "விண்வெளி ஆய்வில் இந்தியா' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் ராதாகிருஷ்ணன் பேசியது:
இதுவரை இந்தியா 57 செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவியுள்ளது. 20 புதிய செயற்கைக்கோள்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
செயற்கைக்கோள்களை ஏவுவதில் சில தோல்விகள் ஏற்பட்டுள்ளன. ஆனால் இதைப் பெரிது படுத்தாமல் தோல்விகளில் இருந்து புதிய பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்றார்.
இஸ்ரோ விஞ்ஞானி யு.ஆர். ராவ்: நாம் அனுப்பிய சந்திரயான் விண்கலம்தான் நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டறிந்து உலகுக்கு முதலில் அறிவித்தது. உணவு, எரிசக்தி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விண்வெளி பாதுகாப்பு போன்றவை தற்போதுள்ள முக்கிய சவால்களாகும். கடந்த 50 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப்பெரிய சாதனைகளைப் புரிந்துள்ளது. அடுத்த 50 ஆண்டுகளில் விண்வெளி ஆய்வில் இந்தியா மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தும் என்றார்.
நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி ஜான் மேத்தர் தற்போது மேற்கொண்டுள்ள ஆய்வு குறித்து கூறியது:
சூரியனை மிக அருகில் நெருங்கி ஆய்வு செய்யும் தொலைநோக்கியைக் தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. 2014-ம் ஆண்டில் இந்த தொலைநோக்கி ஐரோப்பிய யூனியனின் ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும். இதன் மூலம் பல அறிவியல் புதிர்களுக்கு விடைகிடைக்கும். மனித சமுதாயத்துக்குப் பயன்தரும் பல விஷயத்தை இதன் மூலம் சாத்தியமாக்கலாம் என்றார் மேத்தர்.
ஐரோப்பிய யூனியன் விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் ஆய்வு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் லார்ஸ் ஃபார்ம் பேசியது:
இயற்கைப் பேரழிவை முன்கூட்டியே கண்டறியும் தொழில்நுட்பம் மிக அவசியம். உலக அளவில் கடல் மட்டம் உயர்ந்து வருவது ஆபத்தின் அறிகுறி, இயற்கைப் பேரழிவை முன்கூட்டியே கண்டறிய உதவும் டர்போ செயற்கைக்கோளைக் கண்டறிய ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது என்றார்.
பசுமைப் புரட்சி விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் தலைமையில் உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பேசிய மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் தலைவர் வி. பிரகாஷ், உலகம் வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாறுபாடு காரணமாக பயிர் உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது உணவுப் பொருள்களின் விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. அக்டோபர் 24-ம் தேதி 13.39 சதவீதமாக இருந்த உணவுப் பொருள் பணவீக்கம் நவம்பர் 25-ல் 19.05 சதவீதமாக அதிகரித்துள்ளது. வளரும் நாடுகளில் உணவு உற்பத்தி தொடர்ந்து குறைந்து வருகிறது. வளரும் நாடுகளில் கடந்த 8 ஆண்டுகளில் உணவு உற்பத்தி 3 முதல் 5 சதவீதம் வரை குறைந்துள்ளது. உலகில் பலகோடி பேருக்கு ஒருவேளை மட்டுமே உணவு கிடைக்கிறது என்றார்.
உணவு தானிய உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்திய பிரகாஷ், இதற்கு அறிவியல் ரீதியான அணுகுமுறை அவசியம். பயிர் சாகுபடியில் நாம் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். விவசாயப் பணியாளர்களின் திறமையை அதிகரிப்பது, உயிரிசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். இது தவிர உற்பத்தி செய்த தானியங்களை முறையாகப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்திய அவர், உணவு பாதுகாப்பு முறை பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...