/

9.1.1976: “7 சுதந்திரங்களை” வலியுறுத்த கோர்ட் ஏற தடை - ராஷ்டிரபதி உத்தரவு

7 சுதந்திரங்களை வலியுறுத்த கோர்ட் ஏற ராஷ்டிரபதி தடை விதித்திருப்பது பற்றி...

News image
9.1.1976
Updated On :8 ஜனவரி 2026, 10:30 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புதுடில்லி, ஜன. 8 - அரசியல் சட்டத்தின் 19வது ஷரத்தில் உத்தரவாதம் தரப்பட்டுள்ள “7 சுதந்திரங்களை” வலியுறுத்த கோர்ட்டுக்குச் செல்லும் உரிமையை அவசர நிலைமைக் காலத்தில் நிறுத்திவைத்து ராஷ்டிரபதி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அரசியல் சட்டத்தின் 19-வது ஷரத்தினால் உத்தரவாதம் தரப்பட்டுள்ள “7 சுதந்திரங்கள்” வருமாறு:-

(1) பேச்சு, எழுத்து சுதந்திரம்.

(2) ஆயுதங்களின்றி அமைதியாக கூட்டம் கூடும் உரிமை.

(3) சங்கங்கள், யூனியன்கள் அமைக்கும் உரிமை.

(4) இந்திய பிரதேசத்தில் தாராளமாக நடமாடும் உரிமை.

(5) இந்திய பிரதேசத்தில் எப்பகுதியிலும் தங்கி வசிக்கும் உரிமை.

(6) சொத்துக்களை வாங்க, விற்க, வைத்திருக்க உரிமை.

(7) தொழில், வர்த்தகம், ஜீவனோபாயம் நடத்தும் உரிமை.

அரசியல் சட்டத்தின் 14, 21, 22வது ஷரத்துகள் உத்தரவாதம் தந்துள்ள உரிமைகளை அவசர நிலைமை காலத்துக்கு நிறுத்திவைத்து கடந்த ஆண்டு ஜூன் 27 (ஆம் தேதி) ராஷ்டிரபதி உத்தரவு பிறப்பித்தார்.

இன்று ராஷ்டிரபதி பிறப்பித்த உத்தரவின் சாராம்சம் வருமாறு:

“அரசியல் சட்டத்தின் 19வது ஷரத்து உத்தரவாதமளிக்கும் உரிமைகளை வலியுறுத்த எந்த நபரும் கோர்ட் ஏறுவதற்கு உள்ள உரிமையும், மேற்குறித்த உரிமைகளை வலியுறுத்த கோர்ட்டில் உள்ள நடவடிக்கைகளும் அரசியல் சட்டத்தின் 352(1) ஷரத்துப்படி 1971 டிசம்பர் 3 (ஆம் தேதி) மற்றும் 1975, ஜூன் 25 (ஆம் தேதி) பிராகடனமான அவசர நிலைமை அமலில் உள்ள காலத்துக்கு நிறுத்திவைக்கப்பட, அரசியல் சட்டத்தின் 359(1) ஷரத்து அளிக்கும் அதிகாரத்தைச் செலுத்துவதன் மூலம், ராஷ்டிரபதி இதன்மூலம் உத்தரவு பிறப்பிக்கிறார்.

இந்த உத்தாரவு இந்திய பிரதேச முழுதிலும் செல்லுபடியாகும்”.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.