/

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை நடத்தியது பற்றி...

News image
3.2.1976
Updated On :2 பிப்ரவரி 2026, 10:33 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை, பிப். 2 - தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சி அமல் செய்யப்பட்ட பிறகு ராஷ்டிரபதியின் பிரதிநிதியாக ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ள தமிழக கவர்னர் ஷா இன்று கோட்டையில் உள்ள தலைமைச் செயலகத்திற்கு வந்தார்.

தனது ஆலோசகர்களான பி.கே. தவே, ஆர்.வி. சுப்பிரமணியம் ஆகியோருடனும், தலைமைச் செயலர் பி. சபாநாயகம், இதர செயலாளர்கள் ஆகியோருடனும் அவர் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் எப்.வி. அருள், நகர போலீஸ் கமிஷனர் என். கிருஷ்ணசாமி ஆகியோரும் வந்திருந்தனர். காலை பத்தரை மணி அளவிலிருந்து பிற்பகல் ஒரு மணி வரை பல்வேறு நிர்வாக விஷயங்கள் குறித்தும் ஆலோசித்தனர். பி.கே. தவேவுக்கும், ஆர்.வி சுப்ரமணியத்திற்கும் கோட்டையில் தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி உபயோகித்து வந்த அறை தவேக்கும், முன்னாள் கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் உபயோகித்து வந்த அறை ஆர்.வி. சுப்பிரமணியத்துக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆலோசகர்கள் இருவரும் தற்போது சேப்பாக்கத்தில் உள்ள அரசினர் விருந்தினர் விடுதியில் தங்கி உள்ளனர். விரைவில் அவர்கள் வேறு வீடுகளில் குடியேறுவார்கள்.

புது டில்லி, பிப். 2 - தமிழ் நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சியை அமல் நடத்தும்படி சிபாரிசு செய்து, ராஷ்டிரபதி பக்ருதீன் அலி அகமதுக்கு, தமிழ் நாடு கவர்னர் கே.கே. ஷா அனுப்பிய அறிக்கை இன்று பார்லிமெண்டின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டது.

தி.மு.க. மந்திரி சபை மீதும் சம்பந்தப்பட்ட மந்திரிகள் மீதும் கூறப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த ஒரு உயர்மட்டக் கமிஷன் நியமிக்கும்படி தம்முடைய அறிக்கையில் கவர்னர் யோசனை கூறியிருக்கிறார்.

summary

The Governor held discussions with officials at Chennai Fort.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.