மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.

News image
Updated On :22 ஏப்ரல் 2026, 11:54 pm

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவுக்கான (ஏப்ரல் 23) பரப்புரை செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது. இதன் தொடர்ச்சியாக ஏப். 23-ஆம் தேதி முதல் கட்ட வாக்குப் பதிவும், ஏப்ரல் 29-ஆம் தேதி நடக்கும் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்ட வாக்குப் பதிவும் நடைபெறுகிறது. அதன் பிறகு இந்த மாநிலத்தின் எதிர்காலத்தை மக்கள் யாரிடம் ஒப்படைக்கப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு இப்போதே மேலோங்கியுள்ளது.

"மா, மதி, மனுஷ்' என ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜியால் அழைக்கப்படும் தாய், மண், மக்கள் ஆகியவற்றைப் பாதுகாப்பது அவசியம் எனக் கூறி சட்டப்பேரவைத் தேர்தலை அகில இந்திய திரிணமூல் காங்கிரஸ் கட்சி சந்தித்து வருகிறது.

மறுபுறம், மூன்று முறை ஆட்சியில் இருந்த திரிணமூல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுவதைத் தடுக்கும் திட்டத்துடன் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்புகளின் உதவியுடன் தேர்தல் களத்தில் பாரதிய ஜனதா கட்சி முழு வீச்சில் இறங்கியுள்ளது.

ஒருபுறம் தேர்தல் வன்முறை அச்சம், மறுபுறம் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் தாக்கம் எனக் கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளுக்குமே இந்த தேர்தல் மிகப்பெரிய சோதனைக் களமாக விளங்குகிறது.

முதல் கட்ட வாக்குப் பதிவை கூச் பெஹார் முதல் தினாஜ்பூர் வரையிலான பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு மாவட்டங்கள் எதிர்கொள்கின்றன. 2021-ஆம் ஆண்டில், கோர்க்காலாந்து விவகாரம், பழங்குடியின அடையாளம், வளர்ச்சி தொடர்பான கவலைகள் ஆகியவற்றைத் தேர்தல் முழக்கமாக்கி பாஜக வேரூன்றத் தொடங்கியது. 2026-ஆம் ஆண்டிலும் அதே முழக்கத்தோடு அக்கட்சி வாக்கு வேட்டையில் ஈடுபட்டது.

மாநிலத்தின் வடக்குப் பகுதிகளில், முந்தைய தேர்தலின்போது நிலவிய "ஆட்சிக்கு எதிரான மனநிலையை' ஈடுகட்ட, திரிணமூல் காங்கிரஸ் "லட்சுமி பண்டார்" மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

திரிணமூல் சவால்கள்: இந்தத் தேர்தலில் முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பல முக்கிய நட்சத்திர வேட்பாளர்களின் எதிர்காலமும் அடங்கியிருக்கிறது. 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த மம்தா பானர்ஜியைப் பொருத்தவரையில், அவர் இரண்டு விதமான சவால்களை இம்முறை எதிர்கொள்கிறார். ஒன்று, நீண்டகால ஆட்சியால் மக்களிடம் இயல்பாகவே ஏற்படும் சோர்வு; மற்றொன்று, கடந்த சில ஆண்டுகளில் டிஎம்சி நிர்வாகிகளுக்கு எதிரான மத்திய புலனாய்வு முகமைகளின் விசாரணையால் சந்திக்கும் கடுமையான நெருக்கடி. சிலர் ஏற்கெனவே பாஜகவில் சேர்ந்துவிட்டனர். மேலும் சிலர் தீவிர அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டனர்.

2026-ஆம் ஆண்டு தேர்தலுக்கான மம்தாவின் வியூகம், பாஜகவுக்கு எதிரான ஆக்ரோஷமான நேரடி மோதல் அரசியலாகும். அதில் முதலாவது முழக்கம் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிரானது. அடுத்ததாக, மத்திய அரசின் தொகுதி மறுசீரமைப்பு மசோதாவை நாடாளுமன்றத்தில் சமீபத்தில் எதிர்த்து தோல்வியுறச் செய்ய வைத்ததன் மூலம், தில்லியில் வங்கத்தின் குரலை ஒலிக்கச் செய்து வென்றதாக அவர் பரப்புரை செய்து வருகிறார்.

பாஜக வியூகம்: வங்கதேசத்தை இணைக்கும் சுமார் 2,216 கி.மீ. எல்லையைக் கொண்ட மாநிலம் மேற்கு வங்கம். அதனால் இங்கு வெற்றி பெறுவதை மத்தியில் ஆளும் பாஜக தேசப் பாதுகாப்புடன் தொடர்புடைய உத்தியாகப் பார்க்கிறது. எனவேதான், பெண்களுக்கு எதிரான வன்முறை, சட்டம்- ஒழுங்கு பிரச்னை, வேலையின்மை விவகாரம் என அனைத்திலும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் நேரடியாகக் கருத்து தெரிவித்து பரப்புரையிலும் தனிக் கவனம் செலுத்தி வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

தேர்தல் சுமைகள்: பாஜகவுக்கு எந்த அளவுக்கு இத்தேர்தல் முக்கியமோ, அதே அளவுக்கு 15 ஆண்டுகளாக ஆட்சியைப் பறிகொடுத்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகளுக்கும் இத்தேர்தல் மிகவும் முக்கியமாகும். 2021-இல் எதிர்கொண்ட முழுமையான தோல்விக்குப் பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை தேர்தல் களத்தில் இளைஞர்கள் பலருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தனது அடையாளத்தை தக்கவைக்க இந்த முறையும் போராடி வருகிறது. தேசிய அளவிலான அரசியல் விவகாரங்களில் திரிணமூல் காங்கிரஸுடன் இணக்கம்காட்டி வரும் அதே சமயம், மாநில அரசியலில் ஆளும் திரிணமூல் காங்கிரûஸ எதிர்த்து காங்கிரஸ் களத்தில் உள்ளது. இதேபோல, கடந்த முறை இடதுசாரிகளுடன் மேற்கொண்ட தேர்தல் கூட்டணியை இம்முறை முறித்துக்கொண்டு தனித்து தேர்தல் களம் காங்கிரஸ் காண்பதால் இரு கட்சிகளுக்குமே இது தேர்தல் பரப்புரை சுமையை கடுமையாக்கியிருக்கிறது.

ஏப்ரல் 23-ஆம் தேதி மேற்கு வங்கத்தில் நடக்கும் முதல் கட்டத் தேர்தல் என்பது, இனி யார் வெற்றி பெறுவார்கள் என்பதைப் பற்றியது மட்டுமல்ல; அது வங்காளத்தின் அரசியல் அமைப்புகளின் கட்டமைப்பு ரீதியிலான இருப்பைப் பற்றியது என்பதை ஆளும் திரிணமூல் காங்கிரஸும், எதிர்க்கட்சியான பாஜகவும் உணர்ந்துள்ளன.

இங்கு மம்தா பானர்ஜி 15 ஆண்டுகளாகக் கட்டியெழுப்பிய சாம்ராஜ்ஜியம் தாக்குப்பிடிக்குமா அல்லது பாஜகவின் தொடர் சித்தாந்த தாக்குதலால் அந்த சாம்ராஜ்ஜிய கோட்டையில் விரிசல் வருமா? இடதுசாரிகளுக்கும், காங்கிரஸுக்கும் புத்துயிர் கிடைக்குமா? என்பதெல்லாம் முதல் கட்ட வாக்குப் பதிவில் மட்டும் தீர்மானிக்கப்பட்டுவிடாது. ஆனால், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவில் வாக்களிப்போரின் மனநிலையை இதுவே ஓரளவுக்கு தயார்படுத்தி விடும் என்பதுதான் கள எதார்த்தம்.

அரசியல் களத்தில்...

முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவின் பவானிபூரில் களம் காண்கிறார். எதிரணி பாஜகவில் இவரை எதிர்ப்பவர் சுவேந்து அதிகாரி.

அபிஷேக் பானர்ஜி எம்.பி., டைமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளராக களம் காண்கிறார். அக்கட்சியின் தேர்தல் பரப்புரையை இவரே ஒருங்கிணைப்பதால் இவரது வியூகம் உற்று கவனிக்கப்படுகிறது.

அமைச்சர் சுஜித் போஸ், பிதன்நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். கொல்கத்தா புறநகர் வாக்குகளை ஈர்ப்பதில் இவர் முக்கியமானவராக கருதப்படுகிறார்.

பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் சுவேந்து அதிகாரி, பவானிபூரில் மட்டுமின்றி நந்திகிராம் தொகுதியிலும் போட்டியிடுகிறார். 2021 தேர்தலில் நந்திகிராமில் மம்தா பானர்ஜியை தோற்கடித்தவர் இவரே.

பாஜகவின் டாக்டர் சங்கர் கோஷ், சிலிகுரி தொகுதியில் போட்டியிடுகிறார். வடக்கு நகர்ப்புறப் பகுதியில் உள்ளூர்வாசிகளிடையே நன்கு அறிமுகமானவர்.

அக்னிமித்ரா பால், அசன்சோல் தெற்கு தொகுதியில் களம் காண்கிறார். பாஜகவை வேரூன்றச்செய்ய கலாசார நிகழ்வுகளை ஒரு பாலமாக இவர் பயன்படுத்தி வருகிறார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீஜன் பட்டாச்சார்யா, ஹூக்ளி மாவட்டத்தின் சிங்கூர் தொகுதியில் களம் காண்கிறார். "புதிய இடதுசாரி' இளைஞர் எழுச்சியின் அடையாளமாக இவரை இடதுசாரிகள் காண்கின்றனர்.

தேர்தலில் ஒலிக்கும் பிரச்னைகள்

* எஸ்ஐஆர் - நீக்கப்பட்ட 91 லட்சம் வாக்காளர்கள்.

* அரசியல் வன்முறை, பாதுகாப்பின்மை சூழல்.

* அதிகரிக்கும் வெளிநாட்டினர் ஊடுருவல்.

* ஆளும் அரசுக்கு எதிரான ஊழல் புகார்கள்.

* மத்திய அமைப்புகளின் விசாரணைகள்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.