கிருஷ்ணராயபுரம்(தனி): அதிமுக - திமுக நேரடிப் போட்டிக்கு வாய்ப்பு
அதிமுக பலம் பெற்ற கட்சியாக இருந்து வருகிறது. அதிமுக, திமுகவுக்கும் இடையே கடும்போட்டியே இருக்கும். திமுகவில் கூட்டணி கட்சிகளுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம்.


தொகுதியின் சிறப்பு: தென்னக நதிகள் இணைப்புத் திட்டத்தின் அச்சாரமாக விளங்கும் காவிரி - குண்டாறு நதிநீர் இணைப்புத்திட்டம் இந்த தொகுதியில் இருந்துதான் துவங்குகிறது. கரூர், புதுகை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெறும் வகையில் துவங்கப்பட்டுள்ள இத்திட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத்தொகுதியில் மாயனூர் கட்டளை கதவணையில் இருந்துதான் தொடங்குகிறது.
கரூர் மாவட்டத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையிலும், 1.04 டிஎம்சி தண்ணீரை சேமிக்கும் வகையிலும் கட்டப்பட்ட மாயனூர் கதவணை இந்த தொகுதியில்தான் அமைந்துள்ளது.
காவிரிக்கரையோரம் வெற்றிலை, வாழை, நெல் உள்ளிட்டவை சாகுபடி செய்யப்பட்டாலும் தொகுதியின் தென்கிழக்குப் பகுதியான கடவூர், பாலவிடுதி போன்ற பகுதிகள் இன்னும் வறட்சியாகவே உள்ளன.
கர்நாடகாவில் மேற்குதொடர்ச்சி மழையல் குடகுமலை என்ற இடத்தில் துவங்கும் காவிரி ஆறு இந்த தொகுதியின் ஒரு பகுதியை வளமாக்குகிறது.
மேலும் மாயனூர் காவிரிக்கரையோரம் உள்ள செல்லாண்டியம்மன் கோவில் மற்றும் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் மகாதானபுரம் மாகலட்சுமியம்மன் கோவில் போன்ற பிரசித்திப்பெற்ற கோவில்கள் இங்குதான் அமைந்துள்ளன.

மாயனூர் கதவணை
நில அமைப்பு: கரூர் நகராட்சியின் தொழிற்பேட்டை, சணப்பிரட்டி உள்ளிட்ட பகுதிகளையும், கடவூர் வட்டம் மற்றும் குளித்தலை வட்டத்தின் சில பகுதிகளும் இந்த தொகுதியில் உள்ளன.
கோயம்பள்ளி, சணப்பிரட்டி, மேலப்பாளையம், ஏமூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம், பள்ளபாளையம், தாளப்பட்டி, புத்தாம்பூர், காக்காவாடி, மணவாடி, ஜெகதாபி, வெள்ளியானை(வடக்கு), மூக்கணாங்குறிச்சி, பாகநத்தம், கே.பிச்சம்பட்டி மற்றும் வெள்ளியணை (தெற்கு) ஊராட்சிகளையும், புலியூர், உப்பிடமங்கலம், கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிகளையும், குளித்தலை வட்டத்தின் பாப்பயம்பாடி, வடவம்பாடி, மஞ்சநாய்க்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளையும் கொண்ட தொகுதியாக உள்ளது.
சாதி, சமூகம், தொழில்கள்: தாழ்த்தப்பட்டவர்கள், நாயக்கர்கள், சோழியவெள்ளாளர்கள், ஊராளிக்கவுண்டர்கள் ஆகியோர் பெரும்பான்மையாக வசிக்கும் இந்த தொகுதியில் மற்ற சமூகத்தினரும் ஓரளவு வசித்து வருகிறார்கள். தாழ்த்தப்பட்டோர், கம்பளத்து நாயக்கர்கள், ஊராளிக்கவுண்டர்களின் வாக்குகள்தான் வேட்பாளர்களின் வெற்றித்தோல்வியை நிர்ணயிக்கின்றன. காவிரி கரையின் மாயனூர், கிருஷ்ணராயபுரம், மகாதானபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே நெல், வாழை, வெற்றிலை, மரவள்ளிக்கிழங்கு போன்றவை பயிரிடப்படுகின்றன. அதேசமயத்தில் கடவூர், தரகம்பட்டி, பி.உடையாப்பட்டி, பாலவிடுதி போன்ற பகுதிகள் வானம்பார்த்த பூமியாகத்தான் உள்ளது. மாயனூரில் டிஎன்பிஎல் ஆலையின் ஆஸ்பெஸ்டாஸ் தொழிற்கூடம் தவிர பெரியளவிலான தொழிற்சாலைகள் ஏதும் இந்த தொகுதியில் இல்லை.
இதுவரை வென்றவர்கள்: 1967 முதல் நடந்த தேர்தல்களில் அதிமுக 6 முறையும், திமுக 3 முறையும், காங்கிரஸ் 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன. 2011 முதல் அதிமுக வசம் இருக்கும் இந்த தொகுதியில் 2016}ல் அதிமுக சார்பில் களமிறங்கிய ம. கீதாமணிவண்ணன் 83,977 வாக்குகள் பெற்று தன்னை எதிர்த்து போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட வி. கே. அய்யரை 35,301 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
நிறைவேற்றப்பட்ட திட்டங்கள்: 2018-19இல் தொகுதிக்குட்பட்ட கடவூர், தரகம்பட்டி உள்ளிட்ட ஒன்றிய பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் எம்எல்ஏ எம்.கீதா தனது சொந்த நிதியில் உணவு, உடை, அரிசி, பெட்ஷீட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கியது, கரோனா பரவலின்போது 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோது, தொகுதிக்குட்பட்ட மக்களுக்காக தனது சொந்த நிதியான ரூ.13.96 கோடி மதிப்பில் அரிசி, பருப்பு, மளிகைப்பொருட்களை வழங்கியது, எம்எல்ஏவுக்கு மட்டுமின்றி, அதிமுகவிற்கும் தொகுதியில் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்துள்ளது.
மேலும் மாயனூர் கதவணையை புனரமைக்க ரூ.185 கோடி நிதி ஒதுக்கித்தந்தது, தொகுதியில் 1000 படுக்கை வசதிகளுடன் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை துவங்கப்பட்டு, தற்போது மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருவது அதிமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை தேர்தலுக்கு பெற்றுக்கொடுத்துள்ளது.
தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான தரகம்பட்டியில் பின்தங்கிய மாணவ, மாணவிகளுக்காக புதியதாக அரசு கலை, அறிவியல் கல்லூரியைக் கொண்டு வந்தது, ஜெகதாபி அரசு மேல்நிலைப்பள்ளியை மாவட்டத்திலேயே மாதிரிப்பள்ளியாக அறிவித்து ரூ.1.50 கோடியில் புதிய கட்டிடம் கட்டிக்கொடுத்தது, தென்கரை, கட்டளை மேற்கு வாய்க்கால், கிருஷ்ணராயபுரம் பாசன கால்வாயில் ரூ.6.5 கோடியில் உயர்மட்டப்பாலம் கட்டிக்கொடுத்தது, மாயனூர் காவிரிக்கரையில் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.59லட்சத்தில் அம்மா பூங்கா கட்டிக்கொடுத்தது, பி.உடையாப்பட்டியில் ரூ.7லட்சத்தில் பால்குளிரூட்டும் நிலையம், ரூ.8.5 கோடியில் வாழைத்தார் பதப்படுத்தும் நிலையம் அமைத்துக்கொடுத்தது.
வீரராக்கியம் ஏரியை புனரமைக்க ரூ.15 கோடி நிதிப்பெற்றது போன்ற பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொகுதிமக்களின் எதிர்பார்ப்பு: தொகுதியின் தென்கிழக்குப்பகுதியில் உள்ள கடவூர், பாலவிடுதி, தரகம்பட்டி உள்ளிட்ட வறட்சியான பகுதிகளை கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வளமாக்கி வைத்திருந்த வீரராக்கியம் ஏரி, பஞ்சப்பட்டி ஏரிகளும் தற்போது நீரின்றி வறண்டு காணப்படுகின்றன.
இந்த ஏரிகளை காவிரி ஆற்றில் இருந்து வெள்ள காலங்களில் வீணாகும் நீரை ராட்சத குழாய்கள் வழியாகக் கொண்டு வந்து நிரப்பிட இப்பகுதி விவசாயிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மேலும் கடவூர் மலைப்பகுதியில் உலகிலேயே எங்கும் வசிக்காத சாம்பல் நிற தேவாங்கு இனம் வசித்து வருவதையும், அவற்றின் அழிவில் இருந்தும் காப்பாற்றும் வகையில் தேவாங்கு சரணலாயம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மீண்டும் விவசாயம் செழிக்க வெள்ளியணை பெரிய குளம், மாவத்தூர் ஏரி உள்ளிட்ட அனைத்து ஏரிகளிலும் காவிரி நீரை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் மிகுந்த நாள் கோரிக்கையாகவும், எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
கட்சிகளின் செல்வாக்கு: அதிமுக பலம் பெற்ற கட்சியாக இருந்து வருகிறது. அதிமுக, திமுகவுக்கும் இடையே கடும்போட்டியே இருந்தாலும், திமுக கூட்டணியில் 2 முறை காங்கிரசுக்கும், ஒரு முறை புதிய தமிழகம் கட்சிக்கும் கொடுக்கப்பட்டுள்ளதால் , திமுக கூட்டணி சார்பில் திமுகவோ அல்லது கூட்டணி கட்சியினருக்கோ கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் அதிமுக சார்பில் மீண்டும் தற்போதைய எம்எல்ஏ ம.கீதா களமிறக்க வாய்ப்புள்ளது. 2006}க்கு பின்னர் அதிமுக இருமுறைகளை வென்றுள்ளதால் மீண்டும் அதிமுகவே வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சியினர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். திமுகவினரும் தங்களுக்கோ அல்லது கூட்டணி கட்சியினருக்கோ யாருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டாலும் வெற்றி இலக்கு நோக்கில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.
யாருக்கு வாய்ப்பு: அதிமுகவில் போட்டியிட பலர் முனைப்புக்காட்டினாலும் தற்போதைய எம்எல்ஏ எம்.கீதாவுக்குத்தான் மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. திமுகவை பொறுத்தவரை முன்னாள் எம்எல்ஏ வழக்குரைஞர் காமராஜூக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. புதுமுகங்களும் சிலர் காய் நகர்த்தி வருகின்றனர்.
தற்போதைய வாக்காளர்கள்: ஆண்- 1,03,736, பெண்- 1,08,085, மூன்றாம் பாலினம்- 43, மொத்தம்- 2, 12,644.
1967- பி. சவுந்தரபாண்டியன்- திமுக- 8444; டி. வி. சன்னாசி- காங்கிரஸ்- 25903 .
1971- பி. சவுந்தரபாண்டியன் திமுக- 36177. பி. எம். தங்கவேல்ராசு ஸ்தாபன காங்கிரஸ்- 29020.
1977 பி.சவுந்தரபாண்டியன் அதிமுக- 22561. பி. எம். தங்கவேலு} காங்கிரஸ்} 219673.
1980 பி. எம். தங்கவேலு காங்கிரஸ்- 43623. அரங்கராசு அதிமுக- 34584.
1984 பி. எம். தங்கவேலு காங்கிரஸ்- 65928. கே. கிருஷ்ணன் திமுக- 25613.
1989 எ. அறிவழகன் அதிமுக (ஜெ)- 43574 . ஆர். மாசிலாமணி-திமுக-32890.
1991 எ. அறிவழகன் அதிமுக- 80676 . ஆர். நடராசன் திமுக- 24240.
1996 என். நாகரத்தினம் திமுக- 57638. எ. அறிவழகன் அதிமுக- 42461.
2001 ஆர். சசிகலா அதிமுக- 64046. பெரியசாமி திமுக- 42497 .
2006 பி. காமராசு திமுக- 58394 . ஆர். சசிகலா அதிமுக- 49460.
2011 செ. காமராசு அதிமுக- 83145. பி. காமராசு திமுக- 63638.
2016 ம. கீதா அதிமுக- 83977 . வி. கே. அய்யர் புதிய தமிழகம்-48676.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...