பாஜகவால் தேர்தல் நடைமுறைகளில் தலைகீழ் மாற்றம்: அகிலேஷ் யாதவ்தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (மே 8) வெளியீடுசுவேந்து அதிகாரியின் உதவியாளர் கொலை: அமித் ஷா பொறுப்பு - அகிலேஷ் யாதவ்இதுவரை அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை திமுக எடுக்கவில்லை: டி.கே. எஸ். இளங்கோவன்பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்!
/

முதுகில் குத்தி, துரோகம் செய்துள்ளது காங்கிரஸ்! திமுக கடும் கண்டனம்!!

காங்கிரஸ் காலை வாரி துரோகம் செய்துவிட்டதாக திமுக கண்டனம் தெரிவித்துள்ளதைப் பற்றி...

News image

தமிழக முதல்வர் ஸ்டாலின் - ராகுல் காந்தி.

Updated On :4 மணி நேரங்கள் முன்பு

காங்கிரஸ் காலை வாரி துரோகம் செய்துவிட்டதாக திமுக கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதுதொடர்பாக திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் பின்வருமாறு:

தமிழ்நாட்டு மக்களுக்கும் தோழமை இயக்கங்களுக்கும் நன்றி.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் - இந்த வெற்றிக்காகத் தோளோடு தோள் நின்று பாடுபட்ட தோழமை இயக்கங்களுக்கும் இக்கூட்டம் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கிய காலம் முதல் மக்கள் இயக்கமாகவே செயல்பட்டு வந்துள்ளது. அதனை மக்களும் உணர்ந்து நன்றி உணர்வோடு வாக்களித்து வருகிறார்கள் என்பது மகிழ்ச்சி தருவதாக உள்ளது.

பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகாமல் போனாலும் கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது நம்மை விட 17.43 லட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது.

நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 சதவிகிதம் மட்டுமே. அந்த வகையில் வலிமையான, அதிக அளவிலான நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்கள் வைத்துள்ளார்கள் என்பதே உறுதியாகிறது.

பேரறிஞர் அண்ணாவால் உருவாக்கப்பட்டு, தமிழினத் தலைவர் கலைஞரால் வளர்த்தெடுக்கப்பட்டு, திராவிட நாயகர் தலைவர் மு.க.ஸ்டாலினால் வழிநடத்தப்படும் திராவிட முன்னேற்றக் கழகம், என்றும் மக்களுக்கான இயக்கமாகவே செயல்படும் என்று ஒருமனதாக உறுதியேற்கிறோம்.

கழகத் தலைவருக்கு நன்றி

14 வயதில் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.வை தொடங்கியது முதல் ஆறாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆட்சியில் அமர்த்திக் காட்டியது வரை, இந்த அரை நூற்றாண்டு காலமாக தனது உண்மையான உழைப்பால் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தாய்த் தமிழ்நாட்டையும் போற்றிப் பாதுகாத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்.

கடந்த ஐந்தாண்டு காலம் திராவிட மாடல் ஆட்சியை வழங்கி, இந்தியாவின் முதன்மை மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்திக் காட்டிய ஆளுமைத் திறன் கொண்டவர்.

அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாட்டை உயர்த்தினார்கள். சமூக வளர்ச்சிக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணிக்கு வந்தது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் தமிழ்நாட்டை தலைநிமிர்ந்து பார்த்தது.

ஐந்தாண்டு காலத்தில் எத்தனையோ திட்டங்கள்; அத்தனை திட்டங்களும் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மலர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் ஒருவரையும் பின்தங்க விட மாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டியது அவரது உண்மையான உள்ளத்துக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

கோட்டையில் இருந்து மட்டுமல்ல, மக்களோடு மக்களாக இருந்து ஆட்சியை நடத்தினார்கள். தங்களில் ஒருவராகவே தமிழ்நாட்டு மக்கள் அவரைப் போற்றினார்கள். செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளம்.

அவர் முகத்தைக் கண்டதும், மக்கள் முகங்கள் மலர்ந்தன. இதன் மூலமாக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய மதிப்பையும், மரியாதையும் உருவாக்கித் தந்தார். இன்னும் நூறாண்டு காலத்துக்கு யாராலும் அசைக்க முடியாத பேரியக்கம் என்பதற்கான அடித்தளத்தை உறுதி செய்தார்.

சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் உழைப்பு மலையளவு. தினந்தோறும் பொதுக்கூட்டங்கள் வாயிலாக முழங்கினார். நடைபயணங்களின் மூலமாக பல கிலோ மீட்டர் தூரம் நடந்தும் மக்களோடு கலந்துரையாடினார்கள். லட்சக்கணக்கான மக்களை தனித்தனியாகச் சந்தித்ததும் அவரின் சாதனை ஆகும்.

மு.க.ஸ்டாலினுக்கு இக்கூட்டம் தனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. "இப்படி ஒருவரைத் தலைவராகப் பெற என்ன தவம் செய்தோம்?" என்று பெருமைப்படும் வகையில் அவர் தொடர்ந்து செயல்பட்டு நம்மை வழிநடத்த வேண்டும் என்று கோடிக்கணக்கான கழக உடன்பிறப்புகள் சார்பில் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

காங்கிரஸ் கட்சிக்கு கண்டனம்

மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இருந்து விலகுவதாக, அகில இந்திய காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு கடும் கண்டனத்துக்குரியது. காங்கிரஸ் கட்சி தனது பழைய குணத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.

ஒரு மாநிலங்களவை இடத்தையும் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் நமது தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பெற்றது. கூட்டணிக் கட்சித் தொண்டர்களின் உழைப்பால் பெற்ற வெற்றியைப் பணயம் வைத்து மாற்று அணிக்கு மூன்று நாட்களுக்குள் காங்கிரஸ் கட்சி மாறியது.

கூட்டணிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே கூட்டணிக்கு எதிரான கருத்தை அக்கட்சியினர் சொன்னதை காங்கிரஸ் கட்சி தடுக்கவும் இல்லை; கண்டிக்கவும் இல்லை.

புதுச்சேரியில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்றது. தி.மு.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்ட கொடுமையும் நடந்தது.

அதைவிடக் கொடுமை என்ன என்றால், அப்படி போட்டியிட்ட வேட்பாளர்கள், அதன் தலைவரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற காட்சியும் நடந்தது. அதாவது, தேர்தலுக்குப் பிறகு அல்ல, தேர்தல் நடக்கும்போதே உண்மையாக நடந்து கொள்ளாத கட்சிதான் காங்கிரஸ் கட்சி!

அதையெல்லாம் பொறுத்துக் கொண்டு, பெருந்தன்மையோடும் பொறுப்போடும் நடந்துகொண்ட நம் கழகத் தலைவருக்கு நேரில் வந்து வெற்றி பெற்றதற்காக ஒரு நன்றி கூட தெரிவிக்காது, முதுகில் குத்தி, மாபெரும் துரோகத்தைச் செய்துள்ளது காங்கிரஸ் கட்சி.

பா.ஜ.க. பல மாநிலங்களில் எதைச் செய்கிறதோ, அதையே காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் நமக்குச் செய்துள்ளது. தோழமை சக்தியின் காலை வாரி, நட்பு சக்திகளுக்குத் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியின் திடீர் மாற்றத்தைக் இக்கூட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது” என எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

Summary

The DMK has passed a resolution condemning the Congress for betraying it by pulling the rug out from under it.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.