புது தில்லி மாளவியா நகரில் உள்ள ஒரு ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 வெளிநாட்டினர் உள்பட 21 பேர் தீயில் கருகியும், மூச்சுத்திணறியும் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறுவதும், சம்பவம் நிகழ்ந்த பின்னர் அதற்கான காரணங்களை ஆராய்வதும் வாடிக்கையாகிவிட்டது.
தெற்கு தில்லியில் அமைந்துள்ள மாளவியா நகரில் ஒரு நெரிசலான சந்தில் தீவிபத்துக்குள்ளான "ப்ளரிஷ் ஸ்டே' ஹோட்டல். விருந்தினர் இல்லமாகவும், ஹோட்டலாகவும் இயங்கி வந்தது. ஒரே ஒரு நுழைவு - வெளியேறும் வழி, நிரந்தரமாக மூடப்பட்ட ஜன்னல்கள் மற்றும் சென்சார் மூலம் இயங்கும் பிரதான கதவு ஆகியவற்றைக் கொண்ட ஐந்து மாடி கட்டடத்தில் ஹோட்டல் செயல்பட்டு வந்தது. ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்டதும் குறுகலான மாடிப்படி வழியாக வேகமாக வெளியேற முடியாமல் தீயின் கோரப்பிடியில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த வெளிநாட்டினரில் பலர் மத்திய ஆசிய மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள். அருகில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த தங்கள் உறவினர்களைக் கவனித்துக் கொள்ள வந்தவர்கள் அந்த ஹோட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தனர்.
பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைக்காக வருபவர்கள் இந்த "ப்ளரிஷ் ஸ்டே' ஹோட்டலில் தங்குவது வழக்கம். நோயைக் குணப்படுத்த நாடு கடந்து வந்தவர்கள் இப்படி ஒரு கோர விபத்தில் சிக்கி உயிரிழந்தது துயரத்திலும் துயரம்.
குர்கானைச் சேர்ந்த விவேக் அகர்வால் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் இந்தத் தீவிபத்தில் உயிரிழந்துவிட்டனர். விவேக் அகர்வாலின் 70 வயது தந்தை ராதே சியாம் அகர்வால் என்பவர் மேக்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் பல நாள்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப்பதற்காக வந்த விவேக் அகர்வாலின் குடும்பத்தினர் "ப்ளரிஷ் ஸ்டே' ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தீவிபத்தில் விவேக் அகர்வால், அவரது தாயார், மனைவி, இரு குழந்தைகள், மேலும் மூன்று உறவினர்கள் என எட்டு பேர் தீயின் கோரப்பிடியில் சிக்கி உயிரிழந்தனர்.
ஓர் அறையில் தீயில் இருந்து தப்புவதற்காக கழிப்பறையில் புகுந்து கதவை உள்புறம் பூட்டிக்கொண்ட ஒரு தம்பதி புகைமூட்டத்தால் மூச்சுத்திணறி உயிரிழந்தனர். கைகளை இறுகப் பற்றியபடி அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டன. வரவேற்பறை அருகே ஓர் இளம்பெண்ணின் சடலம், அருகே சக்கர நாற்காலியில் ஒருவரின் சடலம் என தரைத்தளத்தில் மட்டுமே எட்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களில் சிலர் தூக்கத்திலேயே புகைமூட்டம் சூழ்ந்து உயிரைப் பறிகொடுத்த துயரத்தை வார்த்தைகளால் விளக்க முடியாது.
தீ விபத்துக்குள்ளான "ப்ளரிஷ் ஸ்டே' ஹோட்டல் ஏராளமான விதிமீறல்களில் ஈடுபட்டிருக்கும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆறு அறைகளுடன் செயல்பட மட்டுமே உரிமம் பெற்று 25 அறைகளுடன் செயல்பட்டு வந்திருக்கிறது. சட்டவிரோதமாக கட்டட வடிவமைப்பில் மாற்றம் செய்து 25 அறைகளுடன் விரிவாக்கம் செய்துள்ளார் ஹோட்டல் உரிமையாளர்.
புகை கண்டறியும் கருவிகள், தானியங்கி தீ எச்சரிக்கை மற்றும் நீர் தெளிப்பான் அமைப்புகள் போன்ற தீ பாதுகாப்பு வசதிகள் எதுவும் அந்த ஹோட்டலில் இல்லை என்பது தெரியவந்திருக்கிறது. தரைத்தளத்தில் ஏராளமான வணிகப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வைத்திருக்கின்றனர்.
தீ வேகமாகப் பரவியதற்கு அந்த சிலிண்டர்கள் வெடித்ததும் ஒரு காரணமாக சந்தேகிக்கப்படுகிறது. தீப்பிடிக்கத் தொடங்கியதும் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. பல அறைகள் எலக்ட்ரானிக் சாவிகளைக் கொண்டிருந்ததால், மின்சாரம் இன்றி கதவைத் திறக்க முடியவில்லை.
இத்தனை விதிமீறல்களும் விபத்துக்குப் பின்னர்தான் தெரியவந்திருக்கின்றன என்றால், தீயணைப்புத் துறையினரோ, கட்டட விதிமீறல்களுக்குப் பொறுப்பான பெருநகர நிர்வாகமோ இத்தனை நாள்கள் இந்த விதிமீறல்களைக் கண்டறியாதது ஏன் என்கிற கேள்வி எழுகிறது. ஒருவேளை விதிமீறல்களை அறிந்திருந்தும் அலட்சியத்தாலோ, கையூட்டு பெற்றுக்கொண்டோ அதை அனுமதித்திருக்கிறார்கள். இந்த ஹோட்டல் தீவிபத்து தொடர்பாக உரிமையாளரை காவல் துறை கைது செய்திருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களில் கைது நடவடிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், தண்டனை விகிதம் என்று பார்த்தால் குறைவாகவே இருக்கும்.
தலைநகர் தில்லி மட்டுமன்றி, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த விதிமீறல் கட்டடங்கள் பெரும் ஆபத்தாக இருக்கின்றன. அதுவும் நெரிசல் மிகுந்த இடங்களில் இருக்கும் இத்தகைய கட்டடங்கள் எந்த நேரத்திலும் பெரும் அபாயத்தை ஏற்படுத்தக்கூடியவை. கட்டடத் திட்டமிடலில் ஒன்று இருக்கும்; கட்டப்பட்டது முற்றிலும் மாறாக இருக்கும்.
கட்டடங்களில் சிறிய மாற்றங்கள் அபராதத்துக்கு உட்பட்டு முறைப்படுத்தப்படக் கூடியவைதான். ஆனால், மனிதர்களின் உயிருடன் விளையாடும் வகையிலான விதிமீறல்கள் அனுமதிக்கப்படுவதுதான் ஏன் என்று புரியவில்லை.
சென்னையில், குறுகிய ரங்கநாதன் தெருவில் அமைந்திருக்கும் பல வணிக வளாகங்கள் அதற்கு உதாரணங்கள். இந்தியாவில் மனித உயிர்கள் மலிவாகிவிட்டன...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








