விபத்து எழுப்பும் வினாக்கள்!
பொதுமக்களுக்கான வானூர்தி சேவையில் உலகளாவிய அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சரக்குகளைக் கையாள்வது என்று எடுத்துக்கொண்டால் உலகில் ஆறாவது இடத்தில் இருக்கிறது இந்திய வானூர்தித் துறை.


பொதுமக்களுக்கான வானூர்தி சேவையில் உலகளாவிய அளவில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சரக்குகளைக் கையாள்வது என்று எடுத்துக்கொண்டால் உலகில் ஆறாவது இடத்தில் இருக்கிறது இந்திய வானூர்தித் துறை.
சாலைப் போக்குவரத்தையும், ரயில் போக்குவரத்தையும் விட வானூர்தி போக்குவரத்து பாதுகாப்பானது என்பதைப் புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன. வானூர்திகளின் எண்ணிக்கையும், வானூர்தி சேவைகளும் அதிகரிக்க, அதிகரிக்க விபத்துகளின் விகிதம் குறைந்து வருகிறது என்பதைப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பத்து ஆண்டுகளுக்கு முன்னால், 4,56,000 வானூர்திகள் பயணங்களுக்கு ஒரு விபத்து என்கிற நிலைமைபோய், இப்போது, 8,10,000 பயணங்களுக்கு ஒரு விபத்து என்கிற அளவில் குறைந்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.
2024-ஆம் ஆண்டு 207 வானூர்தி விபத்துகளில் 405 உயிர்கள் பலியாகின என்றால், 2025-இல் 61 விபத்துகளில் 397 உயிரிழப்புகளை உலகம் சந்திக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை குறைந்தாலும், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதே அளவில் குறைந்து விடவில்லை.
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் சென்ற தனி விமானம், பாராமதி வானூர்தி நிலையத்தில் விபத்துக்குள்ளாகி பயணித்த ஐந்துபேரும் உயிரிழந்திருப்பது நாடுதழுவிய அளவில் அதிர்வை எழுப்பி இருக்கிறது. மோகன் குமாரமங்கலம், பாலதண்டாயுதம், சஞ்சய் காந்தி, பாலயோகி, மாதவ்ராவ் சிந்தியா, ராஜசேகர ரெட்டி, கடந்த ஆண்டில் விஜய் ரூபானி என்று அஜீத் பவாருக்கு முன்பும் சில முக்கியமான அரசியல் தலைவர்கள் விமான விபத்தில் உயிரிழந்திருக்கிறார்கள்.
சர்வதேச அளவிலும், வானூர்தி விபத்துகளில் ஏறத்தாழ 16-க்கும் அதிகமான உலகத் தலைவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். ஸ்வீடன் பிரதமர் அர்விட் லிண்ட்மேன் (1936), பராகுவே பிரதமர் ஜோஸ் ஃபெலிக்ஸ் எஸ்டிகாரிபியா (1940), பிலிப்பின்ஸ் பிரதமர் ரமோன் மகசேசே (1957), பிரேஸிலின் இடைக்கால அதிபர் நெரெயு ராமோஸ் (1958), இராக் அதிபர் சலாம் ஆரிஃப் (1966), பிரேஸிலின் அதிபர் ஹம்பர்டோ டி அலென்கார் காஸ்டேலோ பிராங்கோ (1967), யுகோஸ்லாவியா அதிபர் டிஜெமல் பிஜெடிக் (1977), ஈக்வடார் அதிபர் ஜெய்ம் ரோல்டோஸ் அகுலேரா (1981), மொசாம்பிக் அதிபர் சமோரா மிச்செல் (1986), லெபனான் பிரதமர் ரஷீத் சுராமி (1987), பாகிஸ்தான் அதிபர் ஜியா உல் ஹக் (1988), ருவாண்டா அதிபர் ஜுவனல் ஹப்யரிமனா (1994) மாசிடோனியா அதிபர் போரிஸ் டிராஜ்கோவஸ்கி (2004), போலந்து அதிபர் லெக் காசின்ஸ்கி (2010), சிலி முன்னாள் அதிபர் செபாஸ்டியன் பினேரா (2024) எனப் பட்டியல் நீள்கிறது.
2024, மே 19 அன்று அஜர்பைஜான் எல்லையில் அணை திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு தலைநகர் டெஹ்ரானுக்குத் திரும்பிக் கொண்டிருக்கையில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரெய்ஸி பயணித்த "பெல் 212' ரக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி பயணித்த எட்டு பேரும் உயிரிழந்தனர்; கடந்த 2021 டிசம்பர்8-ஆம் தேதி கோவையிலிருந்து குன்னூருக்கு இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி ஜெனரல் விபின் ராவத் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் மட்டுமல்ல, அவரது மனைவியும் உடன் பயணித்த 11 பேரும் சாம்பலானார்கள்.
28% ஹெலிகாப்டர் விபத்துகளுக்கு மோசமான வானிலை காரணம் என்று கூறப்படுகிறது. கனமழை, பனிப்பொழிவு காரணமாக பாதை தெரியாமல் போவது உள்ளிட்டவை ஹெலிகாப்டர் விபத்துகளுக்குக் காரணியாகின்றன. விமானங்களில் இடம்பெறும் தானியங்கித் திறன்கள் விமானியின் கவனச் சிதறல்களை ஈடு செய்கின்றன. ஹெலிகாப்டர்களில் அத்தகைய வசதிகள் இல்லாததால் பயணங்களைத் துல்லியமாகக் கணித்து ஹெலிகாப்டரை இயக்கும் பயிற்சி பெற்றவராக அதன் விமானி இருக்க வேண்டியது அவசியமாகிறது.
பாராமதி ஹெலிகாப்டர் விபத்து விமானப் பாதுகாப்பு குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. அதிவேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் தனியார் விமான சேவைத் துறையின் கண்காணிப்பு முறைமையும், விமான நிலையங்களின் தொடர் கண்காணிப்பில் இயங்காத தனியார் சிறு விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சேவையும், பாராமதி விபத்தைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதிமுறைகளுக்குள் கொண்டுவரப்பட வேண்டும்.
முதலில் பாராமதி போன்ற வானூர்தி நிலையங்கள் முழுமையான சேவைக்கானவை அல்ல. அதிநவீன ஜெட் விமானங்கள், குறிப்பிட்ட கால அட்டவணையில் இயங்கும் வானூர்திகள், முக்கியமான ஆளுமைகளின் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட எந்தவிதக் கட்டமைப்பும் அவற்றில் இல்லை. வானூர்திகள் தரை இறங்குவதற்கான நவீன தொழில்நுட்ப சமிக்ஞைகள், காட்சித் தெளிவில்லாத ஹெலிகாப்டர்களிலும் தெளிவான அறிவுறுத்தல் வழங்கும் தொடர்புகள் இல்லாமல் இருக்கின்றன என்பதைச் சுட்டிக்காட்டத் தோன்றுகிறது.
ஹெலிகாப்டர்கள் என்பதால் நவீன ரகத்தைச் சேர்ந்தவையாக இருந்தாலும், அதற்கேற்ப நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வானூர்தி நிலையங்களும் இருந்தால்தான் விபத்துக்கான வாய்ப்புகள் குறையும். கட்டுப்பாட்டு அறையில் இருந்து வழங்கப்படும் அறிவிப்புகள் விமானிகளால் உறுதிப்படுத்தப்பட வேண்டும். உறுதிப்படுத்தவில்லை என்றால் கட்டுப்பாட்டு அறையிலும் ஓட்டுநர்களிடமும் அபாய ஒலி எழுப்பப்படவேண்டும்.
இந்தியாவில் தனியார் வானூர்தி சேவை அதி விரைவாக வளர்ச்சி அடைந்து வருகிறது. பெரும்பாலான அமைச்சர்களும், அரசியல் தலைவர்களும் ஹெலிகாப்டர்களிலும், தனி விமானங்களிலும் பயணிக்கும் நிலையில், விபத்துகளுக்கான வாய்ப்பும் அதிகரித்து வருகின்றன. அதன் எச்சரிக்கைதான் பாராமதி விபத்து!
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...