ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மொராக்கோ தரும் படிப்பினை...

உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துயரம் வீட்டைவிட்டு, நாட்டைவிட்டு அகதிகளாக இடம்பெயர்வதுதான்.

அகதிகள். - கோப்புப்படம்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 6:00 am IST

உலகில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் துயரம் வீட்டைவிட்டு, நாட்டைவிட்டு அகதிகளாக இடம்பெயர்வதுதான். 2024, ஜூன் வரையிலான காலகட்டத்தின்படி உலகம் முழுவதும் சுமார் 12 கோடி பேர் வலுக்கட்டாயமாக வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களாக உள்ளனர். இவர்களில் 4.3 கோடி பேர் அகதிகள் என்கிற வரையறைக்குள் வருகின்றனர். 7.2 கோடி பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்தவர்கள்.

80 லட்சம் பேர் அகதியாகப் புகலிடம் கோரி போராடி வருபவர்கள்.

1990-களில் ஆண்டுதோறும் சராசரியாக 15 லட்சம் அகதிகள் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்ப முடிந்தது. ஆனால், கடந்த பத்தாண்டுகளாக இந்த எண்ணிக்கை சராசரியாக 3.85 லட்சமாக குறைந்துவிட்டது. இடம்பெயர்வு அதிகரிப்பு விகிதமானது அதற்கான தீர்வு வழங்கும் வேகத்தை வெகுவாக விஞ்சி நிற்கிறது. இதனால், அகதிகளின் துயரநிலை விரைவில் முடிவுக்கு வரும் என்கிற நம்பிக்கை குறைந்து வருவதாக கவலை தெரிவிக்கிறது ஐ.நா. அகதிகள் முகமை.

உலகிலேயே அகதிகள் எண்ணிக்கையில் சிரியா முதலிடம் பிடித்துள்ளது. 2011-இல் அங்கு உள்நாட்டுப் போர் உச்சமடைந்ததைத் தொடர்ந்து இப்போது வரை 1.3 கோடி பேர் வீடுகளைவிட்டு இடம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 74 லட்சம் பேர் உள்நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். 56 லட்சம் பேர் லெபனான், துருக்கி, ஜோர்டான் உள்ளிட்ட நாடுகளில் அகதிகளாகத் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

சிரியாவுக்கு அடுத்த இடத்தில் உக்ரைன் இருக்கிறது.

2022-இல் உக்ரைன் மீதான ரஷியாவின் முழுமையான போரைத் தொடர்ந்து, உக்ரைனில் 37 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 57 லட்சம் பேர் நாட்டைவிட்டே வெளியேறி மால்டோவா, போலந்து, ரோமானியா, ஸ்லோவாகியா, ஹங்கேரி, பெலாரஸ் உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர். இதற்கு அடுத்ததாக ஆப்கானிஸ்தான், வெனிசுலாவில் அகதிகள் பிரச்னை உள்ளது.

அகதிகள் பிரச்னையின் தீவிரத்தை அடுத்தகட்டத்துக்கு கொண்டுசெல்வது போல அமைந்தது கடந்த வாரம் வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோவிலிருந்து அதன் அண்டை நாடான ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சீயடா என்கிற பகுதிக்குள் ஆயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக நுழைந்தது. வடக்கு ஆப்பிரிக்காவின் மத்தியதரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள சீயடாவுக்குள் ஜிப்ரால்டர் நீரீணையைத் தாண்டி மொராக்கோ குடிமக்கள் நுழைந்தது உலகளாவிய கவனத்தைப் பெற்றது.

மொராக்கோவில் நிலவும் வேலைவாய்ப்பு பிரச்னைதான் அந்த நாட்டு மக்களை அகதிகளாக ஸ்பெயினுக்குள் நுழையத் தூண்டியிருப்பது தெரியவந்திருக்கிறது. ஐரோப்பாவின் நுழைவாயில்களில் ஒன்றாக கருதப்படும் ஸ்பெயினுக்குள் நுழைந்துவிட்டால் அங்கிருந்து ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று எப்படியாவது வாழ்க்கையை நடத்திக் கொள்ளலாம் என்கிற நம்பிக்கையில்தான் மொராக்கோ மக்கள் இந்த முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சட்டவிரோதமாக குடியேறும் வெளிநாட்டவர் மீதான ஸ்பெயினின் மென்மையான அணுகுமுறை இதற்குக் காரணம். ஸ்பெயினுக்குள் கடல் வழியாக வரும் சட்டவிரோத குடியேறிகளை உடனடியாகத் திருப்பி அனுப்பாமல், உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று ஸ்பெயின் உச்சநீதிமன்றம் அண்மையில் ஒரு தீர்ப்பை வழங்கியது. இத்தீர்ப்பைத் தவறாக சித்தரித்து, "கடலில் நீந்தி சீயடா எல்லைக்குள் நுழைந்து விட்டால், மொராக்கோவுக்கு யாரும் திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள்' என்று மனிதக் கடத்தல் கும்பல்கள் வதந்தி பரப்பியதே இந்த நெருக்கடிக்குக் காரணம் என ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் குற்றஞ்சாட்டினார்.

ஸ்பெயினின் சீயடாவுக்குள் நுழைந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே 48,000-க்கும் மேற்பட்டோர் மொராக்கோவுக்கு திரும்பிவிட்டாலும், எல்லை தாண்டிய இந்த முயற்சியில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சீயடாவுக்குள் மேலும் சட்டவிரோதமாக யாரும் வருவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் படையினரை ஸ்பெயின் குவித்தது என்றாலும், ஐரோப்பிய நாடுகள் அதைக் கடுமையாக விமர்சித்தன.

குடியேற்றக் கொள்கையில் மென்மையாக நடந்துகொள்ளும் ஸ்பெயினால் ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டவரை அனுமதிக்கும் "ஷெங்கன் ஒப்பந்தத்திலிருந்து' ஸ்பெயினை விலக்கிவைப்பதாகவும் கூறியுள்ளார். இப்போது பிரச்னைக்குரிய சீயட்டா பகுதி ஷெங்கன் ஒப்பந்தப் பகுதிக்குள் வராது என்றாலும், நிலைமையின் தீவிரத்தை உணர்த்துவதற்காக மெலோனி இந்த முடிவை எடுத்ததாகக் கருதப்படுகிறது.

மொராக்கோ அரசின் கொள்கைகள் உள்கட்டமைப்பில் கவனத்தை செலுத்தினாலும் உள்நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிக்கக்கூடியதாக இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் மொராக்கோவின் வேலைக்குத் தகுதியான மக்கள்தொகை 11.4 சதவீதம் அதிகரித்த அதேவேளையில், வேலைவாய்ப்பு 1.5 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக உலக வங்கி கடந்த ஆண்டு தெரிவித்தது.

ஆதலால், மொராக்கோவிலிருந்து சட்டவிரோதமாகவாவது வெளியேறிவிட வேண்டும் என இளைஞர்கள் கருதுவதற்கு பிரதான காரணம் வேலைவாய்ப்பின்மைதான். பிற நாடுகள் கற்றுக்கொள்வதற்கான பாடத்தைக் கற்பித்திருக்கிறது மொராக்கோ.

வான்நோக்கி வாழும் உலகெல்லாம்; மன்னவன்

கோல்நோக்கி வாழும் குடி.

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நோக்கி

வாழ்கின்றன; அதுபோல் குடிகள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர்.

திருக்குறள் (எண் 542) அதிகாரம்: செங்கோன்மை

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.