மணிப்பூரில் கடந்த பல மாதங்களாக வன்முறைச் சம்பவங்கள் நிகழாதிருந்த நிலையில், கடந்த ஏப். 7 முதல் தொடரும் தாக்குதல்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளன. மிகவும் சிறிய மாநிலமான மணிப்பூரில் கடந்த மூன்று ஆண்டுகளாக வன்முறை கட்டுப்படுத்தப்படாதது இந்தியாவின் நற்பெயருக்கு மிகப் பெரும் களங்கமாகும்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, வெறும் 28.55 லட்சம் மக்கள்தொகை கொண்ட மணிப்பூர் மாநிலம் பெரும்பாலும் மலைப்பாங்கான பிரதேசமாகும். அதன் பள்ளத்தாக்கு பகுதிகளில் மைதேயி சமூகத்தினரும் அதைச் சுற்றி உள்ள மலைப் பிரதேசங்களில் நாகா - குகி சமூகத்தினரும் வசிக்கின்றனர். மைதேயி சமூகத்தினர் அதிகம் வசிக்கும் விஷ்ணுபூரில் ஒரு வீட்டின் மீது குகி தீவிரவாதிகள் கடந்த ஏப்.7-ஆம் தேதி குண்டு வீசியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
அதைக் கண்டித்து பாதுகாப்புப் படையினரின் முகாமை போராட்டக்காரர்கள் சூறையாடியபோது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, மைதேயி சமூகத்தினர் அதிகம் வாழும் ஐந்து மாவட்டங்களில் போராட்டம் தொடர்கிறது.
பரபரப்பு அடங்குவதற்குள், நாகா பழங்குடியினர் அதிகம் வசிக்கும் உக்ருல் மாவட்டத்தில் கடந்த ஏப். 18-இல் இருவர் கொல்லப்பட்டனர். இந்தப் பதற்றமான சூழலில், உக்ருல் மாவட்டத்தின் முல்லம் கிராமத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஏப். 24) நிகழ்ந்த மோதலில் குகி சமூகத்தைச் சேர்ந்த இருவரும் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் கொல்லப்பட்டுள்ளனர்.
'ஆயுதம் தாங்கிய நாகா குழுவினர் கடந்த வெள்ளிக்கிழமை காலை 5.30 மணிக்கு முல்லம் கிராமத்துக்குள் புகுந்து சாதாரண மக்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது பல வீடுகளைக் கொளுத்தியதுடன் இருவரைக் கொன்றுவிட்டனர்.
விழித்த மக்கள் தங்களைக் காத்துக் கொள்ள உரிமம் பெற்ற ஆயுதங்களால் தாக்கியதில் எதிர்த்தரப்பில் ஒருவர் உயிரிழந்தார்' என்று குகி மனித உரிமை அமைப்பினர் கூறியுள்ளனர். ஆனால், தங்கள் அமைப்பினர் பாதுகாப்புக்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, குகி தீவிரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர் என்று நாகா கிராம பாதுகாப்புக் குழுவினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இங்குள்ள பல்வேறு சமூகத்தினரிடையே கருத்து வேறுபாடுகள் இப்போது தோன்றியதல்ல, 1960-களில் இருந்தே ஆயுதம் தாங்கிய பல்வேறு குழுக்கள் தனி நாடு கோரி போராடி வருகின்றன. 1980 முதல் அந்த மாநிலம் பாதிக்கப்பட்ட பகுதி (டிஸ்டர்ப்டு ஏரியா) என்று மத்திய அரசால் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில், மைதேயி இனத்தவரை பழங்குடியினர் (எஸ்.டி.) பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்குப் பரிந்துரைக்குமாறு மாநில அரசுக்கு அந்த மாநில உயர்நீதிமன்றம் கடந்த 2023 மார்ச் 27-இல் உத்தரவிட்டது இப்போதைய தொடர் வன்முறைக்கு வித்திட்டது.
இந்தத் தீர்ப்பால் தங்கள் உரிமைகள் பறிபோய்விடும் என்ற எண்ணம் குகி பழங்குடியினரிடையே விதைக்கப்பட்டது. மணிப்பூர் அனைத்துப் பழங்குடியின மாணவர் அமைப்பால் 2023 மே 3-ஆம் தேதி நடத்தப்பட்ட பேரணி வன்முறைக்களமாக மாறியது. இதுவரையில் 260-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்; பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளில் இருந்து வெளியேறி அரசின் நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டிருந்தாலும் அந்த மாநிலத்தின் புவியியல் அமைப்பு அமைதியை நிலைநாட்டுவதில் அவர்களுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. 2022-இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக-வின் பிரேன் சிங் இரண்டாவது முறையாக முதல்வராகப் பொறுப்பேற்றார்.
வன்முறை தொடர்ந்ததால் கடந்த 2025-ஆம் ஆண்டு பிப். 9-ஆம் தேதி அவர் பதவி விலகினார். ஓராண்டு கால குடியரசுத் தலைவர் ஆட்சிக்குப் பின்னர் பாஜக-வின் கேம்சந்த் சிங் கடந்த பிப். 4-ஆம் தேதி முதல்வராகப் பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது குகி தேசிய ராணுவம், காங்லெய்பாக் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த 12 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. தீவிரவாதிகளின் நிதிக்கு ஆதாரமான கஞ்சா செடிகள் பல ஏக்கர் பரப்பளவில் அழிக்கப்பட்டன. அப்படி இருந்தும் இப்போதும் வன்முறை கட்டுக்கடங்காமல் தொடர்கிறது என்றால், எல்லை கடந்து மியான்மரிலிருந்து ஆயுதங்கள் கடத்தப்படுகின்றன என்றுதான் பொருள். எதிரணியினரைத் தாக்குவதற்கு தீவிரவாதக் குழுக்கள் இப்போது ட்ரோன்களையும் ராக்கெட் லாஞ்சர்களையும் பயன்படுத்துவது புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
பல்வேறு சமூகக் குழுக்களிடையே செயல்பட்டுவரும் ஆயுதம் தாங்கிய, சுயநல, பிரிவினைவாத சக்திகள் மக்கள் பிளவுபட்டிருப்பதையே விரும்புகின்றன. அதனால் அவை பொய்களையும் தவறான தகவல்களையும் பரப்பி எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றுகின்றன.
இதுபோன்ற சக்திகள் அடையாளம் காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். சமூக, புவியியல் அமைப்புகள் காரணமாக இது மிகுந்த சவாலானதாகும். பல்வேறு சமூகங்களிலும் அமைதியை விரும்புபவர்கள் முன்னிறுத்தப்பட்டு அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அதிகம் தாமதிக்காமல் வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைத்து அமைதியை நிலைநாட்டுவது அரசின் கடமை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்
மணிப்பூரில் இன்று 2 முறை நிலநடுக்கம்!

மணிப்பூரில் வெடிகுண்டு தாக்குதல்! 2 குழந்தைகள் பலி!

மணிப்பூரில் இந்திய ராணுவ முகாமின் மீது குகி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

