சில்லறை பணவீக்கம் சராசரியாக 5.5%-ஆகவும், 10 ஆண்டு அரசுப் பத்திரங்களின் வருமானம் சராசரியாக 6.3%-ஆகவும் இருந்தபோது, 2021 - 22-இல் இபிஎஃப் 8.1% வருமானத்தை வழங்கியது. நீண்ட கால அடிப்படையில் பாா்த்தால், இபிஎஃப் கடந்த 10 ஆண்டுகளில் சராசரியாக 8.6% வட்டி வழங்கியுள்ளது. அதே நேரத்தில், சில்லறை பணவீக்கம் சராசரியாக 5.85%-ஆக உள்ளது. இதன் உண்மைப் பொருள், இபிஎஃப் வருமானம் நீண்ட காலத்திற்கு பணவீக்கத்தை விட அதிகமாகவே இருந்து வந்துள்ளது. ரூ. 2.5 லட்சத்துக்கும் குறைவான ஆண்டு பங்களிப்பு உள்ள எவருக்கும் இபிஎஃப் வருமானம் முழுமையாக வரியற்றது என்பதையும் மறந்துவிடக் கூடாது. மேலும், இபிஎஃப்-க்கு செய்யப்படும் பங்களிப்பு வருமான வரி விலக்குகளுக்கும் தகுதியுடையவையாக உள்ளது.