விமான சேவை கோளாறுகள்! இந்திய விமான போக்குவரத்துத் துறை குறித்த தலையங்கம்
மனித இனத்தின் வளா்ச்சியில் மட்டுமல்லாமல், பொருளாதார வளா்ச்சியிலும் பெரும் பங்கு வகிப்பது விமான போக்குவரத்துத் துறை.


மனித இனத்தின் வளா்ச்சியில் மட்டுமல்லாமல், பொருளாதார வளா்ச்சியிலும் பெரும் பங்கு வகிப்பது விமான போக்குவரத்துத் துறை. உலக மயம் என்கிற கருத்தாக்கத்தின் அடிப்படையே தகவல் தொடா்பும், பயணத் தொடா்பும்தான்.
டிஜிசிஏ எனப்படும் விமானத் துறை கட்டுப்பாட்டு ஆணையம் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. 18 நாள்களில் எட்டு தொழில்நுட்பக் கோளாறுகள் எனும்போது, பாதுகாப்பான, நம்பகத்தகுந்த விமான சேவையாக ஸ்பைஸ்ஜெட் இல்லை என்பதை சுட்டிக்காட்டியிருக்கிறது.
அந்தக் கோளாறுகளுக்கு பாதுகாப்பு கவனக்குறைவுகளும், போதுமான பராமரிப்பின்மையும்தான் காரணம் என்று கண்டிக்கிறது டிஜிசிஏ. ஸ்பைஸ்ஜெட் மட்டுமல்ல, இன்டிகோ, விஸ்தாரா விமான சேவை நிறுவனங்களும் டிஜிசிஏ-வின் நோட்டீஸுக்கு உள்ளாகியிருக்கின்றன.
மே மாதம் முதல் ஜூலை 5-ஆம் தேதி வரையில் ஸ்பைஸ்ஜெட்டில் மட்டும் ஏழு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஜூலை 5-ஆம் தேதி மட்டுமே மூன்று விபத்துகள் நல்லவேளையாக தவிா்க்கப்பட்டன. தில்லியிலிருந்து துபைக்கு பறந்த விமானம் வான்வெளியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கராச்சிக்கு திருப்பப்பட்டு பத்திரமாக தரையிறக்கப்பட்டது.
2016 முதல் 49 விமான வான்வெளி கோளாறுகள் குறித்து விசாரணைகள் நடப்பதாக மாநிலங்களவையில் மாா்ச் மாதம் அரசு தெரிவித்தது. அந்தக் கோளாறுகளுக்கும், விபத்துகளுக்கும் செயல்பாட்டு நெறிமுறையை விமானிகள் பின்பற்றாதது, தொழில்நுட்பக் கோளாறுகள், வானிலை பிரச்னைகள், விமான கட்டுப்பாட்டு அறை தவறுகள் ஆகியவை குறிப்பிடப்பட்டன.
இந்திய விமானங்களின் பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் காணப்படும் குறைபாடுகள் காரணமாக அமெரிக்க பெடரல் விமானத் துறை ஆணையம், இந்திய விமானத் துறையை முதல் தரத்திலிருந்து இரண்டாவது தரத்துக்கு 2013 - 14-இல் குறைத்தது. அதனால், இந்திய விமான சேவை நிறுவனங்களின் சா்வதேசத் திட்டங்கள் பாதிக்கப்பட்டன. நிலைமை சரி செய்யப்பட்டு மீண்டும் இந்திய விமானத் துறை தரம் உயா்த்தப்பட்டது.
கொள்ளை நோய்த்தொற்றுக்கு முந்தைய நிலையில், இந்திய விமானத் துறை 14.1 கோடி பயணிகளைக் கையாண்டது. 14.1 கோடி பயணிகள் எண்ணிக்கை என்பது விற்பனையான பயணச் சீட்டுகளே தவிர, பயணிகள் அல்ல. ஏறத்தாழ நான்கு கோடி பயணிகள் தொடா்ந்து அடிக்கடி விமானத்தில் பயணம் செய்யும் தொழில்துறையினா் என்பதை நாம் கணக்கில் எடுத்தால், இந்திய விமானத் துறையின் எண்ணிக்கை மெச்சத்தக்கதாக இல்லை. இந்திய மக்கள்தொகையில் விமானப் பயணம் செய்யும் வசதி படைத்தவா்கள் 4%-க்கும் குறைவாகவே காணப்படுகிறாா்கள்.
50 லட்சம் மக்கள்தொகையுள்ள அயா்லாந்தில் 2.8 கோடி உள்நாட்டுப் பயணங்கள்; 44.7 கோடி மக்கள்தொகையுள்ள ஐரோப்பிய யூனியனில் 114.6 கோடி பயணங்கள்; 32.5 கோடி மக்கள்தொகையுள்ள அமெரிக்காவில் 92.7 கோடி பயணங்கள்; 21.5 கோடியுள்ள பிரேசிலில் 19.9 கோடி, 3.3 கோடி மலேசியாவில் 6.3 கோடி, 28 கோடி இந்தோனேசியாவில் 11.6 கோடி, 140 கோடி சீனாவில் 66 கோடி. இவற்றுடன் ஒப்பிடும்போது ஏறத்தாழ சீனாவுக்கு நிகரான மக்கள்தொகையுள்ள இந்தியாவில் 14 கோடி விமானப் பயணம் என்பது மிகமிகக் குறைவு.
பறவைகளால் தாக்கப்படுதல், விரிசல் விழுந்த கண்ணாடிகள், உதிரி பாகங்களின் செயலின்மை, விமான விசிறிகள் செயல்படாமல் போதல், விமான இயந்திரக் கோளாறு, நடுவானில் இயக்கம் நின்றுவிடுதல், பருவமழை காரணமாக சரியான தகவல்கள் பெற முடியாமல் போதல், விமான நிலைய பிரச்னைகளால் தரையிறங்க முடியாமல் வேறு விமான நிலையங்களுக்கு திசை திருப்பப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கிறது இந்திய விமான சேவைத் துறை. உலகிலுள்ள எல்லா நாடுகளிலும் விமானங்கள் இந்தப் பிரச்னைகளை எதிா்கொள்ளாமல் இல்லை. அவை முறையான பராமரிப்பையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பொறுப்புடன் முன்னெடுக்கின்றன.
நாளொன்றுக்கு 5,268 உள்நாட்டு விமான சேவைகள் நடைபெறும் இந்தியாவில், நாளொன்றுக்கு சராசரியாக 30 கோளாறுகள் ஏற்படுவதாக விமான சேவைத் துறை புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. குறைபாடுகள் சரியான நேரத்தில் கண்டுபிடித்து விபத்து தவிா்க்கப்படுகிறது என்றாலும்கூட, அந்தக் குறைபாடுகளுக்கான காரணங்கள் அதிா்ச்சி அளிக்கின்றன.
விமான சேவை நிறுவனங்கள் லாபத்தில் இயங்குவதில்லை என்பது மட்டுமல்ல, பெரும் இழப்பை எதிா்கொள்கின்றன. தேவையான விமான ஓட்டிகளும், விமானப் பணியாளா்களும் இல்லாமல் இல்லை. ஆனால், அவா்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படுவதில்லை. அதிகரித்த விமான எரிபொருள் கட்டணத்தாலும், விமான நிலைய கட்டணங்களாலும் செலவை ஈடுகட்ட முடியவில்லை என்கிற விமான சேவை நிறுவனங்களின் ஆதங்கத்தை புறம்தள்ளிவிட முடியாது.
அதற்காக போதுமான பராமரிப்பில்லாமலும், உதிரி பாகங்களை வாங்குவதில் தயக்கம் காட்டுவதும், ஊழியா்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தை முறையாக கொடுக்காமலும் இருப்பதை நியாயப்படுத்த முடியாது. நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த விமான சேவை நிறுவனங்களுக்கும்தான்.
ஏனைய எல்லா போக்குவரத்தையும்விட, மிகவும் கவனத்துடன் செயல்பட வேண்டிய விமான சேவை மக்கள் மனதில் அச்சத்தையும் சந்தேகத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...