இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

அடையாளமல்ல, அங்கீகாரம்! நியமனப் பதவிகளில் பிரதமர் மோடியின் அணுகுமுறை குறித்த தலையங்கம்

2014 முதல் நரேந்திர மோடி அரசின் முடிவுகள் பெரும்பாலும் வரவேற்புக்குரியவையாகவும், விமா்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாகவும்தான் இருந்திருக்கின்றன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:46 am

ஆசிரியர்

பத்ம விருதுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதிலும் சரி, முக்கியமான பொது நியமனங்களிலும் சரி 2014 முதல் நரேந்திர மோடி அரசின் முடிவுகள் பெரும்பாலும் வரவேற்புக்குரியவையாகவும், விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையாகவும்தான் இருந்திருக்கின்றன. அந்த வகையில், தற்போது மாநிலங்களவைக்கான நியமன உறுப்பினர்களாக 'இசைஞானி' இளையராஜா, 'தடகளத் தாரகை' பி.டி. உஷா, 'தர்மஸ்தலா' கோயில் நிர்வாக அறங்காவலர் வீரேந்திர ஹெக்கடே, பிரபல திரைக்கதை எழுத்தாளர் வி.வி. விஜயேந்திர பிரசாத் ஆகிய நால்வரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசியல் சாசன நிர்ணய சபை விவாதத்தின்போது, அரசியல் சாராத பிரபலங்களின் சமூகப் பங்களிப்புகள் அங்கீகரிக்கப்படும் விதத்தில் அவர்களை நியமன உறுப்பினர்களாக குடியரசுத் தலைவர் நியமிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பல்வேறு துறைகளில் தங்களது திறமையாலும், அறிவாற்றலாலும் உச்சம் தொட்டவர்களின் ஆலோசனைகளும், அறிவுரைகளும் சட்டம் இயற்றும் மாமன்றத்துக்குத் தேவை என்று அரசியல் சாசன சபை கருதியது. அதன் விளைவாகத்தான், மாநிலங்களவையில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12 பேரை நியமன உறுப்பினர்களாக்குவது என்கிற முடிவு எடுக்கப்பட்டது.

இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைசிறந்த ஆளுமைகள் பலர் மாநிலங்களவையில் நியமன உறுப்பினர்களாக இருந்து பெரும் பங்களிப்பு நல்கி இருக்கிறார்கள். பின்னாளில் குடியரசு துணைத் தலைவராகவும், குடியரசுத் தலைவராகவும் இருந்த டாக்டர் ஜாகீர் உசேனை, தேசத்துக்கு அடையாளம் காட்டியது மாநிலங்களவைதான். அல்லாடி கிருஷ்ணசுவாமி ஐயர், சத்யேந்திரநாத் போஸ், ருக்மிணிதேவி அருண்டேல், மால்கம் ஆதிசேஷய்யா, சலீம் அலி, பண்டிட் ரவிசங்கர், எம்.எஸ். சுவாமிநாதன் என்று மாநிலங்களவையின் தரத்தையும் கெளரவத்தையும் உயர்த்தியவர்கள் ஏராளமானோர். 

பத்திரிகையாளர்கள் குஷ்வந்த் சிங், குல்தீப் நய்யார், 'சோ' ராமசாமி, எழுத்தாளர்கள் ஆர்.கே. நாராயண், அம்ருதா ப்ரீதம், கார்டூனிஸ்ட்கள் ஆர்.கே. லக்ஷ்மண், அபு ஆபிரஹாம் என்று ஆளுமைகளின் பட்டியல் நீள்கிறது. திரைத்துறையினர் என்று எடுத்துக்கொண்டால் பிருத்விராஜ் கபூரில் தொடங்கி வைஜயந்திமாலா பாலி, மிருணாள் சென், லதா மங்கேஷ்கர், நர்கீஸ், ஹேமமாலினி, ஷியாம் பெனகல், சிவாஜி கணேசன், ரேகா என்று பட்டியல் நீளும். பொதுநலத் தொண்டில் ஈடுபட்டவர்கள், துறை சார்ந்த வல்லுநர்கள் என்று பலரும் நியமன உறுப்பினர்களாக மாநிலங்களவைக்குச் சென்று, அவரவர் அளவில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.

தற்போது மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்டு இருக்கும் நான்கு பேருமே எந்தவொரு அரசியல் கட்சியிலும், குறிப்பாக ஆளும் பாஜகவில் உறுப்பினர்கள் அல்ல. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெரும்பாலான நியமனங்கள், வெளிப்படையான காங்கிரஸ் ஆதரவாளர்களுக்குத்தான் வழங்கப்பட்டன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

நடிகை நர்கீஸ் ஆனாலும், எழுத்தாளர் குஷ்வந்த் சிங் ஆனாலும் அவர்கள் இந்திரா காந்தியின் வெளிப்படையான ஆதரவாளர்கள். சிவாஜி கணேசன் கட்சி உறுப்பினர். திண்டிவனம் ராமமூர்த்தி, மணிசங்கர் ஐயர் போன்றவர்கள் கட்சித் தலைவர்கள். 2014 மக்களவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளைக் குறிவைத்து சச்சின் டெண்டுல்கர் மாநிலங்களவையின் நியமன உறுப்பினராக்கப்பட்டார் என்பதை சுட்டிக்காட்டத் தோன்றுகிறது. அவற்றுடன் ஒப்பிடும்போது இப்போதைய நான்கு நியமனங்களும் பாராட்டுக்குரியவை.

கர்நாடக மாநிலம் தர்மஸ்தலாவுக்குப் போய் வந்த யாரிடம் கேட்டாலும் வியந்து பாராட்டும் நபர் வீரேந்திர ஹெக்கடே. அவரது அன்னதானத் திட்டத்தைப் பின்பற்றித்தான் திருப்பதி உள்ளிட்ட எல்லா தென்னிந்தியக் கோயில்களிலும் அன்னதானம் நடத்தும் வழக்கம் பின்பற்றப்படுகிறது. அவர் தர்மஸ்தலாவைச் சுற்றி இருக்கும் பகுதிகளில் நடத்திவரும் சமூகப் பங்களிப்புகளுக்காக அவருக்கு மாநிலங்களவை உறுப்பினர் மட்டுமென்ன, பாரத ரத்னாவே கொடுத்து கெளரவிக்கலாம்.

பி.டி. உஷாவின் வரவுக்குப் பிறகுதான், தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை இந்தியா வெல்லத் தொடங்கியது. திரைக்கதை கர்த்தா விஜயேந்திர பிரசாதின் வரவு, இந்திய சினிமாவை ஹாலிவுட் பிரம்மாண்டத்திற்கு உயர்த்தி இருக்கிறது என்பதில் ஐயப்பாடு இருக்கிறதா என்ன?

'இசைஞானி' இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமனப் பதவியா என்று கேள்வி எழுப்புவது, தமிழனின் தன்மானத்தையும், தகுதியையும் கேள்வி கேட்பதற்கு ஒப்பானது. 'பாபா சாகேப்' அம்பேத்கரின் கனவுகளை பிரதமர் நரேந்திர மோடி நனவாக்குகிறார் என்கிற இளையராஜாவின் கருத்து நிஜம். அதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் கூற முடியும். யார் யாரையோ அம்பேத்கருடன் ஒப்பிட முடியுமானால், இளையராஜா சொன்ன நிஜத்தில் தவறே இல்லை. 

சமீபத்தில் ஹைதராபாதில் நடந்த பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் தென்னிந்தியாவில் கட்சியை வளர்ப்பது குறித்த முனைப்பைத் தொடர்ந்து, தென்னிந்திய மாநிலங்களில் இருந்து நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பவர்கள் அதற்கான தகுதியுடையவர்கள் எனும்போது விமர்சனங்களின் முனை மழுங்கி விடுகிறது. 

திரெளபதி முர்முவை குடியரசுத் தலைவர் வேட்பாளராக்கி இருப்பதும், இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமனப் பதவி வழங்கி இருப்பதும் அடையாள அரசியலும் அல்ல; ஆதாய அரசியலும் அல்ல. பாபா சாகேப் அம்பேத்கர் தலைமையில் உருவான இந்திய அரசியல் சாசனத்தின் வெற்றி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.