சிக்கிமில் தொடர் நிலநடுக்கம்! அச்சத்தில் மக்கள்!நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

காங்கிரஸின் பலவீனம்! | அமர் ஜவான் ஜோதி விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி எடுத்த நிலைப்பாடு குறித்த தலையங்கம்

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:17 am

ஆசிரியர்

 வரலாற்றில் நியாயமாகப் பெற வேண்டிய இடத்தை காங்கிரஸ் கட்சி ஒன்றன்பின் ஒன்றாக இழந்து வருகிறது. அந்தக் கட்சியின் பலவீனத்தை நன்றாகப் புரிந்துகொண்டிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியும், பாரதிய ஜனதா கட்சியும் அதை விரைவுபடுத்த வியூகங்களை வகுப்பதைக்கூட காங்கிரஸ் தலைமை புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.
 எந்தவொரு நாட்டிலும் தேசத்துக்காகப் போரிட்டு உயிர்நீத்த வீரர்களின் நினைவுச் சின்னங்கள் போற்றப்படுகின்றன. வீர மரணம் எய்தியவர்களுக்காக உருவாக்கப்படும் போர் நினைவிடங்கள் எந்தவொரு நாட்டிலும் உள்ளூர், வெளியூர் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் இடங்கள். அந்தவகையில் அமைந்ததுதான் தலைநகர் புதுதில்லியில் ராஜ பாதையில் அமைந்த இந்தியா கேட்.
 பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தில், குறிப்பாக முதலாம் உலகப் போரில் உயிரிழந்த இந்திய வீரர்களின் நினைவாக இந்தியா கேட் 1931-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் காலனிய அரசுக்காக ஏறத்தாழ 1.5 லட்சம் இந்திய வீரர்கள் தங்களது உயிரை இழந்திருக்கிறார்கள். இந்தியா கேட் என்பது அவர்களுக்காக எழுப்பப்பட்ட நினைவுச் சின்னம் என்பதைவிட, அந்த வீரர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக பிரிட்டிஷ் காலனிய அரசின் பிராயச்சித்தம் என்றுதான் கூற வேண்டும்.
 இந்தியா விடுதலை பெற்று 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்திய விடுதலைக்கு முன், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் இந்திய தேசிய ராணுவத்தில் தொடங்கி அதற்குப் பிறகு நடந்த பிரிவினையையொட்டி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், சீனப் போர், பாகிஸ்தானுடனான இரண்டு யுத்தங்கள், கார்கில் போர் என்று ரத்தம் சிந்திய இந்திய வீரர்களின் எண்ணிக்கை ஏராளம். அவர்களுக்கான போர் நினைவுச் சின்னம் 2019 பிப்ரவரி 25-ஆம் தேதிதான் அமைக்கப்பட்டது.
 வங்க தேச விடுதலையையொட்டிய 1971-இல் பாகிஸ்தானுடனான போரில் பல வீரர்கள் உயிர் நீத்தனர். அப்போதே போர் நினைவுச் சின்னமொன்று எழுப்பப்பட்டிருக்க வேண்டும். 1972-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இந்தியா கேட்டில் அமர் ஜவான் ஜோதி என்ற அணையா விளக்கை உயிர் நீத்த இந்திய வீரர்களின் நினைவாக ஏற்படுத்தினார்.
 இந்தியா கேட்டிலிருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் 2019-ஆம் ஆண்டில் நரேந்திர மோடி அரசால் அமைக்கப்பட்டிருக்கும் தேசியப் போர் நினைவிடத்தில், சுதந்திர இந்தியாவில் உயிர்த் தியாகம் செய்த 25,942 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டு அணையா ஜோதி ஒன்றும் அங்கே நிறுவப்பட்டிருக்கிறது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியில் உயிர் நீத்த வீரர்களுக்கான நினைவிடத்திலிருந்த அமர் ஜவான் ஜோதியை முழு ராணுவ மரியாதையோடு புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் போர் நினைவிடத்திலுள்ள ஜோதியுடன் இணைத்திருக்கிறார்கள். இதை வரவேற்றிருக்க வேண்டிய காங்கிரஸ் கட்சி விமர்சித்திருக்கிறது.
 இந்தியா கேட் பகுதியில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிரம்மாண்டமான சிலை ஒன்று நிறுவப்பட இருக்கிறது. ராஜ பாதையில் இருந்த ஜார்ஜ் சக்கரவர்த்தியின் சிலை சுதந்திர இந்தியாவில் அகற்றப்பட்டு அங்கே அண்ணல் காந்தியடிகளின் சிலையை நிறுவியிருக்க வேண்டும். தனது ஆட்சிக்காலத்தில் காங்கிரஸ் அதைச் செய்ய விரும்பாததாலோ, தவறியதாலோ இப்போது பாஜக அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. அங்கே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலையை நிறுவி அவரை வெற்றிகரமாகத் தனதாக்கிக் கொண்டுவிட்டது பாஜக.
 சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை ஏற்படுத்தியபோது அதில் நான்கு படைப் பிரிவுகளை உருவாக்கினார். அவற்றுக்கு காந்தி பிரிகேட், நேரு பிரிகேட், மௌலானா ஆசாத் பிரிகேட், சுபாஷ் போஸ் பிரிகேட் என்று பெயரிட்டார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? இந்திய தேசிய ராணுவத்தை "ஆசாத் ஹிந்த் ஃபாஜ்' என்று உருதுவில் அழைத்தாரே தவிர, "சுதந்திர பாரத் சேனா' என்று ஹிந்தியில் அழைக்கவில்லை.
 கருத்து வேறுபாடுகளுக்கு இடையிலும்கூட காந்திஜியையும் நேருவையும் வியந்து பாராட்டியவர் நேதாஜி. ஆனால், அவருக்கு உரிய இடமும் மரியாதையும் சுதந்திர இந்தியாவில் காங்கிரஸ் தலைமையால் வழங்கப்படாததால் இப்போது நேதாஜி போஸ் பாஜகவின் ஹீரோவாகிவிட்டார்.
 சர்தார் சரோவர் அணை என்று பெயரிட்டு அங்கே 182 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்டமான சர்தார் வல்லபபாய் படேலின் சிலையை நிறுவியிருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. காங்கிரஸ் தலைமையால் சர்தார் படேலுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவமும் கட்சியாலும், ஆட்சியாலும் வழங்கப்படாமல் அவரையும் பாஜகவுக்கு தாரை வார்த்துக் கொடுத்துவிட்டது காங்கிரஸ்.
 ஜவாஹர்லால் நேரு இருந்தது வரை அண்ணல் காந்தியடிகளுக்கு காங்கிரஸில் ஓரளவுக்கு முக்கியத்துவம் இருந்து வந்தது. 1969 காங்கிரஸ் பிளவும், இந்திரா காந்தியின் தலைமையும் விடுதலைப் போராட்ட காலத்து காங்கிரஸ் கட்சியுடனான தனது தொடர்புகளை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அறுத்து எறிந்து நேரு குடும்பம் மட்டுமே காங்கிரஸ் கட்சி என்கிற தோற்றத்தை ஏற்படுத்த முனைந்தது. இப்போது ஜவாஹர்லால் நேருவும், இந்திரா காந்தியுமேகூட இன்றைய காங்கிரஸாருக்கு அந்நியப்பட்டவர்கள்.
 காங்கிரஸ் தலைமையின் பலவீனத்தைத் தனது பலமாக்கிக் கொள்கிறது பாஜக. காங்கிரஸ் தலைமையோ அது தெரியாமல், தனது தலைவர்களுக்கு பாஜக செலுத்தும் மரியாதையை விமர்சித்துக் கொண்டிருக்கிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.