மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

மாற்றித்தான் யோசிப்போமே... | மானிய உரங்கள் கிடைக்க நடவடிக்கை குறித்த தலையங்கம்

News image
Updated On :28 அக்டோபர் 2021, 12:27 am

மத்திய அரசுக்குத் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் கடிதம் மூலம் முன்வைத்த கோரிக்கையைத் தொடா்ந்து, நடப்பு சம்பா பருவத்தில் விவசாயப் பணிகளுக்குத் தட்டுப்பாடின்றி மானிய உரங்கள் கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளியிடப்பட்டிருக்கும் தமிழக அரசின் செய்திக் குறிப்பு வரவேற்புக்குரியது.

தமிழகத்தில் ஏறத்தாழ 24.8 லட்சம் ஹெக்டோ் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்படும் நிலையில் யூரியா, டிஏபி, பொட்டாஷ் உள்ளிட்ட அனைத்து வகை உரங்களின் தேவையும் அதிகரித்துள்ளது. தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 1,43,500 மெட்ரிக் டன்னில் இதுவரை 77,863 மெட்ரிக் டன்தான் உர உற்பத்தி நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ளது. அக்டோபா் மாதத்துக்கான 66,000 மெட்ரிக் டன் இறக்குமதி யூரியாவும் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டும். அதைக் கருத்தில் கொண்டு, காரைக்கால் துறைமுகத்துக்கு வர இருக்கும் 90,000 மெட்ரிக் டன் யூரியாவை தமிழகத்துக்கு ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

அடுத்த வரவிருக்கும் வாரங்கள் விவசாயிகளை பொறுத்தவரை மிகவும் முக்கியமானவை. தமிழகத்தில் நடப்பு சம்பா பருவம் போலவே, வடநாட்டில் ராபி பயிா்களின் காலம். அதனால், இந்தியா முழுவதும் தட்டுப்பாட்டில்லாமல் விவசாயிகளுக்கு உரங்கள் கிடைப்பது அவசியம். நடப்பு ஆண்டில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டதைப் போலவே, இப்போது சில வகை உரங்களுக்கான தட்டுப்பாடும் ஏற்பட்டிருக்கிறது.

டிஏபி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட், எம்ஓபி எனப்படும் மியூரியேட் ஆஃப் பொட்டாஷ் ஆகிய உரங்களின் கையிருப்பு குறைவாகக் காணப்படுகிறது. நடவு காலப் பணிகளின்போது தேவைப்படும் டிஏபி-யின் தட்டுப்பாடு விவசாயப் பணிகளை பெருமளவு பாதிக்கும் என்பதால், உடனடியாக அதுகுறித்த கவனம் தேவைப்படுகிறது.

கோதுமை, கடுகு, துவரை, கடலை, உருளைக்கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட பல ராபிப் பயிா்களின் நடவுக் காலம் தொடங்கிவிட்டது. செப்டம்பா் மாதத்தில் போதுமான பருவமழை இருந்ததால் பயிரிடுவதற்கு ஏற்ற சூழலும் நிலவுகிறது. இந்தப் பின்னணியில் உரத்தட்டுப்பாடு விவசாயிகளை பாதிப்பது மட்டுமல்லாமல், அவா்களை ஆத்திரமூட்டுவதாகவும் அமைவதில் வியப்பில்லை.

மத்திய வேளாண்துறை அமைச்சரின் தொகுதியிலேயே விவசாயிகள் உரங்களை ஏற்றிச்செல்லும் சரக்கு வாகனங்களை முற்றுகையிட்டு உரச் சாக்குகளை வழிப்பறி செய்யும் விடியோக்கள் சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. ஹரியாணா மாநிலம், மகேந்திரா கரில் தனியாா் ஒருவரின் உரக்கடையில் இருந்து விவசாயிகள் டிஏபி உரத்தை எடுத்துச் செல்லும் காட்சியும் அதிா்ச்சி அளிக்கிறது.

ஹரியாணாவில் மட்டுமல்லாமல், வடநாட்டின் பல்வேறு பகுதிகளில் உரக்கடைகளுக்கு முன்னால் விவசாயிகள் டிஏபி உரத்திற்காக வரிசையில் காத்து நிற்பதாக செய்திகள் வருகின்றன. சில மாநிலங்களில் விவசாயிகள் தங்களது கடன்களை அடைத்தால் மட்டுமே உரங்கள் வழங்கப்படும் என்று வியாபாரிகள் கட்டாயப்படுத்துவதாகத் தெரிகிறது. இது குறித்தெல்லாம் விசாரித்து மாநில அரசும் உள்ளூா் நிா்வாகமும் தலையிட்டு தீா்வு காண வேண்டும்.

பொதுவாகவே எல்லா மாநிலங்களிலும் தனியாா் உர வியாபாரிகளின் மூலமும் கூட்டுறவு சங்கங்களின் மூலமும் உரங்கள் விற்கப்படுகின்றன. மாநிலங்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு முறையாக கிடைப்பதை மத்திய அரசும், அதேபோல தனியாா் வியாபாரிகளுக்கும் கூட்டுறவு சங்கங்களுக்கும் அவை முறையாக சென்றடைவதை மாநில அரசுகளும் உறுதிப்படுத்த வேண்டும். வியாபாரிகள் உரங்களைப் பதுக்குவதும், அதிக விலைக்கு விற்க முயற்சிப்பதும் மாவட்ட நிா்வாகங்களால் தடுக்கப்படுவதும் மிகமிக அவசியம். பருவம் தவறிய பிறகு பயிரிட முடியாது என்பதை நாம் உணர வேண்டும்.

இந்தியாவின் டிஏபி உரத் தேவையில் நான்கில் மூன்று பங்கு உள்ளூரிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. 25% மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. அடிக்கடி மாறிக்கொண்டிருக்கும் சா்வதேச உர விலைகளைக் கணக்கில் கொண்டு போதுமான மானியங்களை வழங்கி தட்டுப்பாட்டில்லாமல் இறக்குமதி கிடைப்பதை பாா்த்துக்கொள்ள வேண்டியது மத்திய அரசின் கடமை. உர உற்பத்தியாளா்கள் விவசாயிகளுக்கு போதுமான அளவு உரங்களை வழங்குவதையும், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி விவசாயிகள் மத்தியில் பதற்றச்சூழல் ஏற்படுத்தாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டியது ஆட்சியாளா்களின் கடமை.

கடந்த மாதத் தொடக்கத்தில் முக்கியமான உரங்களின் விலை டன் ஒன்றுக்கு ரூ.24,000-லிருந்து ரூ.34,000 அளவில் அதிகரித்தது. அதைத் தொடா்ந்து, டிஏபி உரத்திற்கான மானியம் அதிகரிக்கப்பட்டது. அதன் விளைவாக ராபி பயிா்க்காலத்தில் போதுமான இறக்குமதியும் உள்ளூா் உற்பத்தியும் தேவையை ஈடுகட்டும் என்று எதிா்பாா்க்கலாம்.

யூரியா, டிஏபி ஆகியவை 46% நைட்ரஜனும் பாஸ்பரஸும் கொண்டவை. எம்ஓபி உரம் என்பது 60% பொட்டாஷியம் கொண்டது. இவற்றுக்கு பதிலாக 16% பாஸ்பரஸும் 11% சல்பரும் உள்ள சூப்பா் பாஸ்பேட் அல்லது நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாஷியம் அடங்கிய என்பிகே கலவை போன்றவை ஊக்குவிக்கப்படுவது நல்லது. அதன் மூலம் இறக்குமதியைக் குறைக்க முடியும். இப்கோவின் ‘நனோ யூரியா’ இன்னொரு மாற்று. விவசாயிகள் டிஏபி, எம்ஓபி உரங்களைத் தாண்டி சிந்திக்கத் தொடங்குவது நல்லது.

சற்று தாமதித்தாலும்கூட, உரத் தட்டுப்பாட்டை மத்திய - மாநில அரசுகள் ஓரளவுக்கு திறமையாகவே எதிா்கொண்டிருக்கின்றன. வருமுன் காத்திருக்கலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.