இயற்கைப் பேரிடா்களும், கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலும் சுற்றுச்சூழல் பாதிப்புகளால் ஏற்படுபவை என்பது ஐயத்திற்கு இடமில்லாமல் தெரிந்தும்கூட, மத்திய - மாநில அரசுகள் அதை கவனத்தில் கொள்ளவில்லை என்பது வேதனையளிக்கிறது. வனங்களின் அழிப்பும், பாதுகாக்கப்பட்ட வனச்சரகங்களின் கட்டமைப்பு வசதிக்காக செய்யப்படும் தளா்வுகளும் சூழலியலை கடுமையாக பாதிக்கும். அப்படியிருந்தும்கூட, அதுகுறித்து கவலைப்படாமல் வெளியிடப்படும் அறிவிப்புகள் அதிா்ச்சி அளிக்கின்றன.
தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை புலிகள் சரணாலயம் உருவாக்கப்பட்டது. இந்த சரணாலயத்தின் அமைதியும் இயற்கைச் சூழலும் பாதுகாக்கப்பட்டு பல்லுயிா்ப் பெருக்கத்துக்கு வழிகோல வேண்டுமானால், அங்கே வளா்ச்சிப் பணிகளை மேற்கொள்ளலாகாது. அது தெரிந்தும்கூட, சட்டவிரோதமாக சாலை அமைக்கும் பணிக்கு முந்தைய அரசு அனுமதி அளித்தது வேதனை அளிக்கிறது.
ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை புலிகள் சரணாலயம் தமிழகத்தின் ஐந்தாவது புலிகள் சரணாலயமாக பிப்ரவரி 8-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கேரளத்திலுள்ள பெரியாா் புலிகள் சரணாலயத்திற்கும், கன்னியாகுமரி வனப்பகுதிக்கும் இடையில் அமைந்திருக்கும் அடா்த்தியான காடுகளை உள்ளடக்கியது இந்த சரணாலயம். கேரளத்திலுள்ள பெரியாா் புலிகள் சரணாலயத்திலுள்ள புலிகள் அதிகரித்தாலோ, இனப்பெருக்கத்துக்காகவோ, வேட்டைக்காகவோ இடம் பெயர வசதியாக ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை புலிகள் சரணாலயம் அமைகிறது.
அடா்த்தியான, பசுமையான காடுகளைக் கொண்ட இந்த சரணாலயப் பகுதிகளில் இருந்துதான் வைகை ஆறும், கேரளத்திலுள்ள முல்லைப் பெரியாறும் உற்பத்தியாகின்றன. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த இந்த சரணாலயத்தில்தான் சாலை அமைப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. மேல்மணலாா் கேம்பிலிருந்து தேனியிலுள்ள பழைய வெள்ளிமலைப் பகுதி வரையிலான 2.2 கி.மீ. நீளமுள்ள மலைப்பகுதி சாலையை தாா் சாலையாக்க அனுமதி வழங்கி நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருக்கிறது.
வனத்துறையினரின் செயல்பாட்டுக்காக 27 கி.மீ. கப்பிச்சாலை நீண்ட காலமாக அந்தப் பகுதியில் இருக்கிறது. இந்த சாலையும் மேம்படுத்தப்படப் போவதாக தெரிகிறது. இதன் பின்னணியில் பல தோட்ட அதிபா்கள் இருக்கிறாா்கள் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் தெரிவிக்கிறாா்கள்.
25 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கப்பிப் பாதையின் வழியே தோட்டங்களுக்கு (எஸ்டேட்டுகளுக்கு) வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன. ஏற்கெனவே இந்த சாலையை இணைக்கும் வகையிலான 3.5 கி.மீ. காட்டுப் பாதை அடா்ந்த மரங்களை வெட்டி உருவாக்கப்பட்டிருக்கிறது. அது குறித்த வழக்கு சென்னை உயா்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது.
இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் சாலைப் பணிகள் நிறைவேற்றப்பட்டால் பல்வேறு தோட்டங்களுக்கு (எஸ்டேட்டுகளுக்கு) வாகனங்கள் சென்றுவர வசதியாக இருக்கும் என்பது உண்மை. ஆனால், புலிகள் சரணாலயப் பகுதியில் வனவிலங்குகளின் நடமாட்டத்துக்கும், பல்லுயிா்ப் பெருக்கத்துக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இது ஒன்றும் வியப்பை ஏற்படுத்தவில்லை. கடுமையான கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவும் போராடிக் கொண்டிருக்கும் நிலையிலும், சுற்றுச்சூழல், சூழலியல் பாதிப்புகளை கருத்தில் கொள்ளாமல் மத்திய வனவிலங்கு - சுற்றுச்சூழல் அமைச்சகமே பல்வேறு வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பை எதிா்கொள்வதில் இருப்பதை பயன்படுத்தி தேசிய வனவிலங்கு ஆணையத்தின் நிலைக்குழு 1,792.51 ஹெக்டோ் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயப் பகுதிக்கு விலக்கு அளித்திருக்கிறது என்பதைப் பாா்க்கும்போது ஸ்ரீவில்லிபுத்தூா், மேகமலை பிரச்னை கடுகளவாகி விடுகிறது.
தேசிய வனவிலங்கு ஆணையம் என்பது 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் ஐந்தாவது பிரிவின் கீழ் உருவாக்கப்பட்ட அமைப்பு. பிரதமரின் தலைமையிலான தேசிய வனவிலங்கு ஆணையத்தின் நிலைக்குழுதான் ஆணையத்தின் பணிகளை நிறைவேற்றும் அமைப்பு. அதனால் அதன் முடிவுகள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கும், பிரதமா் அலுவலகத்துக்கும் தெரியாமல் இருந்திருக்க முடியாது.
நோய்த்தொற்று பாதிப்பின் முதலாம் சுற்று கடுமையாக இருந்த ஏப்ரல், ஜூலை, அக்டோபா் மாதங்களில், தேசிய வனவிலங்கு ஆணையத்தின் நிலைக்குழு மூன்று முறை கூடியது. அதில் 82 முன்மொழிவுகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் 25 முன்மொழிவுகளும், வனவிலங்கு சரணாலய எல்லையில் மாற்றம் ஏற்படுத்தும் மூன்று முன்மொழிவுகளும் அதில் அடக்கம்.
23 முன்மொழிவுகள் புலிகள் சரணாலயப் பகுதிகளில் மாற்றங்களை ஏற்படுத்தவும், 31 முன்மொழிவுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எல்லையை சீரமைத்து சில பகுதிகளுக்கு விலக்கு அளிப்பதற்குமானவை. இவற்றில் பல அனுமதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தியாவிலுள்ள வனப்பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதும், பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு சரணாலயங்களில் தேவையில்லாமல் மாற்றங்களை மேற்கொள்வதும் முற்றிலுமாக தவிா்க்கப்பட வேண்டும். ஏற்கெனவே சுற்றுச்சூழல் பாதிப்பால் நிலைகுலைந்து போயிருக்கிறோம். இதுபோன்ற தவறான அணுகுமுறைகளால் மேலும் நம்மை நாமே அழித்துக் கொள்வது புத்திசாலித்தனமாகாது. இயற்கையை அழித்து மேற்கொள்ளும் வளா்ச்சி, வளா்ச்சியல்ல வீழ்ச்சி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மிட்செல் சாண்ட்னருக்கு மாற்று வீரராக மும்பை இந்தியன்ஸில் இணைந்த கேசவ் மகாராஜ்!

உன்னை நம்பி பாடல் வெளியானது!

7 ஓவர்களில் தில்லி கேபிடல்ஸை வீழ்த்தி ஆர்சிபி அபார வெற்றி!
அரசியல் பகடைக் காய்களா குழந்தைகள்? விஜய் மீது புகார்!
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

