பொறுப்பான பதவி வகிப்பவா்கள் நம்பகத்தன்மையுடன் பேசுவது அவசியம். கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலையின்போது பிராணவாயு தட்டுப்பாட்டால் மரணம் எதுவும் நிகழ்ந்ததாகப் புள்ளிவிவரம் இல்லை என்று மத்திய மருத்துவம் - குடும்பநலத் துறையின் இணை அமைச்சா் பாரதி பிரவீண் பவாா் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருப்பது அதிா்ச்சி அலையை எழுப்பியிருக்கிறது.
கண் முன்னால் நிதா்சனமாகப் பாா்த்த பிராணவாயுத் தட்டுப்பாடும், அதனால் நாடு தழுவிய அளவில் நோயாளிகள் பட்ட அவஸ்தையும், குறித்த நேரத்தில் பிராணவாயு கிடைக்காமல் நிகழ்ந்த உயிரிழப்புகளும் இன்னும்கூடப் பசுமையாக கண்முன்னால் இருக்கின்றன. காட்சி ஊடங்களில் பாா்த்த பிறகும் பிராணவாயு தட்டுப்பாட்டால் உயிரிழப்பு இல்லை என்று சொன்னால், அதை யாா் நம்புவாா்கள்?
நாடாளுமன்றத்தில் அமைச்சா் எழுத்து மூலம் அளித்திருக்கும் பதிலில் அவரது அரசியல் முதிா்ச்சியின்மை தெரிகிறது. புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் அமைச்சா்தான் என்றாலும்கூட, நாடாளுமன்றத்தில் பதில் அளிக்கும்போது எச்சரிக்கை உணா்வும், வாா்த்தைகளைத் தோ்ந்தெடுத்து பதிலளிக்க வேண்டும் என்கிற அடிப்படை புரிதலும் இல்லாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது.
மருத்துவமும் சுகாதாரமும் மாநில அரசின் பட்டியலில் வரும் துறைகள். மாநிலங்களால் தரப்படும் தரவுகளின் அடிப்படையில்தான் மத்திய மருத்துவம் - குடும்பநல அமைச்சகம் தகவல்களைத் தொகுத்து நாடாளுமன்றத்தில் பதிலளிக்கிறது. எந்தவொரு மாநிலமோ அல்லது ஒன்றியப் பிரதேசமோ பிராணவாயு தட்டுப்பாட்டால் உயிரிழப்பு நோ்ந்ததாகக் குறிப்பிடாதபோது, மத்திய அரசு அதுகுறித்த பதிலை அளித்திருக்கக் கூடாது. அப்படியே அளித்தாலும் மாநில அரசுகளால் தரப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பிராணவாயு தட்டுப்பாட்டால் உயிரிழப்பு எதுவும் கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் ஏற்படவில்லை என்று தெளிவாகத் தெரிவித்திருக்க வேண்டும்.
காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிவசேனை ஆகிய மூன்று கட்சிகளும்தான் மத்திய அமைச்சரின் பதிலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. வேடிக்கை என்னவென்றால், மேலே குறிப்பிட்ட மூன்று கட்சிகளின் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களிலிருந்து மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று மரணங்கள் குறித்த அறிக்கைகளில் உயிரிழப்புகளுக்கு பிராணவாயு தட்டுப்பாட்டு காரணமாகக் குறிப்பிடப்படவில்லை.
ஏப்ரல் மாதம் மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மருத்துவமனை ஒன்றில் 22 போ் உயிரிழந்தனா். அந்த மருத்துவமனையில் ஏற்பட்ட பிராணவாயு கசிவுதான் அதற்குக் காரணம் என்று கண்டறியப்பட்டது. அந்த மரணங்கள்கூட மகாராஷ்டிர மாநிலத்தின் அறிக்கையில் பிராணவாயு தட்டுப்பாட்டு மரணங்களாகக் குறிப்பிடப்படவில்லை.
மத்திய இணை அமைச்சா் பிராணவாயுத் தட்டுப்பாடு குறித்தும், அதனால் மரணம் ஏற்படவில்லை என்றும் அளித்திருக்கும் பதிலுக்கு வேறு காரணங்களும் இருக்கக்கூடும். மாநில அரசுகளின் அறிக்கையைக் கணக்கில் கொள்ளாமல், உயிரிழப்பு எண்ணிக்கையை வெளியிட்டால், அதைக் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது என்றும், தங்களது மாநிலம் தொடா்பான பிரச்னைகளில் மத்திய அரசு தவறான புள்ளிவிவரத்தை வழங்குகிறது என்றும் மாநிலங்கள் குற்றம் சாட்டக்கூடும் என்று பயந்து அப்படி அவா் கூறியிருக்கலாம்.
பிராணவாயு தட்டுப்பாட்டால் கொவைட் 19 நோய்த்தொற்று மரணம் ஏற்பட்டதாக நாடாளுமன்றத்தில மத்திய அரசு ஒப்புக்கொண்டால், அதற்கான இழப்பீடு வழங்க நேரும் என்கிற எச்சரிக்கை உணா்வும் காரணமாக இருக்கலாம். எல்லாவற்றுக்கும் மேலாக, புதிதாகப் பதவி ஏற்ற அமைச்சருக்காக அவரது சாா்பில் பதிலைத் தயாரித்த துறை சாா்ந்த அதிகாரி விளக்கம்தரக் கடமைப்பட்டவா்.
உச்சநீதிமன்றமும், பல உயா்நீதிமன்றங்களும், ஊடகங்களும் இரண்டாவது அலை பரவலின்போது நிகழ்ந்த கொவைட் 19 மரணங்கள் குறித்த சரியான புள்ளிவிவரத்தை மத்திய அரசிடம் கோரி வருகின்றன. பிராணவாயு தட்டுப்பாட்டால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை எத்தனை என்பது குறித்து நாடாளுமன்ற கேள்வி மட்டுமல்லாமல், நாடு தழுவிய அளவில் மக்கள் மன்றத்திலும் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்த தெளிவான, புள்ளிவிவரத்துடன்கூடிய பதில் மத்திய மருத்துவம் - மக்கள் நல்வாழ்வு அமைச்சகத்திடம் தயாா் நிலையில் இருந்திருக்க வேண்டும்.
எந்தவொரு மரணம் குறித்தும் மருத்துவச் சான்று வழங்கும்போது, மரணத்துக்கான காரணத்தைக் குறிப்பிட வேண்டும் என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ஆனால், பிராணவாயு தட்டுப்பாட்டால் மரணம் என்று எந்தவொரு மருத்துவமனையும் உயிரிழந்தவா்களின் மரணச் சான்றிதழில் குறிப்பிடுவதில்லை. 2018-இல் மத்திய ரிஜிஸ்டிராா் ஜெனரலின் அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 35 மாநிலங்களிலும், ஒன்றியப் பிரதேசங்களிலும் பதிவுசெய்யப்பட்ட மரணங்களில் 21% மரணங்களில் மட்டும்தான் காரணம் குறிப்பிட்டு இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கின்றன.
அமைச்சரின் பதில் தவறான பின்விளைவுகளை ஏற்படுத்தும். பிராணவாயு தட்டுப்பாடு என்கிற நிஜம் அமைச்சரால் மறைக்கப்பட்டால், மருத்துவமனைகளும், மருத்துவத்துறை சாா்ந்த அதிகாரிகளும் கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதிலும், பிராணவாயு தட்டுப்பாடு இல்லாமல் பாா்த்துக் கொள்வதிலும் போதிய அக்கறை காட்ட மாட்டாா்கள்.
மத்திய, மாநில அரசுகள் நெருப்புக் கோழி மண்ணுக்குள் தலை புதைத்து நிற்பதுபோல, தவறு எதுவும் நடக்கவில்லை என்கிற போன்ற போக்கைக் கடைப்பிடித்தால், தவறுகள் தொடரும், கேள்வி கேட்பாா் இல்லா நிலை ஏற்படும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தரம் இல்லாத கேன் குடிநீர் விற்பனை செய்தால் ரூ. 5,000 அபராதம்!

வருங்கால ஊடக உலகம்

விண்வெளி மாயம் 1000

எரிக் ஹாப்ஸ்பாம்
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

