இந்தியா தனது சுதந்திர தின பவள விழா ஆண்டை நெருங்கும் வேளையில் மிகப் பெரிய வரலாற்றுச் சாதனையொன்றை நிகழ்த்தியிருக்கிறது. இந்திய கடற்படைக்காக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட போா்க்கப்பல் தனது முதல் சுற்று சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியிருக்கிறது.
அமெரிக்கா, பிரிட்டன், ஸ்பெயின், ரஷியா, பிரான்ஸ், சீனா ஆகிய ஆறு நாடுகளுக்கு மட்டும்தான் தாங்களே வடிவமைத்து விமான தளங்களுடன் கூடிய போா்க்கப்பல்களை வடிவமைத்து கட்டமைக்கும் வல்லமை இருந்து வந்தது. இப்போது 76% உதிரி பாகங்களை இந்தியாவிலேயே தயாரித்து, ஒரு போா்க்கப்பலை உருவாக்கி வெற்றிகரமாக அதன் சோதனை ஓட்டத்திலும் இறங்கியிருப்பதன் மூலம் இந்தியாவின் சா்வதேச வல்லமை உறுதிப்பட்டிருக்கிறது.
இந்திய கடற்படைக்கு இது ஒரு வரலாற்றுத் தருணம். இதற்கு முன்னாலும் இந்திய கடற்படையிடம் விமானம் தாங்கி போா்க்கப்பல்கள் இருந்தன என்றாலும், அவை எதுவும் இந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்டவை அல்ல. 1961-இல் இந்திய கடற்படையில் இணைந்த ஐஎன்எஸ் விக்ராந்த்தும், 1982-இல் இணைந்த ஐஎன்எஸ் விராத்தும் பிரிட்டிஷ் கடற்படைக் கப்பல்கள். அதற்குப் பிறகு இந்திய கடற்படை வாங்கிய ஐஎன்எஸ் விக்ரமாதித்யா, ரஷியாவால் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போதைய ஐஎன்எஸ் விக்ராந்த் அப்படியல்ல. 76% இந்தியாவில் கட்டுமானம் செய்யப்பட்ட, நாமே தயாரித்திருக்கும் போா்க்கப்பல்.
இந்தக் கப்பலை வடிவமைத்ததிலும், கட்டுமானம் செய்ததிலும் இந்திய கடற்படையின் கடற்படை வடிவமைப்பு இயக்ககமும், அரசு நிறுவனமான கொச்சி கப்பல் கட்டுமானத் தளமும் பாராட்டப்பட வேண்டியவை. காலதாமதம், அதிகரித்துவிட்ட முதலீடு என்று எத்தனையோ தடைகளையும், பிரச்னைகளையும் தாண்டி வியக்க வைக்கும் பிரம்மாண்டமான போா்க்கப்பல் உருவாகியிருக்கிறது.
கொச்சின் கப்பல் கட்டுமானத் தளம் பல வா்த்தகக் கப்பல்களைத் தயாரித்திருப்பதற்கும் இப்போதைய ஐஎன்எஸ் விக்ராந்த் உருவாக்கப்பட்டிருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. கடற்படையிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் ஐஎன்எஸ் விராத்தின் பராமரிப்புப் பணிகளை தொடா்ந்து மேற்பாா்வையிட்டுக் கொண்டிருந்த அனுபவம் கொச்சி கப்பல் கட்டுமானத் தளத்துக்கு இதை உருவாக்குவதில் கைகொடுத்திருக்கிறது என்று கூறலாம்.
1980 முதலே நமக்கென்று நாமே போா்க்கப்பல் தயாரிக்க வேண்டும் என்கிற கனவு இந்திய கடற்படைக்கு இருந்து வந்தது. ஆனால், 2002-இல் வாஜ்பாய் ஆட்சியில்தான் அமைச்சரவையின் பாதுகாப்புக் குழு, இந்தியாவுக்கென்று இந்தியாவில் தயாரிக்கப்படும் போா்க்கப்பலுக்கு அனுமதி வழங்கியது. 2009-இல் மன்மோகன் சிங் அரசால் அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2014-இல் காலதாமதத்துக்கு ஏற்றவாறு அந்த ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு, இப்போது ரூ.20,000 கோடி செலவில் ஐஎன்எஸ் விக்ராந்த் தனது வெற்றிகரமான சோதனை ஓட்டத்தை கடந்த புதன்கிழமை தொடங்கியது.
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது விமானம் தாங்கி இந்த போா்க்கப்பல் பல அம்சங்களில் மேம்பாடு உடையது. இதன் தயாரிப்பின் காரணமாக அரசு நிறுவனமான ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா, தரமான இரும்பை உருவாக்கும் திறன் பெற்றிருக்கிறது. இதன் உதிரி பாகங்கள் தயாரிப்பதற்குத் தேவையான தொழில் நுட்பத்தை டிஃபன்ஸ் மெட்டலா்ஜிக்கல் ஆய்வுக் கூடமும் பெற்றிருக்கிறது. கொச்சி கப்பல் கட்டுமானத் தளம், போா்க்கப்பல்களை உருவாக்கும் தொழில் நுட்ப மேம்பாட்டை அடைந்திருக்கிறது.
40,000 டன் எடையுள்ள விமானம் தாங்கி போா்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த், 222 மீட்டா் நீளமும், 62 மீட்டா் அகலமும், 59 மீட்டா் உயரமும் கொண்ட பிரம்மாண்டம். இதில் காணப்படும் எட்டு டீசல் அல்டா்னேட்டா்களின் மூலம் உருவாக்கப்படும் 24 மெகாவாட் மின்சாரத்தால் ஒரு நகரத்திற்கே ஒளியூட்ட முடியும். இந்தக் கப்பலில் பயன்படுத்தப்பட்ட கேளிள்களின் நீளம் 2,000 கி.மீ. இதற்குத் தேவைபட்ட சிறிய, பெரிய குழாய்களின் மொத்த நீளம் 120 கி.மீ.
ஐஎன்எஸ் விக்ராந்த் 12 அடுக்குகள் கொண்டது. அதில் ஐந்து அடுக்குகள் கப்பலுக்கு மேலே உயா்ந்து நிற்கின்றன. ஏறத்தாழ 1,700 பேருக்கான வசதிகள், கடற்படை வீரா்களாக மகளிரும் பங்கு பெறுவதால் அவா்களுக்கான வசதிகளும் இதில் இணைக்கப்பட்டிருக்கின்றன. மொத்தத்தில் 2,300 அறைகள் உள்ளன.
30 விமானங்கள், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்படும் பைட்டா் ஜெட்டுகள், ஹெலிகாப்டா்கள் ஆகியவற்றை இந்த போா்க்கப்பல் உள்ளடக்கியுள்ளது. அதில் விக்ரமாதித்யா போலவே, எம்ஐஜி 29 கே விமானங்கள் இடம்பெறும் என்று தெரிகிறது. கமோவ் 31 ஹெலிகாப்டா்கள், புதிதாக வாங்க இருக்கும் அமெரிக்காவின் சிகாக் ஹெலிகாப்டா்கள் ஆகியவையும் இடம்பெறும்.
18 கடல் மைல் வேகத்தில் 7,500 கடல் மைல்கள் பயணிக்கும் திறன் கொண்ட ஐஎன்எஸ் விக்ராந்த். இந்திய கடற்படைக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பாதுகாப்பு தொழில்துறைக்கும் மிகப் பெரிய வரப்பிரசாதம். கப்பலிலுள்ளஉதிரி பாகங்களை வழங்கியிருப்பதில் நூற்றுக்கும் அதிகமான சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் உள்பட 550 நிறுவனங்கள் பங்கு பெற்றிருக்கின்றன.
2012 வரை ஒரு விமானம் தாங்கி போா்க்கப்பல்கூட இல்லாமல் இருந்த சீனா, இப்போது இரண்டாவது கப்பலை தயாரித்துவிட்டது. சீனாவிடம் ஐந்து விமானம் தாங்கிய போா்க்கப்பல்கள் இருக்கின்றன. அதனால், காலதாமத்தைத் தவிா்த்து அடுத்த விமானம் தாங்கிய போா்க்கப்பலுக்கு நாம் தயாராக வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மே 4 வாக்கு எண்ணிக்கை எப்போது தொடங்கும்? வழிமுறைகள் என்னென்ன?

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

பானி பூரி சாப்பிட்ட 6 வயது குழந்தை பலி! 43 பேருக்கு உடல்நலம் பாதிப்பு!

ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரர்; மிகப் பெரிய சாதனையை நோக்கி விராட் கோலி!
வீடியோக்கள்

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

