இந்தியாவிலுமா இனவெறி?
தில்லியை அடுத்த நொய்டா பரபரப்பாக இருக்கிறது. ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்படும் இனவெறித் தாக்குதலால், தில்லியில் தங்கிப் படிக்கும் ஆப்பிரிக்க மாணவர்கள் வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள்ளும்,


தில்லியை அடுத்த நொய்டா பரபரப்பாக இருக்கிறது. ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக நடத்தப்படும் இனவெறித் தாக்குதலால், தில்லியில் தங்கிப் படிக்கும் ஆப்பிரிக்க மாணவர்கள் வெளியில் செல்ல பயந்து வீட்டிற்குள்ளும், விடுதிகளிலும் அடைந்து கிடக்கிறார்கள். 17 வயது மணீஷ் காரி என்கிற மாணவனின் மரணம்தான் ஆப்பிரிக்கர்மீது உள்ளூர் மக்கள் தாக்குதல் நடத்தக் காரணம்.
12-ஆம் வகுப்புப் படிக்கும் மணீஷ் காரி என்கிற மாணவர் திடீரென்று காணாமல் போகிறார். அடுத்த நாள் அதிகாலையில் அவரது பெற்றோரின் குடியிருப்பு வாயிலில் அவர் போதை மயக்கத்துடன் விழுந்து கிடப்பது தெரிகிறது. உடனே மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டும் அவர் மாரடைப்பால் இறந்து விடுகிறார். இது தொடர்பாகக் காவல் துறை நொய்டா சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஐந்து நைஜீரிய மாணவர்களை, கடத்தல், துன்புறுத்தல், கொலை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காகக் கைது செய்கிறது. ஆனால் போதிய ஆதாரமில்லாததால் அவர்கள் அடுத்த நாளே விடுதலை செய்யப்படுகின்றனர்.
அந்தப் பகுதி மக்களின் ஆத்திரம் முழுவதும் ஆப்பிரிக்கர்கள் மீது திரும்புகிறது. அங்கே வசிக்கும் இரண்டு நைஜீரியர்கள், மாணவர்களுக்கு போதை மருந்து கொடுத்துக் கெடுக்கிறார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டுத் தாக்கப்படுகிறார்கள். செய்தி பரவி பொதுமக்கள் தெருவில் இறங்கி கண்ணில் தென்படும் ஆப்பிரிக்கர்களை எல்லாம் தாக்க முற்படுகிறார்கள்.
கென்யாவைச் சேர்ந்த மாணவி ஒருவர் வாடகைக் காரில் பயணிக்கிறார். அந்த வாகனம் நிறுத்தப்பட்டு, அவர் வெளியே இழுத்துத் தாக்கப்படுகிறார். ஆங்காங்கே ஆப்பிரிக்கர்கள் விரட்டி அடிக்கப்படுகிறார்கள். காவல் துறை இதுவரை ஏறத்தாழ 600 பேர் மீது கலவரத்தில் ஈடுபட்டதற்காக வழக்குப் பதிவு செய்திருக்கிறது. 44 பேர் தாக்குதல் நடத்தியதற்காகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரப் பிரதேசத்தில் அமைந்த பிறகு எதிர்கொள்ளும் முதல் சட்டம் - ஒழுங்குப் பிரச்னை இது.
தலைநகர் தில்லியில் ஆப்பிரிக்கர்கள் தாக்கப்படுவதும், அவர்கள் வெறுப்புடன் பார்க்கப்படுவதும் புதிதல்ல. கடந்த ஆண்டு மே மாதம் தில்லி வசந்த்குஞ்ச் பகுதியில் காங்கோ நாட்டைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கல்லாலும், கட்டடம் கட்டுவதற்காகக் குவித்து வைக்கப்பட்டிருந்த செங்கற்களாலும் தாக்கப்பட்டு மருத்துவமனைக்குப் பிணமாகத்தான் கொண்டு வரப்பட்டார். அவர் தாக்கப்பட்டதற்குக் காரணம் சிறிய வாக்குவாதம்தான். அதேபோல கடந்த ஆண்டு 12 ஆப்பிரிக்கர்கள் பூங்கா ஒன்றில் ஆணும் பெண்ணுமாக கைகோத்தும் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்தபடியும் சென்று கொண்டிருந்ததால் தாக்கப்பட்டனர். அவர்களை ஓட ஓட விரட்டி அடித்தார்கள் சிலர்.
ஒரு முறை ராஜீவ் செளக் மெட்ரோ ரயில் நிலையத்திலேயே மூன்று ஆப்பிரிக்க மாணவர்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்டனர். அந்த மாணவர்களைக் காப்பாற்ற யாரும் முன்வரவில்லை என்பது அங்கே பொருத்தப்பட்டிருந்த கேமிரா மூலம் தெரிய வந்தது. காவல் துறையினர்கூட வேடிக்கை பார்த்ததையும் கடைசியில் மத்திய சிறப்புக் காவல் படையினர் தலையிட்டுதான் கூட்டம் கலைக்கப்பட்டு அந்த ஆப்பிரிக்க மாணவர்கள் காப்பாற்றப்பட்டதையும் ஊடகங்கள் வெளிப்படுத்தின.
2014-இல் தில்லியில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் சோம்நாத் பாரதியின் தலைமையிலேயே ஒரு கும்பல் நைஜீரிய, உகாண்டா நாடுகளைச் சேர்ந்த நான்கு ஆப்பிரிக்கப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தியது. அவர்கள் அந்தப் பகுதியில் பாலியல் தொழில் நடத்துவதாகவும், போதை மருந்துகள் விற்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று பின்னர் நிரூபிக்கப்பட்டன என்றாலும், தாக்குதலால் ஏற்பட்ட காயங்களும், மனதில் ஏற்பட்ட ரணங்களும் சீக்கிரத்தில் ஆறிவிடவில்லை.
ஆப்பிரிக்கா கண்டத்தில் 54 சுதந்திர நாடுகளும், பத்து காலனிகளும் இருக்கின்றன. கடந்த ஆண்டு இந்திய அரசு, இந்தோ - ஆப்பிரிக்க மாநாடு ஒன்று நடத்தியது. ஆப்பிரிக்க மாணவர்களுக்கு இந்தியாவில் படிப்பதற்கான எல்லா வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இந்தியாவுக்குப் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்தும் மாணவர்கள் படிக்க வருவதற்குக் காரணமே, மேலை நாடுகளைப்போல இங்கே தங்களது நிறத்துக்காக தங்களை வெறுக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கைதான்.
அதேபோல ஆப்பிரிக்க நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிப்பது குறித்தும், ஆப்பிரிக்காவில் இந்தியப் பங்களிப்புடன் வளர்ச்சித் திட்டங்களையும், தொழில், விவசாயம் தொடர்பான கூட்டு முயற்சிகளை அதிகரிக்கவும் அரசு முனைப்புக் காட்டுகிறது. இந்த நிலையில், ஆப்பிரிக்கர்கள் மீதான தாக்குதல், அந்த நாடுகளையும் இங்கே வந்து தங்கிப் படிக்கும் மாணவர்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
ஒருபுறம், மேலைநாடுகளிலும் ஆஸ்திரேலியாவிலும் உயர்கல்வி பயிலவும், வேலை பார்க்கவும் செல்கின்ற இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதல்கள் குறித்து நாம் கவலைப்படுகிறோம்; கண்டனம் தெரிவிக்கிறோம். ஆனால், அதே நிலைமைதான் இந்தியாவுக்கு வரும் ஆப்பிரிக்கர்களுக்கு எனும்போது, நாம் எப்படி இந்தியர்கள் மீதான இனவெறித் தாக்குதலைக் குறை சொல்ல முடியும்?
இனவெறியும், நிறவெறியும் எங்கே எந்த நாட்டில் நடந்தாலும் அது கண்டனத்துக்கு உரியது. அதுவும் காந்தியடிகள் பிறந்த இந்திய மண்ணில் நடந்தால் அது மன்னிக்கவே முடியாத குற்றம். ஆப்பிரிக்கர்கள் நம்மைக் காட்டுமிராண்டிகள் என்று நினைக்கத் தூண்டுவதாக இருக்கிறது இந்த நொய்டா சம்பவம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...