பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்புகூடுதல் பெட்டிகளுடன் மின்சார ரயில்கள் இயக்க நடவடிக்கை: ரயில்வே அதிகாரிகள் தகவல்!இன்று உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி: சென்னை மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்புவடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் 2-ஆம் கட்ட பாதுகாப்பு சோதனை நிறைவுதென் தமிழகத்தில் மழை வாய்ப்புதிருப்பரங்குன்றம் கோயிலில் பிரதமரின் சிறப்பு பாதுகாப்புக் குழு ஆய்வு!‘நீதித் துறையில் ஊழல்’: என்சிஇஆர்டி பாடப் பிரிவுக்கு தலைமை நீதிபதி கடும் ஆட்சேபம்!தமிழ்நாடு, புதுச்சேரி தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? - தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்! 2025-இல் சா்வதேச அளவில் 129 செய்தியாளா்கள் கொலை!
/

இழந்த வாய்ப்பு!

உயர்மதிப்புச் செலாவணிகளைச் செல்லாததாக்கிய முடிவின் விளைவால் பொதுமக்கள் அடைந்த சிரமங்கள் நியாயமாகப் பார்த்தால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டும்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:39 am

ஆசிரியர்

உயர்மதிப்புச் செலாவணிகளைச் செல்லாததாக்கிய முடிவின் விளைவால் பொதுமக்கள் அடைந்த சிரமங்கள் நியாயமாகப் பார்த்தால் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்திருக்க வேண்டும். செலாவணிகளைச் செல்லாததாக்கிய முடிவால் ஏற்படும் நன்மைகள் இன்னும் தெரியத் தொடங்கவில்லை. அப்படியே நன்மைகள் ஏற்பட்டாலும் அது உடனடியாக ஏற்பட்டுவிடவும் போவதில்லை. இந்த நிலையில், அரசுக்கு எதிராக எல்லா எதிர்க்கட்சிகளும் இணைந்திருந்தால், அதை எதிர்கொள்ள முடியாமல் நரேந்திர மோடி அரசு திணறி இருக்கும்.
ஆனால், அப்படி எதுவும் நடந்துவிடாமல் பார்த்துக்கொண்ட பெருமை காங்கிரஸ் கட்சியையே சாரும். எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்கும் வாய்ப்பை நழுவவிட்டிருக்கிறது காங்கிரஸ். எதிர்க்கட்சிகளின் கூட்டம் ஒன்றைத் திட்டமிட்டு அதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்திப்பது என்று காங்கிரஸ் முடிவெடுத்தபோது, மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், காங்கிரஸ் கட்சி அந்த முயற்சியைக் கையாண்ட விதம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையே கேள்விக்குறியாக்கி விட்டிருக்கிறது.
உயர்மதிப்புச் செலாவணிகளைச் செல்லாததாக்கும் நரேந்திர மோடி அரசின் முடிவு, எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைத்தது என்பது உண்மை. அந்த முடிவை நேரிடையாக எதிர்ப்பது என்பது கருப்புப் பண முதலைகளையும், ஊழல்வாதிகளையும், கள்ள நோட்டைப் புழங்கவிடும் தேசத்துரோகிகளையும் ஆதரிப்பதாக ஆகிவிடும் என்பதால் அந்த முடிவை உரக்க எதிர்க்க எதிர்க்கட்சிகளால் முடியவில்லை.
"நாடு முழுவதும் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது', "பணம் வழங்கும் இயந்திரங்களின் முன்னால் மக்கள் தங்கள் பணத்தை எடுக்கக் கால்கடுக்க நிற்க வேண்டியதாகிவிட்டது', "அரசு அடிக்கடி புதுப்புது விதிகளை அறிவித்து மக்களைக் குழப்புகிறது' என்றெல்லாம் எதிர்க்கட்சிகளால் கூற முடிந்ததே தவிர, அதற்கு மேல் மக்களை ஒன்றுதிரட்டவோ, அவர்களை ஒருங்கிணைத்து குரல் கொடுக்கவோ முடியவில்லை. பிரதமர் மோடி அறிவித்திருந்த 50 நாள் கெடுவரை காத்திருப்பதைத் தவிர, அவர்களுக்கு வேறு வழி தெரியவில்லை.
இப்போது 50 நாள் கெடு முடிந்த நிலையில் காங்கிரஸால் கூட்டப்பட்ட எதிர்க்கட்சிகளின் கூட்டமாவது வெற்றி அடைந்ததா என்றால் அதுவும் இல்லை. காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த அந்தக் கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கலந்துகொண்ட மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் குறிப்பிடத்தக்க தலைவராக காட்சி அளித்தார். மம்தா பானர்ஜி கலந்துகொண்டதால் காங்கிரஸின் துணைத்தலைவர் ராகுல் காந்தியே பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டார் என்று காங்கிரஸிலேயே முணுமுணுப்புகள் எழுகின்றன.
காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம், மதச்சார்பற்ற ஜனதா தளம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆகிய எட்டு கட்சிகள் மட்டுமே கலந்து கொண்டன. நாடாளுமன்றத்தில் இணைந்து குரல் கொடுத்த இடதுசாரிகள், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் போன்றவை கலந்து கொள்ளவில்லை. காரணம் அவர்கள் அழைக்கப்படவில்லை.
இப்படியொரு கூட்டம் நடத்துவது பற்றி காங்கிரஸ் தங்களை ஆலோசிக்கவோ, கூட்டத்திற்கு அழைக்கவோ இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டுகிறது. ஒருவேளை மம்தா பானர்ஜியை அழைப்பதால் அவரைக் கோபப்படுத்தாமல் இருக்க இடதுசாரிகளை அழைக்காமல் விட்டார்களோ என்னவோ?
இடதுசாரிகள் அழைக்கப்படாததற்கு மம்தா காரணமாக இருக்கலாம். ஆனால் ஏன் தேசியவாத காங்கிரஸ், சமாஜவாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, தேசிய மாநாட்டுக் கட்சி போன்றவை அழைக்கப்படவில்லை? "வருபவர்கள் வரட்டும். வராதவர்கள் அடுத்த கூட்டத்தில் கலந்து கொள்ளலாம்' என்று காங்கிரஸ் விட்டேற்றியாக அறிவித்தது ஏனைய கட்சிகளை கோபப்படுத்தி இருக்கிறது.
பதினைந்து எதிர்க்கட்சிகள் காங்கிரஸுடன் இணைந்து நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்தவிடாமல் தடுத்தன. அவர்கள் முன்வைத்த முக்கியமான கோரிக்கை, அதிக மதிப்புச் செலாவணிகளைச் செல்லாததாக்கியது குறித்துப் பிரதமர் பேச வேண்டும் என்பது. கூட்டத் தொடர் முடியும் தறுவாயில் ஏனைய கட்சிகளைத் தவிர்த்துவிட்டு காங்கிரஸ் மட்டும் ராகுல் காந்தியின் தலைமையில் பிரதமர் மோடியைச் சந்தித்து விவசாயிகள் கடன் ரத்து குறித்துக் கோரிக்கை வைத்தது. இதை ஏனைய கட்சிகளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
"நாம் இப்படி அடிக்கடி சந்தித்துக் கொள்வோம்' என்று பிரதமர் காங்கிரஸ் குழுவினரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ஆமாம், நமக்குக் கருத்தொற்றுமை இல்லாவிட்டாலும் கைகுலுக்கிக் கொள்வதில் தவறில்லை' என்று கூறியதாகவும் செய்தி கசிந்தது. நாடாளுமன்றத்தில் நாம் ஒருங்கிணைந்து செயல்படும்போது, பிரதமரைச் சந்திக்க காங்கிரஸ் மட்டும் போவானேன் என்பது ஏனைய எதிர்க்கட்சிகளின் கேள்வி.
அதனால்தான் குடியரசுத் தலைவரிடம் மனு கொடுக்கப் போனபோதும், காங்கிரஸ் எதிர்க்கட்சிக் கூட்டம் கூட்டியபோதும் பல கட்சிகள் கலந்துகொள்ளவில்லை. தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிற காங்கிரஸின் முனைப்பும், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தேசிய அரசியலில் தன்னை முன்னிறுத்திக்கொள்ள வேண்டும் என்கிற மம்தா பானர்ஜியின் எண்ணமும்தான் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டைகள்.
இந்த முட்டுக்கட்டைகளால், எதிர்க்கட்சிகளைத் தன் பின்னால் அணிதிரட்டுவதற்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பை காங்கிரஸ் இழந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.