இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

விவரப்பட்டியல் அவசியம்!

வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் விவரத் தொகுப்பு பதிவு செய்யும் முறையை, மத்திய வெளியுறவு விவகாரத் துறை தற்போது தொடங்கியுள்ளது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:14 pm

ஆசிரியர்

வெளிநாட்டில் கல்வி பயிலும் மாணவர்கள் விவரத் தொகுப்பு பதிவு செய்யும் முறையை, மத்திய வெளியுறவு விவகாரத் துறை தற்போது தொடங்கியுள்ளது. வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் தங்கள் விவரங்களை  madad.gov.in என்ற இணைய முகவரியில் பதிவு செய்துகொள்ளுமாறும், இதனால், மாணவர்களுக்கு அவசர உதவி தேவைப்படும் காலங்களில் உடனடியாக உதவி செய்ய இயலும் என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
இதுநாள்வரை, வெளிநாடு சென்று பயிலும் மாணவர்கள் பற்றிய புள்ளிவிவரங்கள் முறைப்படி இல்லை என்பதை இதன்மூலம் வெளியுறவுத்துறை ஒப்புக்கொண்டுள்ளது. தற்போது அரசுசொல்லும் புள்ளிவிவரங்கள் அனைத்தும் குடிபெயர்வு ஆவணங்களில் குறிக்கப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவையே. அவற்றில் மாணவர்கள் குறித்த தகவல்கள் பகிரப்படுவதில்லை.
வெளிநாடு செல்லும் மாணவர்கள் குறித்த விவரத் தொகுப்பு பதியும் முறை வரவேற்கத்தக்கது. அதேவேளையில், வெளிநாடு செல்லும் தொழிலாளர்கள் குறித்த விவரப் பதிவேடும் மிகமிக அவசியம். ஆனால் அத்தகைய பதிவுகள் முறைப்படியாக இந்திய அரசிடம் இல்லை.
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் விவகார அமைச்சகத்தின் 2014-15ஆம் ஆண்டுக்கான அறிக்கையின் படி, 8.04 லட்சம் பேர் வெளிநாட்டில் பணிபுரியச் சென்றுள்ளனர். இவர்களில் சவூதி அரேபியாவுக்கு 3.29 லட்சம் பேர், ஐக்கிய அரபு அமீரகத்துக்கு 2.24 லட்சம் பேர், கத்தார் 0.75 லட்சம் பேர், ஓமன் 0.50 லட்சம் பேர், மலேசியா 0.22 லட்சம் பேர் எனத் தகவல் தரமுடியுமே தவிர, இவர்கள் அனைவரது விவரத் தொகுப்பு இந்திய அரசிடம் இல்லை.
வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் எண்ணிக்கை இருக்கிறது. ஆனால், வெளிநாடு சென்ற இந்தியர் எந்த நிறுவனத்தில், என்ன வேலை செய்கிறார்? அவரது ஊதியம் என்ன? எந்தப் பணிவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாக இந்தியாவிலிருந்து சென்றுள்ளார்?
அவருக்கான தொடர்பு எண் என்ன? போன்றவை குறித்த தகவல்கள் இந்திய அரசிடம் முறைப்படியாக இல்லை.
வெளிநாடுகளுக்குப் பணிபுரியச் செல்லும் இந்தியர்களில் 90% பேர் நேரடிப் பணி நியமனம் பெறாமல், வேலைவாய்ப்பு முகவர்கள் மூலமாகவே வேலைக்குச் செல்வதால், அவர்களின் உண்மையான வேலை, சம்பளம் ஆகியவை மறைக்கப்படுகின்றன. வெளிநாடுகள் அனைத்திலும் ஒவ்வொரு ஊழியருக்கும் காப்பீடு, சமூகப்பாதுகாப்பு சட்டத்தின்படியான காப்பீடு, இழப்பீடு, மருத்துவக் காப்பீடு என எல்லாமும் இருந்தாலும், அந்தப் பயன்கள் அனைத்தையும் அந்நாடுகளில் உள்ள வேலைவாய்ப்பு முகவரே எடுத்துக்கொண்டு, ஊழியருக்கு ஏதோ சொற்பமாகத் தருகின்ற நிலை நீடிக்கிறது.
பல நாடுகளில் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கான பிரீமியத் தொகை கணிசமாக இருப்பதுடன், அந்தப் பலன்களைப் பெறுவதற்குத் தகுதி பெறச் செய்யும் சேவை ஆண்டுகள் (3 ஆண்டு அல்லது 60 மாதங்கள்) பணியில் நீடிப்பதற்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படுவதுமில்லை. ஆகவே இந்தப் பலன்கள் கிடைக்காமலும், கிடைத்தாலும் வேலைவாய்ப்பு முகவரின் தயவில் சொற்பத்தொகை பெற்றும் திரும்பும் நிலையே உள்ளது.
வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர் விவகார அமைச்சகம், உலகின் பல்வேறு நாடுகளுடன் இருதரப்பு சமூகப் பாதுகாப்பு திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கனடா, ஆஸ்திரியா,
ஜப்பான், கொரியா போன்ற எந்தெந்த நாடெல்லாமோ அந்தப் பட்டியலில் உள்ளன. ஆனால் இந்தியத் தொழிலாளர்கள் அதிகமாக பணிபுரியும் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார் போன்ற நாடுகள் இடம்பெறவில்லை.
அண்மையில் 10,000 தொழிலாளர்கள், குறிப்பாக கட்டுமானப் பணி சார்ந்தவர்கள் ஆறுமாத சம்பளம் இல்லாமல் பெருந்துயரம் அடைந்தபோது மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேரடி நடவடிக்கையில் இறங்கினார். அதனால் என்னவானாது? அவர்களில் எத்தனைப் பேர் ஊர் திரும்பினார்கள்? அவர்களது சம்பள நிலுவை கிடைத்ததா என்ற விவரங்கள் வெளியிடப்படவும் இல்லை. அதுகுறித்து ஊடகங்கள் கவலைப்படவும் இல்லை.
வெளிநாட்டில் வேலை செய்யும் இந்தியர் விவரத் தொகுப்பு பதிவு முறையை கட்டாயமாக்குவதும், அந்தத் தொகுப்பு மாநில வாரியாக, மாவட்ட வாரியாகப் பதிவு செய்யப்படுவதும் அவசியம். வெளிநாட்டில் வேலை செய்துவந்தவர் குறித்த தகவல் கிடைக்காத நிலை ஏற்படும்போது பெண்களும் உறவினர்களும் மாவட்ட ஆட்சியரைத்தான் அணுகுகிறார்கள். ஆனால் மாவட்ட ஆட்சியர்களிடம் இதுகுறித்த எந்தத் தகவலும் இருப்பதில்லை. அவர்கள்
மத்திய அரசிடம் தகவல் தெரிவித்து, பதிலுக்காக காத்திருக்க வேண்டியிருக்கிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் எத்தனை பேர் வெளிநாட்டில் பணிபுரியச் செல்கிறார்கள், அவர்களது ஊதியம் என்ன, அவர்கள் இந்திய வெளியுறவு அமைச்சகம் அமல்படுத்தும் பாதுகாப்பு சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து அரசு தரும் பலன்களை நேரடியாகப் பெறுகிறார்களா போன்ற எல்லா விவரங்களும் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கும் கிடைக்கும் நிலை உருவாக வேண்டும்.வெளிநாடுகளுக்குப்போய் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துவரும் நிலையில், அவர்கள் குறித்த தகவல்களை மத்திய, மாநில அரசுகளும் மாவட்டநிர்வாகமும் அறிந்து வைத்திருப்பது அவசியம். இந்தத் தகவல்களை சேகரித்து இணையத்தில் பதிவேற்றம் செய்வதில் இனியும் நாம் தாமதிக்கலாகாது. வெளிநாடு செல்பவர்கள் தங்களைப் பற்றிய தகவல்களை பதிவேற்றம் செய்தால் மட்டுமே வெளிநாடு செல்ல முடியும் என்ற கட்டாயம் ஏற்பட வேண்டும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.