இஸ்ரேலின் சொட்டுநீர் பாசனம் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சு இந்திய கலாசாரத்தில் யூதர்களின் பங்கு முக்கியமானது : இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் மோடி பேச்சுஇஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உடனான சந்திப்பு மிகச்சிறப்பானதாக இருந்தது: பிரதமர் மோடிஅனைவராலும் மதிக்கப்பட்டவர் நல்லகண்ணு : பிரதமர் இரங்கல்நல்லகண்ணு உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 1 காசு குறைந்து ரூ. 90.96 ஆக நிறைவு!நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!
/

பாவம், பள்ளிச் சிறார்கள்!

இந்தியாவில் 7 முதல் 13 வயதுக்கு உள்பட்ட 88% மாணவ, மாணவியர் பள்ளிக்கு கொண்டுசெல்லும் புத்தகச் சுமை, அவர்களது உடல் எடையில் 45% அளவுக்கு இருக்கிறது

News image
Updated On :24 ஜனவரி 2024, 6:13 pm

ஆசிரியர்

இந்தியாவில் 7 முதல் 13 வயதுக்கு உள்பட்ட 88% மாணவ, மாணவியர் பள்ளிக்கு கொண்டுசெல்லும் புத்தகச் சுமை, அவர்களது உடல் எடையில் 45% அளவுக்கு இருக்கிறது என்று அண்மையில் "அசோசெம்' அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதேபோன்று 2012-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களின் புத்தகச் சுமை அவர்களது எடையில் 35%-ஆக இருப்பதாக புள்ளிவிவரங்கள் வெளியாகின. மூன்று ஆண்டுகளில் சுமை மேலும் கூடியுள்ளதே தவிர குறையவில்லை.
மாணவர்கள் இப்படி அதிக சுமையை முதுகில் சுமந்து செல்வதால் அவர்களுக்குக் கழுத்துவலி, முதுகுத்தண்டுப் பிரச்னைகள் ஏற்படும் என்றும், இவர்களில் 68% மாணவர்கள் நிச்சயமாக கூன் முதுகுப் பிரச்னைக்கு ஆளாவதற்கும் வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். யார் என்ன சொன்னாலும், புத்தகச் சுமையைக் குறைப்பதற்கு இன்னமும் எந்த மாநிலமும் எந்த முயற்சியும் செய்யவில்லை.
"பள்ளி மாணவர் புத்தகச் சுமை சட்டம் 2006' பெயருக்குதான் இருக்கிறது. அதன்படி, ஒரு குழந்தை அதன் சுமையில் அதிகபட்சமாக 10%-க்கு மேல் புத்தகச் சுமை தூக்குதல் கூடாது என்று தடை செய்யப்பட்டுள்ளது என்று கல்வியாளர்கள் சொல்கிறார்கள். ஆனால் இதை அமல்படுத்தவும், அரசை வலியுறுத்தவும் யாருமில்லை. அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை. பெற்றோர் களுக்கே இதில் அக்கறை இல்லை என்கின்றபோது, மற்றவரை நாம் ஏன் குற்றம் சொல்ல வேண்டும்?
மாணவர்களை சுமையாளாக மாற்றும்போக்கு, தனியார் பள்ளிகள் அதிகரித்தபிறகுதான் தோன்றியது. இப்போது நடத்தப்பட்டுள்ள ஆய்வுகளிலும்கூட தனியார் பள்ளி மாணவர்கள்தான் அதிகமாகப் புத்தகச் சுமை தூக்குவதாகத் தெரியவந்துள்ளது.
தனியார் பள்ளிகள் புத்தகச் சுமையைக் கூட்டியதற்குக் காரணம், கல்வி வணிகம். பல புத்தகங்களுக்குத் தேவையே இல்லாவிட்டாலும் வாங்க வைக்கிறார்கள். காரணம், தில்லியில் எண்ணற்ற பதிப்பகங்கள் இத்தகைய பள்ளிப் பாடநூல்களை அச்சடித்து 50% கமி
ஷனில் பள்ளிகளுக்குக் கொடுக்கின்றன. அதனால், தனியார் பள்ளிகளும் அந்தப் புத்தகம் தேவையில்லை என்றாலும் வாங்க வைக்கிறார்கள்.
இதுபோதாவென்று தனியார் பள்ளிகள் நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் விற்பனை செய்வதிலும் ஈடுபடுகின்றன. மருத்துவரே மருந்துக் கடை நடத்தும்போது தேவையில்லாத மருந்துகளையும் பரிந்துரைப்பதுபோல, நோட்டுப் புத்தக வியாபாரத்துக்காக, தேவையில்லாத பாடங்களுக்கும் 200 பக்க நோட்டுப் புத்தகங்களை வாங்க வைக்கிறார்கள்.
தனியார் பள்ளிகளின் இத்தகைய சுமையேற்று வியாபார உத்திகள் சமச்சீர் கல்வி முறையால் தமிழகத்தில் தற்போது குறைந்துவிட்டபோதிலும்கூட, சிறப்பு வகுப்புகள், சிறப்புப் பயிற்சிகள் என்ற பெயரில் நிறைய நோட்டுப் புத்தகங்கள், குறிப்புகள் (நோட்ஸ்) என வாங்க வைப்பதில் மும்முரமாக இருக்கின்றன. இதையெல்லாம் கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமில்லை. கல்வியும்,கற்பித்தலும் சேவையாக இல்லாமல் போகும்போது, இப்படிப்பட்ட அவலங்கள் அரங்கேறத்தான் செய்யும்.எது எதற்காகவெல்லாமோ அமெரிக்கா போன்ற மேலை நாடுகளை முன்னுதாரணம் காட்டுகிறோம், பின்பற்றுகிறோம். அங்கே எல்லாம் பள்ளிக் கல்வி என்பது அரசால் மட்டுமே வழங்கப்படுகிறது. உயர்கல்வியில்தான் முழுக்க முழுக்கத் தனியார்மயம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், எந்தவித வித்தியாசமும் இல்லாமல் எல்லா குழந்தைகளுக்கும் தரமான பள்ளிக் கல்வி வழங்கப்படு
கிறது. புத்தகச் சுமை என்பதே இல்லாமல் குழந்தைகள் கல்வி கற்கிறார்கள்.
மின்யுக இந்தியா (டிஜிட்டல் இந்தியா) திட்டம் வருவதற்கு முன்பாக மின்மயப் பள்ளிகள் வந்தால் புத்தகச் சுமைகள் இல்லாமல் போகும். ஆனால், அது அத்தனை விரைவில் வருவதற்கான அறிகுறியே காணவில்லை.
புத்தகங்களே இல்லாத, எழுதவே தேவையில்லாத கல்வி என்பதும் வரவேற்புக்குரியதல்ல. குறைந்த அளவு புத்தகங்கள், குறைந்த செலவில் தரமான கல்வி என்பதுதான் இலக்காக இருக்க வேண்டும்.
குறைந்தபட்சம் இரண்டு நடைமுறைகளை அமல்படுத்தினாலே போதும், மாணவர்கள் சுமை சுமக்க வேண்டியதில்லை. முதலாவதாக, ஒரு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை அந்தப் பள்ளியே வகுப்பறையில் வழங்குவது. அனைத்து மாணவர்களுக்குமான பாடப் புத்தகங்களை பள்ளி அறையில் வைப்பதும், அதை அன்றாடம் மாணவர்களுக்கு வழங்குவதும் கடினமான பணி அல்ல.
இரண்டாவதாக, ஒன்றாம் வகுப்பு தொடங்கி அனைத்து மாணவர்களும் அனைத்து பாடங்களுக்கான எழுத்துமுறை பயிற்சி, வகுப்பில் குறிப்பெடுத்தல் அனைத்தும் ஒற்றைத் தாள்களில் செய்யப்படுவதாக மாற்றப்பட வேண்டும். இந்த ஒற்றைத் தாள்கள் அனைத்தும் கோப்புகளில் அடுக்கப்பட்டு மாணவர்களால் வீட்டுக்குக் கொண்டு சென்று மறுவாசிப்பு செய்யும் பழக்கத்தை உருவாக்கலாம்.
இதைக் குழந்தைகள் சரியாகச் செய்வார்களா? இவ்வாறு தாள்
களில் எழுதி, வீட்டுக்குக் கொண்டுவரும் பாடக் குறிப்புகளை பத்திரமாக வைப்பார்களா? என்ற சந்தேகங்கள் அவசியமில்லாதவை. இன்றைய தொடக்கப் பள்ளி மாணவர்கள் ஆன்ட்ராய்டு செல்லிடப்
பேசியைப் பயன்படுத்தும் அறிவு கொண்டவர்கள். அவர்கள் எத்தகைய மாற்றத்துக்கும் தங்களைத் தகவமைத்துக் கொள்வார்கள்.
இந்த இரண்டும் செய்ய முடியாதவை அல்ல. தேவை மனமாற்றம்தான். சட்டம்கூடத் தேவையில்லை. பள்ளிகளில் ஏற்படும் மனமாற்றமே இதைச் சாதிக்கப் போதுமானது. குழந்தைகள் மூளையில் சுமை ஏற்றலாம் தவறில்லை. முதுகில் சுமையை ஏற்றுவது சரியில்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.