ஒப்பந்தமும் நிர்பந்தமும்!
இந்தியாவும் அமெரிக்காவும், அவசரக் காலங்களில் இரு தரப்பு ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக்


இந்தியாவும் அமெரிக்காவும், அவசரக் காலங்களில் இரு தரப்பு ராணுவத் தளங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும், போர்க் கப்பல்கள், ராணுவ விமானங்களுக்கான எரிபொருள், உணவுப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளவும் வகை செய்யும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் குறித்து கடந்த 2002-ஆம் ஆண்டிலிருந்தே பேசப்பட்டு வந்தாலும், தற்போதுதான் இது செயல் வடிவம் பெற்றுள்ளது. வாஷிங்டனுக்கு சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டரும் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தத்தால் இந்தியாவில் ராணுவத் தளம் அமைப்பதற்கோ, நமது பாதுகாப்பு விஷயங்களில் தலையிடுவதற்கோ அமெரிக்காவுக்கு எந்த விதத்திலும் அனுமதி அளிக்கப்படவில்லை. கூட்டு நடவடிக்கைகள், மனிதாபிமான உதவிகள், பேரிடர் மீட்புப் பணிகளின்போது இரு நாடுகளின் ராணுவமும் எரிபொருள், உணவுப் பொருள்களைப் பகிர்ந்து கொள்ளுதல், போர்ச் சாதனங்களைப் பழுதுநீக்குதல் ஆகியவற்றுக்கு மட்டுமே இந்த ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கடந்த 12 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், ஏனைய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா செய்து கொள்ளும் ஒப்பந்தங்களிலிருந்து சற்றே மாறுபடுகிறது. ஏனைய நட்பு நாடுகளுடனான "ராணுவ உதவி ஒப்பந்தம்' போலல்லாமல், இது "ராணுவ உதவிகளைப் பகிர்ந்து கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தம்' என்பதுதான் வேறுபாடு.
இந்த ஒப்பந்தம், இந்தியா - அமெரிக்கா இரண்டு நாடுகளின் ராணுவமும் அவரவர் நாட்டின் நிலம், நீர், ஆகாயத்தை பயன்படுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டிருக்கிறது. இந்த ஒத்துழைப்பு போர்க் காலங்களில் இரு நாட்டு ராணுவமும் கடற்படைத் தளம், விமான தளம் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதை அனுமதிப்பதில்லை. கப்பல் அல்லது போர் விமானங்களைப் பழுது பார்ப்பதற்கும், எரிபொருள் நிரப்பிக் கொள்வதற்கும் பயன்படுத்திக் கொள்வதற்கும் பேரிடர் கால உதவிகளுக்கும் இந்த ஒப்பந்தம் பயன்படும்.
அதேநேரத்தில், இந்தியா அமெரிக்காவிலோ, அமெரிக்கா இந்தியாவிலோ ராணுவ தளம் அமைப்பதற்கோ, தங்கள் நாட்டுப் படைகளை நிரந்தரமாகத் தங்க வைப்பதற்கோ, இந்த ஒப்பந்தத்தில் வழிகோலப்படவில்லை. இரண்டு நாடுகளுமே கூட்டுப் பயிற்சி, பேரிடர் உதவி போன்ற நேரங்களில் மட்டுமே உதவி கோர முடியும்.
இந்தியா வேறு எந்த நாட்டுடனும் இதுபோன்றதொரு ஒப்பந்தம் செய்துகொள்ளவில்லை என்பதுபோல, அமெரிக்காவும் தனது படைகளை நிரந்தரமாக நிறுத்தி வைக்கவோ, ராணுவ தளம் அமைக்கவோ வழிகோலாத எந்தவொரு ஒப்பந்தத்தையும் வேறு எந்தவொரு நாட்டுடனும் செய்து கொண்டதில்லை என்பதையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பிறகு ரஷியா ராணுவ ரீதியான சக்தியாக இல்லாமல் போய்விட்ட நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய ராணுவ தளவாடக் கொள்முதல் நாடாக அமெரிக்கா மாறியிருக்கிறது. கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 13 பில்லியன் டாலர் பெறுமானமான ராணுவ தளவாடங்களை நாம் அமெரிக்காவிடமிருந்து வாங்கியிருக்கிறோம்.
இப்போது செய்து கொள்ளப்பட்டிருக்கும் இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்காவின் முக்கியமான ராணுவக் கூட்டாளி என்கிற அந்தஸ்து இந்தியாவுக்குத் தரப்பட்டிருக்கிறது. இதன்மூலம், அமெரிக்காவிடம் உள்ள பல நவீன தளவாடங்களின் தொழில்நுட்பங்களை உரிமம் பெறாமல் பயன்படுத்திக்கொள்ளும் உரிமையை இந்தியா பெறுகிறது. தனது நேச நாடாக ஒப்பந்தம் செய்துகொள்ளாத ஒரு நாட்டுக்கு இப்படியொரு சலுகையை அமெரிக்கா அளிப்பது இதுதான் முதல் தடவை. இதை பயன்படுத்தி நாம் அமெரிக்க பாணியில் ராணுவம் சார்ந்த தொழிற்சாலைகளை இந்தியாவில் நிறுவ முற்பட்டால், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முடியும்; நமது ராணுவத் தேவையில் தன்னிறைவு பெறவும் முடியும்.
அமெரிக்கா இந்தியாவிடம் எதிர்பார்க்கும் நான்கு ஒப்பந்தங்களில் ஒன்று மட்டுமே கையொப்பமிடப்பட்டிருந்தது. இப்போது 12 ஆண்டு பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்கா பல நிபந்
தனைகளைத் தளர்த்தியதால் இந்தியா இரண்டாவது ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறது. ஏனைய இரண்டு ஒப்பந்தங்களிலும் உடனடியாக இந்தியா கையெழுத்திட்டு விடாது என்றுதான் தோன்றுகிறது.
எந்தவொரு வல்லரசு நாட்டுடனான ஒப்பந்தத்திலும், நம்மை பாதிக்கக் கூடிய, நமக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய சில நிபந்தனைகள் இருக்கத்தான் செய்யும். மாறிவிட்ட சர்வதேச சூழலில், இந்தியா நம்பிக்கையின்மையைத் தளர்த்திக்கொள்ளாமல் போனால், நவீன தொழில்நுட்பத்தைப் பெற முடியாது என்பதுதான் உண்மை. இந்த ஒப்பந்தம் இந்தியாவை அமெரிக்காவின் கைப்பாவையாக்கி விடாது என்றாலும், அதன் நட்பு நாடாக சர்வதேச அரங்கில் அடையாளம் காட்டும் என்பதை மறுக்க முடியாது
அமெரிக்காவுடனான இந்த ராணுவ ஒப்பந்தம் சீனா - பாகிஸ்தான் உறவை பலப்படுத்தக்கூடும் என்பதும், ரஷியாவுடனான இந்திய நெருக்கத்தை பலவீனப்படுத்தும் என்பதும் உண்மை. அதேபோல, அமெரிக்கா இந்திய விமான தளங்களையும், கடற்படைத் தளங்களையும் பயன்படுத்திக் கொள்வதைப்போல, நாம் அந்த நாட்டிடம் எந்தவித பயனும் பெறப்போவதில்லை. அதனால், இந்த ஒப்பந்தத்தால் அமெரிக்கா பயனடைவதுபோல, நாம் எந்த வகையிலெல்லாம் அமெரிக்காவின் தொழில்நுட்பத்தையும் நவீன ராணுவ தளவாடங்களையும் பெறுகிறோமோ அதில்தான் நமது வெற்றி அடங்கி இருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...