கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மாற்றம், முன்னேற்றம், 2016!

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவையும் பதவி ஏற்றுவிட்டது. பதவி ஏற்ற கையோடு, தான் தேர்தலில் அளித்திருந்த முக்கியமான வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா முற்பட்டது பாராட்டுக்குரிய வரவேற்கப்பட வேண்டிய முனைப்பு.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:21 pm

ஆசிரியர்

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு, ஜெயலலிதா தலைமையில் அமைச்சரவையும் பதவி ஏற்றுவிட்டது. பதவி ஏற்ற கையோடு, தான் தேர்தலில் அளித்திருந்த முக்கியமான வாக்குறுதிகள் சிலவற்றை நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா முற்பட்டது பாராட்டுக்குரிய வரவேற்கப்பட வேண்டிய முனைப்பு.
 தனது முதல் நடவடிக்கையாக வழிபாட்டுத் தலங்களுக்கும், கல்விச் சாலைகளுக்கும் அருகிலுள்ள 500 டாஸ்மாக் மதுக்கடைகளை மூடுவது என்கிற முதல்வரின் அறிவிப்பு சிரக்கம்பம் செய்து வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. அத்துடன் நிறுத்தாமல், மதுக்கடைகளின் செயல்பாட்டு நேரமும் இரண்டு மணி நேரம் குறைக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல், 18 வயதுக்குக் கீழேயுள்ள மாணவர்களுக்கு மது விற்பனை முழுமையாகவும், கடுமையாகவும் தடை செய்யப்பட வேண்டும்.
 நூறு யூனிட் மின்சாரம் கட்டணமில்லாமல் வீடுகளுக்கு வழங்குவது; கைத்தறி நெசவாளர்களுக்குக் கட்டணமில்லாமல் 200 யூனிட் வழங்குவது; விசைத்தறிக்கு அளிக்கப்படும் கட்டணமில்லா மின்சாரத்தை 750 யூனிட்டாக அதிகரிப்பது; அனைத்துத் திருமண நிதி உதவித் திட்டங்களுடன் வழங்கப்படும் திருமாங்கல்யத் தங்கத்தை 4 கிராமிலிருந்து 8 கிராமாக உயர்த்துவது உள்ளிட்ட உத்தரவுகளையும், ஆறாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்றதைத் தொடர்ந்து அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா.
 கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க் கடன், நடுத்தரக் காலக் கடன், நீண்ட காலக் கடன் ஆகிய அனைத்தையும் தள்ளுபடி செய்து அறிவித்திருப்பது மிகவும் பாராட்டுக்குரிய முடிவு. இதனால், அரசுக்கு ரூ.5,780 கோடி செலவு ஏற்படும் என்றாலும்கூட, தவித்துக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்கு இந்த முடிவு கோடையில் பெய்த மழையாக சிலிர்ப்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக் கூடியது.
 32 ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் வரலாற்று நிகழ்வு நடந்தேறி இருக்கும் இந்த வேளையில், சில மிகப்பெரிய வரவேற்புக்குரிய மாற்றங்களும் நடைபெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழக அரசியல் ஆரோக்கியமான புதிய பாதையை நோக்கி திசை திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன. கருணாநிதி பாணி அரசியலின் அஸ்தமனத்துக்கு 2016 சட்டப் பேரவைத் தேர்தல் வழிகோலுமேயானால், தமிழகத்தில் வருங்காலம் பிரகாசமாக இருக்கும்.
 அமைச்சரவை பதவி ஏற்பில், 89 உறுப்பினர்களைக் கொண்ட தி.மு.க.வின் சார்பில் இப்போது எதிர்க்கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் மு.க. ஸ்டாலின் தனது சகாக்களுடன் கலந்து கொண்டது அரசியல் நனிநாகரிகத்திற்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது. அரசியல் நாகரிகம் கருதி பதவி ஏற்பில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலினின் துணிவும், பண்பும் பாராட்டுக்குரியது. சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில், பின் வரிசையில் தான் அமர்த்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கவோ, அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கவோ செய்யாத மு.க. ஸ்டாலினின் பண்பும் முதிர்ச்சியும் யாரும் எதிர்பாராதது. அவருக்கு உரிய இடமும், மரியாதையும் அதிகாரிகளால் தரப்படவில்லை என்கிற மனவருத்தம் தொலைக்காட்சியில் பார்த்த அனைவருக்குமே இருந்தது.
 இது இப்படியென்றால், மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் என்பதும், அவருக்கு முன் வரிசையில் இடம் தரப்படவில்லை என்பதும் முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குப் போனபோது, அவர் காட்டிய அரசியல் பண்பு முதல்வர் ஜெயலலிதா மீதான மதிப்பையும் மரியாதையையும் பல மடங்கு உயர்த்திவிட்டிருக்கிறது.
 "பதவி ஏற்பு நிகழ்வில் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டதில் எனக்கும் மகிழ்ச்சி. அதற்காக நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். சட்டப் பேரவை உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அவருக்கு இருக்கை அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது அவருக்கு எண்ணக்குலைவை ஏற்படுத்தி இருக்குமேயானால், அவரையோ அவர் சார்ந்த கட்சியையோ அவமரியாதைப்படுத்தும் எண்ணம் எதுவும் இருக்கவில்லை என்று உறுதி அளிக்கிறேன். மு.க. ஸ்டாலின் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள இருப்பதை அதிகாரிகள் என்னிடம் முன்கூட்டியே தெரிவித்திருந்தால், அரசு மரபில் மாற்றம் ஏற்படுத்தி முதல் வரிசையில் அமர்த்தப் பணித்திருப்பேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதுடன், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக அவருடைய கட்சியுடன் இணைந்து செயல்படக் காத்திருக்கிறேன்' என்கிற முதல்வர் ஜெயலலிதாவின் அறிக்கை தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்துவதாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
 முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவராகத் தி.மு.க.வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மு.க. ஸ்டாலினும் தங்களது கண்ணியமான நடவடிக்கைகளால் அனைவரது பாராட்டையும் பெறும் வேளையில், பதவி ஏற்பு விழாவில் மு.க. ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் இடம் தராததற்கு தி.மு.க. தலைவர், "பிறவிக் குணத்தை விடாத ஜெயலலிதா, பழிவாங்கும் போக்கு, திட்டமிட்டு அவமானப்படுத்தினார், அவர் திருந்தவில்லை, திருந்தப் போவதுமில்லை' என்றெல்லாம் கீழ்த்தரமாகவும், தரக்குறைவாகவும் அவசரப்பட்டு வசைபாடியிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது.
 இதுபோல வசைபாடும் கருணாநிதி பாணி அரசியலுக்கு முதல்வர் ஜெயலலிதாவும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் முற்றுப்புள்ளி வைத்து, ராஜாஜி, காமராஜர், அண்ணா காலத்திலிருந்த நாகரிக அரசியலை மீட்டெடுப்பார்களேயானால் அதுதான் 2016 சட்டப் பேரவைத் தேர்தல் ஏற்படுத்தக்கூடிய மிகப்பெரிய திருப்பமாக இருக்கும்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.