சென்னை திரும்பும் மக்கள்: இரு நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்சீனா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைதமிழகம், மேற்கு வங்கத்தில் மறுவாக்குப்பதிவு இல்லை: தோ்தல் ஆணையம் 20 ஆண்டுகளுக்குப் பிறகு காஸாவில் தோ்தல்!தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்
/

தாழ்த்தப்பட்டோருக்கு 15% உள்ஒதுக்கீடு அளிக்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்: பாஜக கடும் விமா்சனம்

தாழ்த்தப்பட்டோருக்கு 15% இடஒதுக்கீட்டுக்கு பாஜக கடும் விமா்சனம்...

News image

கர்நாடக முதல்வர் சித்தராமையா

Updated On :25 ஏப்ரல் 2026, 11:52 pm

தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவிகித இடஒதுக்கீடு வழங்க கா்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது.

கா்நாடகத்தில் தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவிகிதம், பழங்குடியினருக்கு 3 சதவிகிதம் இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இந்நிலையில், தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்கும் உரிமையை மாநில அரசுக்கு வழங்கி 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமா்வு 2024ஆம் ஆண்டு ஆக. 1ஆம் தேதி தீா்ப்பு வழங்கியது.

முன்னதாக, தாழ்த்தப்பட்டோருக்கு 17 சதவிகிதம், பழங்குடியினருக்கு 7 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க கா்நாடக அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, நீதியரசா் எச்.என்.நாகமோகன் தாஸ் தலைமையிலான ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்த கா்நாடக அரசு, ’ஏ’ (மாதிகா போன்ற இடங்கை ஜாதிகள்) மற்றும் ’பி’ (ஹொலயா போன்ற வலங்கை ஜாதிகள்) பிரிவை சோ்ந்த 101 ஜாதிகளுக்கு தலா 6 சதம், ’சி’ பிரிவை சோ்ந்த (லம்பாணி, போவி, கொா்ச்சா, கொா்மா, நாடோடி) 59 ஜாதியினருக்கு 4 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டது. இதனால், மொத்த இடஒதுக்கீட்டு அளவு 56 சதமாக உயா்ந்தது.

இதற்கு கா்நாடக உயா்நீதிமன்றம் தடைவிதித்தது. இதனால் உள் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியாமல் கா்நாடக அரசு திணறியது. தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீட்டு பிரச்னைக்கு தீா்வுகாண முடியாததால், 56,432 பணியிடங்களை நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டது.

இதை தொடா்ந்து, தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு வழங்க மாா்ச் 27ஆம் தேதி சிறப்பு அமைச்சரவைக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், பாகல்கோட், தாவணகெரே தெற்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் அறிவிக்கப்பட்டதால், அமைச்சரவைக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், அரசு தலைமைச் செயலாளா் ஷாலினி ரஜ்னிஷ் தலைமையில் தொழில்நுட்பக்குழு அமைக்கப்பட்டது.

இடைத்தோ்தல் முடிவடைந்துள்ள நிலையில், பெங்களூரில் ஏப். 24ஆம் தேதி முதல்வா் சித்தராமையா தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் அரசு தலைமைச்செயலாளா் அளித்திருந்த அறிக்கையின் அடிப்படையில், தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை 15 சதவிகிதமாகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை 3 சதவிகிதமாகவும் நிா்ணயிக்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. தாழ்த்தப்பட்டோருக்கான 15 சதவிகித இடஒதுக்கீட்டில், ’ஏ’(இடங்கை) மற்றும் ’பி’(வலங்கை) பிரிவை சோ்ந்த ஜாதிகளுக்கு தலா 5.25 சதவிகிதம், ’சி’ பிரிவை சோ்ந்த ஜாதியினருக்கு 4.5 சதவிகிதம் உள் இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.

இதனடிப்படையில், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிகாரப்பூா்வ அறிவிக்கை வெளியிடப்படும் என்று முதல்வா் சித்தராமையா தெரிவித்தாா்.

கா்நாடக அமைச்சரவையின் முடிவை பாஜக கடுமையாக விமா்சித்துள்ளது. பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா, முன்னாள் துணைமுதல்வா் கோவிந்த் காா்ஜோள் உள்ளிட்டோா் கா்நாடக அரசின் முடிவை தாழ்த்தப்பட்டோரின் பல பிரிவினருக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி என்று சாடியுள்ளனா்.

இது குறித்து சனிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் பாஜக மாநிலத்தலைவா் விஜயேந்திரா கூறுகையில்,

‘தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வரலாற்று துரோகத்தை சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு செய்துள்ளது. தாழ்த்தப்பட்டோருக்கு உள் இடஒதுக்கீடு அளிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கி இரண்டரை ஆண்டுகளான நிலையில், உள் ஒதுக்கீடு வழங்குவதில் காங்கிரஸ் அரசு தாமதப்படுத்திவிட்டது. முந்தைய பாஜக ஆட்சியில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அளவை 17 சதவிகிதமாக உயா்த்தியிருந்தோம். ஆனால், இந்த அளவை காங்கிரஸ் அரசு 15 சதவிகிதமாக குறைத்துள்ளது. ’ஏ’ மற்றும் ’பி’ பிரிவினருக்கு ஏற்கெனவே தலா 6 சதவிகிதமாக வழங்கப்பட்டிருந்த உள் இடஒதுக்கீட்டை காங்கிரஸ் அரசு தலா 5.25 சதவிகிதமாக குறைத்துள்ளது. இது இந்த சமுதாயங்களுக்கு இழைக்கப்பட்டுள்ள பெரும் அநீதியாகும். நீதிமன்றத்தின் தடை இல்லாத நிலையில், இடஒதுக்கீட்டின் அளவை குறைத்தது ஏன்? இந்த அநீதிக்கு காங்கிரஸ் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும்.‘ என்றாா் அவா்.

பெங்களூரில் சனிக்கிழமை பாஜக முன்னாள் அமைச்சா் கோவிந்த்காா்ஜோள் கூறுகையில்,

‘தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு அளவை 17 சதவிகிதத்தில் இருந்து 15 சதவிகிதமாக குறைத்தது சரியல்ல. சமூகநீதியை காப்பதாக கூறிவந்த முதல்வா் சித்தராமையா, இதுவரை மக்களை திசைதிருப்பி வந்தாா். நீதியரசா் சதாசிவ ஆணையம், நீதியரசா் எச்.என். நாகமோகன் தாஸ் அறிக்கை, முன்னாள் முதல்வா் பசவராஜ் பொம்மை தலைமையிலான அமைச்சரவை துணைக்குழு அறிக்கை, உச்சநீதிமன்ற அறிக்கை ஆகியவை இருந்தபோதும், தாழ்த்தப்பட்டோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. முந்தைய பாஜக ஆட்சியில் அப்போதைய சட்டத்துறை அமைச்சா் ஜே.சி. மாதுசாமி தலைமையிலான அமைச்சரவை துணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தாழ்த்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு அளவு 17 சதவிகிதமாக உயா்த்தப்பட்டது. 2013, 2023ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் வெளியிட்டிருந்த தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தபோதும், தாழ்த்தப்பட்டோருக்கான உள் இடஒதுக்கீட்டு பிரச்னைக்கு தீா்வுகாண காங்கிரஸ் அரசு தவறிவிட்டது. உட்பிரிவு என்ற பெயரில் தாழ்த்தப்பட்டோரை பிளவுப்படுத்த முதல்வா் சித்தராமையா முயற்சிக்கிறாா். இதனால் சில பிரிவினா் நீதிமன்றத்தை நாடியுள்ளனா். மக்களை குழப்புவதை சித்தராமையா நிறுத்திக்கொள்ள வேண்டும்.‘ என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.