கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

(உத்தர)கண்டம் தப்பியது!

உத்தரகண்ட் மாநில விவகாரம் மத்திய அரசுக்கு ஒரு களங்கமாகவே அமைந்துவிட்டது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் உட்பூசல் தானாகவே பெரிதாகி, உடைந்து, தானாகவே தகுதியிழக்கும் வரை மத்திய அரசு நிதானமாக வேடிக்கைப் பார்த்திருக்கலாம். அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்ததைக் காலம் தாழ்த்தியிருந்தால் இத்தனை சிக்கலும், சங்கடங்களும் ஏற்பட்டு இருக்காது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:15 pm

ஆசிரியர்

உத்தரகண்ட் மாநில முதல்வராக ஹரீஷ் ராவத் பதவியேற்கலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது. மத்திய அரசும், அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கிக் கொள்ளப்படும் என்று அறிவித்திருக்கிறது.
 உத்தரகண்ட் மாநில விவகாரம் மத்திய அரசுக்கு ஒரு களங்கமாகவே அமைந்துவிட்டது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் உட்பூசல் தானாகவே பெரிதாகி, உடைந்து, தானாகவே தகுதியிழக்கும் வரை மத்திய அரசு நிதானமாக வேடிக்கைப் பார்த்திருக்கலாம். அந்த மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டு வந்ததைக் காலம் தாழ்த்தியிருந்தால் இத்தனை சிக்கலும், சங்கடங்களும் ஏற்பட்டு இருக்காது.
 ஒன்பது எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அவையின் மொத்த உறுப்பினர்கள் 61 பேர். இதில் பா.ஜ.க. 28 வாக்குகளை சிதறாமல் பெற்றுள்ளது. காங்கிரஸ் தனது 27 வாக்குகளையும் மற்ற கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து மொத்தம் 33 பெற்றுள்ளது. பெரும்பான்மை இல்லாத அரசாகவே ஹரீஷ் ராவத் தனது ஆட்சியைத் தொடர முடியும்.
 தற்போது நடைபெற்ற பேரவைக் கூட்டத்தில் இவர்கள் வாக்கு அளிக்க நீதிமன்றம் அனுமதிக்கவில்லை என்றாலும், ஒன்பது எம்.எல்.ஏ.க்களின் தகுதிநீக்கம் சரியா என்பது குறித்து இன்னும் வழக்கு முடிவுக்கு வரவில்லை. இந்த வழக்கின் இறுதி முடிவு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்போது பிரச்னை மீண்டும் தலைதூக்கக்கூடும்.
 உச்சநீதிமன்றத்தில், ஹரீஷ் ராவத் பதவியேற்கலாம் என்று தீர்ப்பளித்த அதேவேளையில், தகுதிநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஷீலா ராணி ராவத் ஒரு பிரச்னையை எழுப்பியுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி காலை ஏழு மணிக்கு அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், பேரவைத் தலைவர் தங்களது தகுதிநீக்கம் குறித்த அறிவிப்பை மாலையில் வெளியிட்டது சட்டத்துக்குப் பொருந்தாது என்று கூறியுள்ளார். இந்த வாதத்தை ஏன் முந்தைய விசாரணையில் தெரிவிக்கவில்லை என்றுகூறி, அதை ஏற்க மறுத்துவிட்டது உச்சநீதிமன்றம். இதே வாதம், உயர்நீதிமன்றத்திலும் வைக்கப்படும்.
 தற்போது, அந்த ஒன்பது பேர் இல்லாமலேயே ஓர் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க முடிந்திருக்கிறது என்கிற நிலையில், இவர்கள் ஆட்சி கலைக்கப்பட காரணமாக இருக்கப் போவதில்லை என்
 பதும், இவர்கள் கருத்துச் சுதந்திரத்துடன் எதிர்த்து நின்றார்கள் என்றாகிவிடும். இந்த ஒரு வாய்ப்பு மட்டுமே இந்த ஒன்பது பேருக்கும் சாதகமாக உள்ளது. இந்த அடிப்படையில் அவர்கள் மீதான தகுதிநீக்கம் சரியில்லை என்று கூறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
 அத்துடன், ஒன்பது எம்.எல்.ஏ.க்களிடமும் பேரம் பேசியதாக ராவத் மீது வழக்கு உள்ளது. அவர் ஏற்கெனவே அந்த காட்சித் தொகுப்பில் இடம்பெற்றிருப்பது தான்தான் என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார்; சி.பி.ஐ. விசாரணையிலும் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் எத்தகைய முடிவு காணப்படும் என்பதைப் பொருத்தும் அவர் பதவியில் நீடிப்பது அமையும்.
 சட்டப் பேரவை, நாடாளுமன்றம் தொடர்பான பிரச்னைகளில் நீதித் துறை தலையிட்டுத் தீர்ப்பு வழங்குவது என்பது துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல, ஆபத்தானதும்கூட. சட்டப் பேரவை நடவடிக்கைகளில் பேரவைத் தலைவரின் முடிவுதான் இறுதியாக இருக்க வேண்டும் என்பதும், அதில் நீதித் துறை தலையிட முடியாது, கூடாது என்பதும்தான் நாடாளுமன்ற ஜனநாயக மரபு. அரசமைப்புச் சட்டமும் அதைத்தான் வலியுறுத்துகிறது.
 ஆனால், உத்தரகண்ட்டில் ஏற்பட்டது போன்ற சூழ்நிலைகளில், நீதித் துறை தலையிடுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிற நிலைமையை மக்கள் பிரதிநிதிகளே உருவாக்குகிறார்கள். உச்சநீதிமன்றமும் சரி, இந்தப் பிரச்னையை இப்படி இழுத்தடித்திருக்க வேண்டாம். குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு எதிரான மனுக்களை முதலில் நிராகரித்ததும், பிறகு ஏற்றுக்கொண்டு பேரவை வாக்கெடுப்பைத் தள்ளிப்போட்டதும் தவிர்க்கப்பட்டிருக்கலாம். முதலிலேயே, வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட்டிருந்தால், பிரச்னை எப்போதோ முடிந்திருக்கும்.
 1994-இல் வழங்கப்பட்ட எஸ்.ஆர். பொம்மை வழக்கின் தீர்ப்பை, உத்தரகண்ட் பிரச்னையில் மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம். ஒரு முதல்வரின் பெரும்பான்மை பலத்தை சட்டப் பேரவைதான் தீர்மானிக்க முடியுமே தவிர, ஆளுநர் மாளிகையோ மத்திய அரசோ அல்ல என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறது. மாநில அரசுகளை அகற்ற அரசியல் சட்டப் பிரிவு 356 பயன்படுத்தப்படக் கூடாது என்பதை இந்தத் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறது உச்சநீதிமன்றம்.
 அதற்கு நீதித் துறைக்கு நன்றி சொல்ல வேண்டிய அதேநேரத்தில், பேரவைகளின் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, வாக்கெடுப்புக்கு வழிகோலுவது, வாக்கெடுப்பு முடிவுகளை அறிவிப்பது உள்ளிட்ட தனக்குத் தொடர்பில்லாத விவகாரங்களில் நீதித் துறை தலையிட வேண்டியிருப்பது மிகவும் வேதனைக்குரியது. இது பேரவைத் தலைவரின் உரிமையாக மட்டுமே இருக்க முடியும். இதுபோன்ற சூழல் இனிமேலும் தொடர்வது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. அதை அரசியல் கட்சிகளும், பேரவை உறுப்பினர்களும் உணரவேண்டும்.
 இவையெல்லாம் நடந்துமுடிந்த பிறகும், முதல்வர் ஹரீஷ் ராவத்தின் அமைச்சரவை எத்தனை காலம் தாக்குப்பிடிக்கும் என்பது கேள்விக் குறியாகத்தான் இருக்கிறது. அவரே, ஆட்சியைக் கலைத்துவிட்டு மக்கள் மன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.