கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

அரசே ஏமாற்றுவதா?

"கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 1-ஆம் தேதியிலிருந்து பெட்ரோலின் விலை இதுவரை 32 முறை குறைக்கப்பட்டுள்ளது, 21 முறைதான் உயர்த்தப்பட்டது; இந்த காலகட்டத்தில் டீசலின் விலை 19 முறை குறைக்கப்பட்டது, 28 முறை உயர்த்தப்பட்டது' என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறியிருக்கிறார்.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:14 pm

ஆசிரியர்

"கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 1-ஆம் தேதியிலிருந்து பெட்ரோலின் விலை இதுவரை 32 முறை குறைக்கப்பட்டுள்ளது, 21 முறைதான் உயர்த்தப்பட்டது; இந்த காலகட்டத்தில் டீசலின் விலை 19 முறை குறைக்கப்பட்டது, 28 முறை உயர்த்தப்பட்டது' என்று அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கும்போது கூறியிருக்கிறார். ஒவ்வொரு முறை பெட்ரோல் விலையை அதிகரிக்கும்போதும் எவ்வளவு அதிகரிக்கப்பட்டது; குறைக்கும்போது எவ்வளவு குறைக்கப்பட்டது என்கிற புள்ளிவிவரத்தையும் அமைச்சர் வெளியிட்டிருக்க வேண்டும்.
 கடந்த ஜூலை 2014 முதல் மார்ச் 2016 வரையிலான 21 மாத காலகட்டத்தில், சர்வதேச கச்சா எண்ணெய் விலை 65% சரிந்திருக்கிறது. ஆனால், பெட்ரோல் பம்புகளிலிருந்து சராசரி இந்தியன் பெறும் பெட்ரோலும், டீசலும் வெறும் 15% தான் விலை குறைந்திருக்கிறது. இதற்குக் காரணம், மத்திய - மாநில வரிகளும், கலால் வரியும் கணிசமாக உயர்த்தப்பட்டு சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு நிகராகப் பெட்ரோல், டீசலின் சில்லறை விற்பனை விலை குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
 இதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வஞ்சப் புகழ்ச்சியுடன் கூடிய ஒரு விசித்திரமான விளக்கத்தை அளித்திருக்கிறார். வருங்காலத்தில் பழையபடி சர்வதேச கச்சா எண்ணெய் விலை அதிகரித்துவிட்டால், அதனால் ஏற்படும் அதிர்ச்சியிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காகத்தான் இப்படி வரிகளை அதிகரிக்கும் உத்தியை மத்திய அரசு கடைபிடிக்கிறதாம். இதை விளக்கம் என்று சொல்வதா இல்லை கிண்டல் என்பதா?
 இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, எஸ்úஸா, கால்டெக்ஸ், பர்மா ஷெல் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு, விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டுவந்தன. 1959-இல் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அரசு நிறுவனமாக உருவாக்கப்பட்டது. 1970-களில் அன்றைய இந்திரா காந்தி அரசு, எஸ்úஸா கால்டெக்ஸ் நிறுவனங்களை அரசு ஏற்றெடுத்து ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் என்கிற பெயரிலும், பர்மா ஷெல்லை பாரத் பெட்ரோலியம் என்கிற பெயரிலும் நடத்தத் தொடங்கியது.
 அதற்குப் பிறகு கச்சா எண்ணெய் விலை குறித்துக் கவலைப்படாமல் குறிப்பிட்ட விலையில்தான் பெட்ரோலும், டீசலும் விற்கப்பட்டு வந்தன. இந்தியாவிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களும், விநியோகமும், இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம், இந்தோ-பர்மா பெட்ரோலியம் என்கிற நான்கு அரசு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்ததால், குறிப்பிட்ட விலையில் விற்பனை என்பது சாத்தியமாயிற்று. இந்த எண்ணெய் நிறுவனங்கள் மிகப்பெரிய இழப்பை சந்தித்தன என்பதும், மக்களுக்குக் குறிப்பிட்ட விலையில் வழங்கப்பட்ட பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், சமையல் எரிவாயு ஆகியவற்றிற்கு அரசு மானியம் வழங்கி அவை சாமானியனுக்கும் பயன்படும் அளவில் நிலைநிறுத்தப்பட்டன என்பதும் உண்மை.
 2002 ஏப்ரல் 1-ஆம் தேதி முதல், நிர்ணயிக்கப்பட்ட விலையில் பெட்ரோலியப் பொருள்களின் விநியோகம் கைவிடப்பட்டு, சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயம் என்பது அன்றைய வாஜ்பாயி தலைமையிலான அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம், பெட்ரோலியத் துறைக்கு நிறைய முதலீடு வரக்கூடும் என்றும், தனியார் நிறுவனங்களின் வரவால் ஏற்படும் போட்டி நுகர்வோருக்கு சாதகமாக மாறும் என்றும் அதற்குக் காரணம் கூறப்பட்டது. ஆனாலும்கூட, மானியம் முற்றிலுமாக அகற்றப்படவில்லை.
 இந்த நிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய அவசியம், ரிலையன்ஸ், எஸ்ஸார், ஷெல், டோட்டல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்களும் பெட்ரோல், டீசல் சுத்திகரிப்பு, விநியோகம் போன்றவற்றில் ஈடுபடத் தொடங்கியதால் ஏற்பட்டது. மானியம் அரசுத் துறை நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், சமமான வியாபார நிலைமை இல்லை எனவும் அவர்கள் குரலெழுப்ப முற்பட்டனர்.
 2014-இல் அரசின் கட்டுப்பாடு முற்றிலுமாக விலக்கப்பட்டது. அடுத்த சில மாதங்களில் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வந்த நேரம், சர்வதேச கச்சா எண்ணெய் விலை மளமளவென்று சரியத் தொடங்கியது. அரசு இதன் பலனை நுகர்வோருக்குத் தந்திருந்தால் அது நியாயம். ஆனால், சர்வதேசச் சந்தையில் சரிவின் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நுகர்வோருக்கு அளித்துத் தனது வருவாயைப் பெருக்கிக் கொள்ளும் உத்தியை அரசு கடைப்பிடிக்கிறது. இதனால், அரசின் நிதிநிலைமை வலுப்பெற்றிருக்கிறது. ஆனால், அதன் பளு பொதுமக்களின் தலையில் இறக்கப்பட்டிருக்கிறது.
 ஒருபுறம், மோட்டார் வாகன எரிவாயுவுக்கான கலால் வரியை அதிகரித்து மத்திய அரசு வருவாய் ஈட்டுகிறது. இன்னொருபுறம், சமையல் எரிவாயுவுக்கு வங்கி வழி நேரடி மானியத்தின்மூலம், தனது மானியத் தொகையைக் கணிசமாகக் குறைத்துவிட்டிருக்கிறது. இதன்மூலம் தனது நிதிப் பற்றாக்குறையை அரசு ஈடுகட்ட முயற்சிப்பது புத்திசாலித்தனமான நிதி நிர்வாகமாக இருக்கலாம். ஆனால், தேர்ந்தெடுத்து ஆட்சியில் அமர்த்தி இருக்கும் மக்களுக்குச் செய்யும் வஞ்சனை.
 ஒருபுறம், கட்டுப்பாடுகளைத் தளர்த்தி சமச்சீரான வியாபார சூழலை உருவாக்குகிறோம் என்று கூறும் அரசு, சுங்க வரியை அதிகரித்து சர்வதேச கச்சா எண்ணைய் விலைக்குறைவு மக்களுக்குப் பயன்படாமல் தடுப்பது என்பது ஒருவகையில் பார்த்தால் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதுபோலத்தான். இதற்கு பதிலாக நிர்ணயிக்கப்பட்ட விலையையே மீண்டும் அறிமுகப்படுத்திவிடலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.