கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தீர்ப்புக்கு மருந்து!

இந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர்கள், இந்த தேர்வு கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியபோது, நுழைவுத் தேர்வு கூடாது என்கின்ற ஒன்றை மட்டுமே வலியுறுத்தாமல், தமிழ்நாட்டு மாணவர்களிடமும், பொதுவாக நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களிடமும் காணப்படும் ஒருவிதமான அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும்,

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:14 pm

ஆசிரியர்

மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு குறித்த உத்தரவை மாற்ற முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறிவிட்டதால், தமிழக மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பெற்றோர்கள் மிகவும் கலக்கத்தில் உள்ளார்கள்.
 இந்த வழக்கில் வாதாடிய வழக்குரைஞர்கள், இந்த தேர்வு கூடாது என்ற கருத்தை வலியுறுத்தியபோது, நுழைவுத் தேர்வு கூடாது என்கின்ற ஒன்றை மட்டுமே வலியுறுத்தாமல், தமிழ்நாட்டு மாணவர்களிடமும், பொதுவாக நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களிடமும் காணப்படும் ஒருவிதமான அச்சத்தைப் போக்க வேண்டும் என்றும், இதில் உள்ள சில குழப்பங்களைத் தீர்க்க வேண்டும் என்றும் நீதிபதிகளிடம் வேண்டுகோள் விடுத்திருக்க வேண்டும்.
 மே 1-ஆம் தேதி, 6 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் தேர்வு எழுதியுள்ளனர். இவர்களில் விருப்பமுள்ளவர்கள் மீண்டும் அடுத்து ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ள 2-ஆம் கட்ட நுழைவுத் தேர்வு எழுதலாம். ஆனால், முதல் நுழைவுத் தேர்வு மதிப்பெண் ரத்தாகிவிடும் என்ற நிபந்தனையுடன் அனுமதிக்கலாம் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இரண்டாம் கட்ட பொது நுழைவுத் தேர்வு மிகவும் எளிமையானதாக இருந்தால், முதல் கட்ட தேர்வில் எழுதியவர்களின் சமவாய்ப்பு பாதிக்கப்படாதா? இந்த இரு கட்ட தேர்வுகளில் எது எளிமையாக இருந்தது, எது கடினமாக இருந்தது, இதனால் எந்த தொகுப்பு மாணவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதை எப்படித் தீர்மானிப்பது?
 தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீட்டு முறை அமலில் உள்ளது. மகாராஷ்டிரத்தில் 52% இடஒதுக்கீடும், ஆந்திரம் மற்றும் தெலங்கானாவில் 50% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடும் உள்ளது. இந்த ஒதுக்கீட்டு முறையை அந்த மாநிலங்கள் தொடர்ந்து செயல்படுத்தலாமா?
 அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதினாலும், தற்போது பொறியியல் பொது நுழைவுத் தேர்வில் உள்ள அதே நடைமுறைப்படி, தேசிய பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது, அந்தந்த மாநில அளவிலான தரவரிசைப்படி 85% இடங்களையும் மீதமுள்ள 15% இடங்களை பிற மாநிலத்தவருக்காகவும் ஒதுக்கீடு செய்யும் அதே நடைமுறை அமலுக்கு வருமா?
 தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் தனியாக நுழைவுத் தேர்வு நடத்த அனுமதியில்லை என்ற போதிலும், அவர்கள் அந்தந்த மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய இடங்களை நீதிமன்றமே தீர்மானிக்குமா அல்லது மாநில அரசுகளின் முடிவுக்கு விட்டுவிடப்படுமா? அல்லது தனியார் கல்லூரிகளின் விருப்புரிமையாக அமையுமா?
 மேலே எழுப்பியிருக்கும் நான்கு கேள்விகளுக்கான விளக்கத்தை உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்துமேயானால், தற்போது அந்தந்த மாநிலங்களில் உள்ள மருத்துவம் விழையும் மாணவர்களும் அவர்தம் பெற்றோரும் நிம்மதி அடைவார்கள்.
 அகில இந்திய அளவிலான தரவரிசையை வெளியிடுவதுடன், மாநில அளவிலான தரவரிசையும் பகுத்துக் கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிடும் என்பது உறுதி. இல்லையெனில், இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண முடியாது. இடஒதுக்கீட்டு முறையிலும்கூட, தற்போதைக்கு நீதிமன்றம் புதிய உத்தரவுகளை வழங்காது. அதையும் மாநிலங்களுக்கே விட்டுவிடும் என நம்புவதற்கு இடமுண்டு.
 ஆனால், தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பினால் மட்டுமே கடிவாளம் போட முடியும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தெளிவாக வரையறை செய்யாவிட்டால், இந்தக் கல்லூரிகள் பொது ஒதுக்கீட்டுக்கு வழங்கும் இடங்களைத் தர மறுப்பார்கள். தற்போது தனியார் கல்லூரிகளின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும் நிலையில், அவர்கள் 35% இடங்களை பொது நுழைவுத் தேர்வின் தரவரிசையில் வரும் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.
 இவை யாவற்றுக்கும் மேலாக, தமிழ்நாட்டைப் பொருத்தவரை, மருத்துவம் விழையும் மாணவர்களுக்கு உள்ள ஒரே சிக்கல், மாநில பாடத் திட்டம் மற்றும் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் இரண்டுக்குமான வேறுபாடுதான்.
 மாநிலத் தரவரிசைப்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளில் 85% இடங்களைப் பூர்த்தி செய்தாலும், தரவரிசையில் முன்னிலை வகித்து மருத்துவக் கல்லூரியில் சேரப்போகிறவர்களில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களே அதிகமாக இருப்பார்கள் என்பதை இப்போது சொல்லிவிட முடியும். ஏனென்றால், அகில இந்திய அளவில் இத்தேர்வை நடத்தும் பொறுப்பை சி.பி.எஸ்.இ. ஏற்றுள்ளது. அவர்கள் தங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்பவே வினாத் தாள்களை அமைப்பார்கள்.
 தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் பயின்ற, மருத்துவம் விழையும் மாணவர்கள் அனைவரும் இந்தத் தேர்வில் வாய்ப்பைப் பெற வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழிதான் உள்ளது.
 மே 17-ஆம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. தற்போதைய நடைமுறைப்படி "கட்-ஆஃப்' மதிப்பெண் 190 வரை பெறும் மாணவர்கள் அனைவரையும் அந்தந்த மாவட்டத் தலைநகரில், மாவட்ட ஆட்சியரின் மேற்பார்வையில், சி.பி.எஸ்.இ. ஆசிரியர்களைக் கொண்டு, பொதுநுழைவுத் தேர்வுக்கான பயிற்சியை இலவசமாக, தங்கும் வசதி அளித்து வழங்குவது தமிழக அரசின் கடமை; கல்வித் துறையின் பொறுப்பு.
மே 24 முதல் ஜூலை 24 வரையிலான இரண்டு மாத காலத்தில் 190 "கட்-ஆஃப்' பெற்ற மாணவர்கள் தங்கள் அறிவை நுட்பமாக்கி, மருத்துவப் பொது நுழைவுத் தேர்வை எதிர்கொள்வார்கள். சி.பி.எஸ்.இ. மாணவர்களைப் புறந்தள்ளவும் செய்வார்கள். இந்த வாய்ப்பை வழங்கும் கடமை அரசுக்கு உண்டு.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.