கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தவிக்குமே தமிழகம்!

கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் தற்போது நிலவும் மிகப்பெரும் கடும் தண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை இரண்டு: நிலத்தடி நீர் மிக மோசமாக சுரண்டப்படுகிறது. நிலத்தடி நீர் கரும்பு போன்ற பணப்பயிருக்கு அதிகளவு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இந்த இரு காரணங்களும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்துவன; தமிழ்நாட்டுக்கும்!

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:14 pm

ஆசிரியர்

கர்நாடகத்திலும், மகாராஷ்டிரத்திலும் தற்போது நிலவும் மிகப்பெரும் கடும் தண்ணீர் பற்றாக்குறைக்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை இரண்டு: நிலத்தடி நீர் மிக மோசமாக சுரண்டப்படுகிறது. நிலத்தடி நீர் கரும்பு போன்ற பணப்பயிருக்கு அதிகளவு உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இந்த இரு காரணங்களும் எல்லா மாநிலங்களுக்கும் பொருந்துவன; தமிழ்நாட்டுக்கும்!
 2011-இல் மத்திய அரசு நிலத்தடி நீர் ஆதாரம் குறித்த புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் 48 தாலுகாக்களில் நிலத்தடி நீர் கிடைப்பது அரிதான நிலைமையை எட்டியுள்ளது. 235 தாலுகாக்களில் நிலைமை மெச்சும்படியாக இல்லை. 374 தாலுகாக்களில் மிகஅதிகமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்பட்டு வருகிறது. 34 தாலுகாக்களில் கடல்நீர் உள்புகுந்துவிட்டது.
 நிலத்தடி நீர் கட்டுப்பாடின்றி உறிஞ்சப்படுவதைத் தடுக்கவும், நிலத்தடி நீரை உயர்த்தவும் மத்திய நிலத்தடி நீர் ஆணையம் என்று ஒரு துறையை மத்திய அரசு உருவாக்கிய போதிலும் இதன் செயல்பாடு வெறும் ஆலோசனை சொல்லும் நிலையைவிட்டு, அதிகாரம் பெற்ற நிலைக்கு மாறவே இல்லை. நிலத்தடி நீர் அதிகளவு உறிஞ்சப்படுவதைத் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள், சட்டங்கள் கொண்டு வரலாம் என்று இன்னும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
 இந்த ஆணையம் நிலத்தடி நீரைப் பெருக்கும் பெருந்திட்டம் ஒன்றை 2013-இல் உருவாக்கியது. இதன்படி இந்தியாவில், மழைநீர் சேகரிப்பு சாத்தியமுள்ள பகுதிகள் என 9,41,541 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கண்டறியப்பட்டது. இது குறித்து மாநில அரசுகளுக்கும்கூட சுற்றறிக்கைகள் அனுப்பப்பட்டன. இந்த நிலத்தடி நீர் பெருக்கும் பெருந்திட்ட வரைபடத் தயாரிப்பில், தமிழகத்தின் அண்ணா பல்கலைக்கழகத்தின் தொலைஉணர் தொழில்நுட்பப் பிரிவின் பங்கும் உண்டு.
 தமிழ்நாட்டின் 1,30,058 சதுர கிலோ மீட்டர் பரப்பில், நிலத்தடி நீரைப் பெருக்கும் வழிமுறைகளுக்கு சாத்தியமான பகுதிகள் 68,839 சதுர கிலோ மீட்டர். இந்தப் பகுதிகளில் ஏற்கெனவே உள்ள ஏரிகளை தூர் வாருதல், ஆழ்துளைகள் அமைத்து நீரை நிலத்தில் செலுத்துதல், சிறிய குளங்கள் வெட்டுதல், ஏரி குளங்களுக்கு வந்து சேரமுடியாமல் வீணாகும் நீருக்கான வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த நீர், நீர்நிலைக்கு வந்து சேர உதவுதல் என பல வகையான திட்டங்களை அந்தந்தப் பகுதியின் தன்மைக்கு ஏற்ப பரிந்துரைக்கவும் செய்திருக்கிறார்கள். இவற்றை முறையாகப் பயன்படுத்தினால் கிடைக்கக் கூடிய நீர் 712 மில்லியன் சதுர மீட்டர்! இவற்றை திட்டமிட்டபடி செய்து முடிக்க தோராய மதிப்பீடு ரூ. 9,284 கோடி!
 இதனை முனைப்பாக செய்து முடித்தால் மட்டுமே தமிழ்நாடு தண்ணீர்ப் பற்றாக்குறையிலிருந்து தப்பிக்க முடியும். இல்லாவிட்டால் நாமும் சரக்கு ரயிலிலும் டேங்கர் லாரிகளிலும் தண்ணீரைத் தேடி அலைய வேண்டிய அவலம் நேரிடும்.
 நிலத்தடி நீரை யார் அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள் என்றால், தொழில்துறை, வேளாண்மை என்று எளிதாகச் சொல்கிறார்கள். ஆனால், இந்த இரு பிரிவுகளைவிடவும் மிக அதிகமாக நிலத்தடி நீரைச் சுரண்டுபவர்கள் நகர, மாநகர குடியிருப்புகள்தான். நகர்ப் புறங்களில் மிகச் சிறு சிறு அளவில் ஒவ்வொரு குடியிருப்பும் மோட்டார் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்சிக்கொண்டே இருக்கின்றன.
 நகர்ப்புறங்களில் அடிபம்புகள் மூலம் நிலத்தடி நீரை எடுத்தபோது, உடல் உழைப்பு தேவைப்பட்டது. தேவைப்படும் நீரை மட்டுமே நிலத்தடியிலிருந்து எடுத்தார்கள். ஆனால், மோட்டார் போட்டு உறிஞ்சும் கலாசாரம் வந்தபிறகு, கட்டுப்பாடு இல்லாமல் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது; வீணடிக்கப்படுகிறது. இந்த புதிய கலாசாரத்தால் நிலத்தடி நீர் மட்டுமல்ல, மின் பயன்பாடும் அதிகரித்துள்ளது.
 வேளாண்மையில் நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு நமது விவசாயிகளிடம் பரவலாக இல்லை. குறிப்பாக காவிரி, தாமிரவருணி ஆற்றுப் பாசனம் பெறுவோர் நீர்மேலாண்மையில் அக்கறை காட்டுவதில்லை. பாரம்பரிய வேளாண்மை முறைகள் கடைப்பிடிக்கப்படுவதில் தவறில்லை. ஆனால், அன்றைய சூழல், புவிவெப்பம், உணவுத் தேவை எல்லாமும் வேறாக இருந்தன. இன்றைய நிலைமை முற்றிலும் மாறிவிட்டிருக்கிறது.
 நாம் கரும்பையும் உயர்ரக அரிசியையும் உற்பத்தி செய்து, வெளி மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் அனுப்புவதில் கிடைக்கும் பணம் எத்தனை கோடி என்று எண்ணிப் பார்ப்பதைக் காட்டிலும், இந்தக் கரும்பு, சன்னரக நெல் உற்பத்திக்கு நாம் செலவிட்ட தண்ணீர் அளவு எவ்வளவு என்று பார்த்தால், நாம் பெரும் நட்டத்துக்கு விற்பனை செய்துகொண்டிருக்கிறோம் என்பது புரியும்.
 நதிநீர்ப் பாசனம், கிணற்றுப் பாசனம், மானாவாரி பயிர்கள் என மூவகை வேளாண்மைக்கும் தண்ணீர் குறித்த விழிப்புணர்வை விவசாயிகளுக்குத் தனித்தனியாக ஏற்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
 தமிழகத்தில் ஆண்டுதோறும் இரு பருவமழைகள் மூலம் கிடைக்கும் சராசரி 1,000 மி.மீ. மழை எந்த அளவுக்கு நிலத்தடி நீராக மாறுகிறது? இதில் நாம் தொழில்துறைக்கும், குடிநீர்த் தயாரிப்பு ஆலைகளுக்கும் வழங்கும் அளவு என்ன? பயிர்களுக்காகச் செலவிடும் நீர் எவ்வளவு? நகர மக்கள் செலவிடும் நிலத்தடி நீர் எவ்வளவு? என்று துல்லியமான கணக்கு இல்லாமல், நிலத்தடி நீரைக் காப்பாற்றுவது இயலாது.
 ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தேவை: நாள்தோறும் சராசரியாக 5 லிட்டர் விலையில்லா குடிநீர். மற்றத் தேவைகளுக்கு 50 லிட்டர் தண்ணீர்! ஆனால், இதுதான் இன்றைய உலகின் மிகப்பெரிய சவால்!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.