நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

தாங்குமா தமிழகம்?

தமிழகத்தின் முக்கிய இரண்டு அரசியல் சக்திகளான அதிமுகவும், திமுகவும் தங்களது தேர்தல் அறிக்கைகளை, மன்னிக்கவும், இலவசங்களை அறிவித்துவிட்டன. கட்சியின் செயல் திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற உத்தேசித்துள்ள வளர்ச்சிப் பணிகள், சட்டமாக்க உத்தேசிக்கும் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதுதான் தேர்தல் அறிக்கை.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:12 pm

ஆசிரியர்

தமிழகத்தின் முக்கிய இரண்டு அரசியல் சக்திகளான அதிமுகவும், திமுகவும் தங்களது தேர்தல் அறிக்கைகளை, மன்னிக்கவும், இலவசங்களை அறிவித்துவிட்டன. கட்சியின் செயல் திட்டங்கள், அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற உத்தேசித்துள்ள வளர்ச்சிப் பணிகள், சட்டமாக்க உத்தேசிக்கும் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ஆகியவற்றைத் தெரிவிப்பதுதான் தேர்தல் அறிக்கை. ஆனால், தமிழகத்தைப் பொருத்தவரை, தேர்தல் அறிக்கை என்பது ஆட்சிக்கு வந்தால் வழங்க இருக்கும் சலுகைகளின், இலவசங்களின் பட்டியல்தான் என்றாகி விட்டிருக்கிறது.
 அனைவரும் அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்காகக் காத்திருந்தது, அந்த அறிக்கையில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததைவிட அதிகமாக என்னென்ன இலவசங்களும், சலுகைகளும் காணப்படும் என்பதை எதிர்பார்த்துத்தான். அவர்களது எதிர்பார்ப்பு பொய்க்கவில்லை. அனைத்துக் குடும்ப அட்டைதாரருக்கும் விலையின்றி செல்லிடப்பேசி என்பதில் தொடங்கி ஒட்டுமொத்த விவசாயக் கடன்கள், கல்விக் கடன்கள் தள்ளுபடி வரை இதற்கு மேல் வாரி வழங்க முடியாது என்கிற அளவில் இலவசங்களும், சலுகைகளும், கடன் தள்ளுபடிகளும் அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருக்கிறது.
 அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் சலுகைகளை நிறைவேற்ற வேண்டுமானால் ஆண்டொன்றுக்கு ரூ.50,000 கோடி அதிகமாகத் தேவைப்படும். எங்கிருந்து இதற்கான வருவாய் அரசுக்கு வரப்போகிறது என்கிற கேள்வி எழலாம். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் இலவசங்களையும், மானியங்களையும் அறிவித்தால், அந்தச் செலவினத்திற்கான வருமானம் எங்கிருந்து, எப்படி பெறப்படும் என்பதற்கான வழிமுறைகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அதனால், திமுக, அதிமுக கட்சித் தலைமைகள் தங்களது பொருளாதார ஆலோசகர்கள் மூலம் அதற்கு ஏதாவது வழிமுறைகளை வைத்திருக்கக்கூடும்.
 1957-இல் சென்னை ராஜதானி பிரிக்கப்பட்டு, சென்னை மாநிலம் உருவானபோது தாக்கல் செய்யப்பட்ட முதல் நிதிநிலை அறிக்கையின்படி அரசின் வருவாய் ரூ.204.39 கோடி. செலவினங்கள் போகப் பற்றாக்குறை ரூ.7.60 கோடி. இதுவே, கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி தமிழக அரசின் மொத்த வருவாய் ரூ.1,52,004.23 கோடி. பற்றாக்குறை ரூ.9,154.78 கோடி.
 திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே மதுவிலக்கைக் கொண்டு வரப்போவதாகத் தங்கள் தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டிருக்கின்றன. தமிழகத்தில் உள்ள 6,800 "டாஸ்மாக்' மதுபானக் கடைகளிலிருந்து 2014 - 15 நிலவரப்படி அரசுக்குக் கிடைக்கும் வருவாய் ரூ.24,164 கோடி. இந்த வருவாயையும் இழந்து, அதிகப்படியான சலுகைகளையும், இலவசங்களையும் வழங்குவது என்றால், அது சாத்தியமா என்பது இருக்கட்டும், தேவைதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டாமா?
 அதிமுக அரசு கடந்த ஐந்தாண்டுகளில் 1.85 கோடி பயனாளிகளுக்கு மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர் விலையில்லாப் பொருளாக வழங்கியதில் ரூ.10 ஆயிரம் கோடி செலவாகி இருக்கிறது. இலவச மாடுகள் வழங்கும் திட்டப்படி 5 ஆண்டுகளில் ரூ.300 கோடி செலவில் 60,000 கறவை மாடுகளும், ஆடு வளர்ப்புத் திட்டத்தின்கீழ் ரூ.925 கோடி செலவில் 7 லட்சம் ஆடுகளும், ரூ.3,100 கோடி செலவில் தாலிக்குத் தங்கமும், ரூ.6,112 கோடியில் மடிக்கணினியும் வழங்கி இருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
 இந்த இலவசங்கள் எல்லாம் தேவைதானா என்று கேட்டால், அதிமுக தலைமை திமுகவைச் சுட்டிக்காட்டும். இப்படி இலவசங்களை வாரி வழங்கி ஆட்சியைப் பிடிக்கும் தந்திரத்தின் தொடக்கம் 2006 தேர்தலில் திமுக அறிவித்த இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி என்பதை யாரால் மறுக்க முடியும்? இந்தத் தேர்தலிலேயேகூட, திமுகவின் தேர்தல் அறிக்கையில் தொடுதிரை கைபேசி, விவசாயக் கடன் ரத்து என்று திமுக அறிவித்திருக்கும்போது, அதிமுக அதைவிட அதிகமான இலவசங்களை எப்படி அறிவிக்காமல் இருக்க முடியும்? முதலில் அதிமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி இருந்தால், இப்போது அதிமுக அறிவித்திருப்பதைவிட அதிகமான சலுகைகளைத் திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாரி வழங்கி இருக்கும்.
 இந்த இலவச வியாதிக்குப் பிள்ளையார் சுழி போட்டது 1967-இல் அண்ணா தலைமையில் அமைந்த திமுக ஆட்சி. "ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி நிச்சயம்' என்கிற கோஷத்துடன் அந்தத் தேர்தலில் திமுக தோற்றுவித்த அவலம் இன்று பூதாகரமாக தமிழகத்தைப் பற்றிக் கொண்டிருக்கிறது. அதற்கு முன்னால் இருந்த காங்கிரஸ் ஆட்சியில் இலவசக் கல்வி கொடுத்தார்கள். தொழிற்பேட்டைகளை நிறுவினார்கள். அணைகள் கட்டினார்கள். கூட்டுறவுச் சங்கங்களையும், கூட்டுறவு வங்கிகளையும் ஏற்படுத்தினார்கள். அந்த சாதனையின் அடிப்படையில் வாக்குக் கேட்டார்கள். ஆனால், ரூபாய்க்கு ஒரு படி அரிசிக்காக மக்கள் அவர்களைத் தோற்கடித்தார்கள். அதிலிருந்துதான் தொடங்கியது இந்த அவலம்.
 இலவசங்களைக் காட்டி மயக்கி வாக்குகள் பெற்று ஆட்சி அமைப்பதாகட்டும், "திருமங்கலம்' பார்முலா என்று உருவாக்கி தேர்தலில் வாக்காளர்களுக்கு முறைப்படுத்தப்பட்ட பண விநியோகமாகட்டும், அதன் ஊற்றுக்கண் எங்கே என்று பார்த்தால், அது திமுக தலைமையிடமாக இருக்கிறது என்பதுதான் வரலாற்று உண்மை. இதற்கு எப்படி, எப்போது முடிவுகட்டுவது?
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.