நல்லகண்ணு உடல்நிலை! விஜய் விசாரிப்பு!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

இராணுவச் சிக்கல்!

காலாட்படையிலும், கடற்படையிலும் பணியிடங்கள் காலியாக இருப்பது கவலை அளிப்பதாக இருந்தாலும், அதில் சற்று ஆறுதலளிக்கும் செய்தி, நிலைமையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது என்பது. 2010-இல் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. காலாட்படையில் மட்டும் காலியாக இருந்த அதிகாரிகள் பணியிடம் 26%, இப்போது அது 18%-ஆகக் குறைந்திருக்கிறது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 5:11 pm

ஆசிரியர்

ஒரு மிகப்பெரிய சவாலை எதிர்நோக்குகிறது, 12 லட்சம் வீரர்களைக் கொண்ட இந்திய ராணுவம். ராணுவத்திற்கு வீரர்கள் சேர வருவதுபோல, அதிகாரிகள் பதவிக்கு இளைஞர்கள் அதிகமாக வருவதில்லை என்பதுதான் இந்திய ராணுவம் இப்போது எதிர்கொள்ளும் பிரச்னை.
 காலாட்படையில் 9,106 அதிகாரிகள், கடற்படையில் 1,265 அதிகாரிகள் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது என்கிற தகவலைப் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் மக்களவையில் தெரிவித்திருக்கிறார். ராணுவத்தில் பொது மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர் பிரிவுகளைத் தவிர்த்து ஜூலை 1, 2015-ஆம் ஆண்டு நிலையில் இந்திய காலாட்படையில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் எண்ணிக்கை 49,631. ஆனால், பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கை 40,525 மட்டுமே.
 காலாட்படையிலும், கடற்படையிலும் இருப்பது போன்ற நிலைமை விமானப் படையில் இல்லை. விமானிகளாக ராணுவத்தில் சேர்வதற்கு இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். அதற்குக் காரணம், குறிப்பிட்ட காலம் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்றால், வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியமும், சலுகைகளும் பெறலாம் என்பது மட்டுமல்ல, பணி ஓய்வு பெற்ற பிறகு தனியார் விமான நிறுவனங்களில் சேர்ந்து விமானிகளாகப் பணியாற்ற முடியும் என்பதும்கூட!
 காலாட்படையிலும், கடற்படையிலும் பணியிடங்கள் காலியாக இருப்பது கவலை அளிப்பதாக இருந்தாலும், அதில் சற்று ஆறுதலளிக்கும் செய்தி, நிலைமையில் சற்று மாற்றம் ஏற்படுகிறது என்பது. 2010-இல் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. காலாட்படையில் மட்டும் காலியாக இருந்த அதிகாரிகள் பணியிடம் 26%, இப்போது அது 18%-ஆகக் குறைந்திருக்கிறது.
 இப்படி காலாட்படையிலும், கடற்படையிலும் அதிகாரிகள் பதவியில் பணியாற்ற இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்வராததற்குப் பல காரணங்கள் கூறப்படுகின்றன. மிகவும் கடுமையான தேர்வு முறை, ராணுவத்தின் கட்டுப்பாடுகள், ராணுவ சேவை எதிர்கொள்ளும் ஆபத்துகள் போன்றவை பல இளைஞர்களைத் தடுத்து நிறுத்துகின்றன.
 அதுமட்டுமல்லாமல், ராணுவ உயர் அதிகாரிகளும் குறைவான இளைஞர்களை மட்டும் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிப்பதை உறுதிப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். ஒரேநேரத்தில் பல இளைஞர்கள் ராணுவத்தில் சேர முன்வருவார்கள். அவர்களில் ஒரு சிலரை மட்டுமே தேர்ந்தெடுத்துப் பயிற்சி அளிக்கிறார்கள். அடுத்தமுறை, கூப்பிடும்போது, குறைந்த அளவே விண்ணப்பங்கள் வருகின்றன. முன்பு நிராகரிக்கப்பட்டவர்கள் வேறு வேலைக்குப் போய்விடுகிறார்கள். இதுகுறித்து ராணுவம் மறுசிந்தனை செய்ய வேண்டும்.
 இந்திய ராணுவத்தில்தான், அதிகாரிகள் நிலையிலுள்ளவர்கள் போர்முனையில் நிறைய எண்ணிக்கையில் மரணமடைகிறார்கள். ஏனைய ராணுவங்களில் அதிகாரிகள் போர்முனைக்குப் போவது அரிது. இங்கே, வீரர்களை முன்னின்று அதிகாரிகளே வழிநடத்தும் முறை இப்போதும் கடைப்பிடிக்கப்படுவதுதான் அதற்குக் காரணம். அதிகாரி நிலையிலுள்ளவர்கள் போர்முனையிலோ அல்லது பணியின்போதோ மரணமடையும்போது அது பரபரப்பான செய்தியாகிறது. இதுவேகூட, பல இளைஞர்களை ராணுவ அதிகாரிகளாகச் சேரவிடாமல் தடுக்கிறது என்று கருத இடமிருக்கிறது.
 போர்முனையில் போராடுவதை வீர சாகசம் என்று கருதி, ராணுவத்தில் அதிகாரிகளாகச் சேர்வதற்கு இளைஞர்கள் இப்போதும்கூடத் தயாராக இருக்கிறார்கள். ஆனால், அவர்களில் பலரும் தயங்குவதற்குக் காரணம், ராணுவம் அவர்களைப் போர்முனையில் பயன்படுத்தாமல் பயங்கரவாதிகள், போராட்டக்காரர்கள் ஆகியோரை எதிர்கொள்ள அதிகமாகப் பயன்படுத்துவதுதான் என்கிறது மீரட்டிலிருந்து செயல்படும் முன்னாள் ராணுவ வீரர்களின் நல்வாழ்வு அமைப்பு.
 போராட்டக்காரர்கள், கலகக்காரர்கள், பிரிவினைவாதிகள் போன்றவர்களை எதிர்கொள்வதுதான் ராணுவத்தின் முக்கியமான பணி என்பது போன்ற தோற்றத்தைக் காஷ்மீர், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற இடங்களில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டிருப்பது ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பணிகளில் ஈடுபடுவதை இளைஞர்கள் அதிகமாக விரும்புவதில்லை.
 சமீபத்தில் தில்லிக்கு அருகில் யமுனை நதிக் கரையில் நடந்த "வாழும் கலை' அமைப்பின் மாநாட்டிற்கு ராணுவம் பாலம் அமைத்துக் கொடுத்ததில் தொடங்கி, ஆழ்துளைக் கிணற்றில் குழந்தைகள் விழுந்தால் மீட்பது, ஆங்காங்கே மதக் கலவரம் எழுந்தால் அதை அடக்குவதற்கு அனுப்பப்படுவது, இயற்கைப் பேரிடர்கள் நேரிடும்போடு உதவிக்குப் பணிக்கப்படுவது என்று ராணுவம் எல்லாவற்றிற்கும் பயன்படுத்தப்படுகிறது. தேர்தல் நேரங்களில் பாதுகாப்பு வேலையைக்கூட விட்டுவைக்காமல் ராணுவத்தை அழைக்கிறார்கள். மக்கள் மனதில் ராணுவத்தின் மீதான மரியாதையை இவை உயர்த்தலாம். ஆனால், ஆர்வமுடன் ராணுவத்தில் சேர இளைஞர்களை இவை ஈர்க்காது.
 இளைஞர்களிடம் தேசப்பற்று குறைந்துவிட்டது என்று கருதிவிட முடியாது. ராணுவத்தில் சேராமல் அவரவர் பணிகளின் மூலமும் தேச சேவை செய்ய முடியும் என்கிற எண்ணம் பரவலாக ஏற்பட்டிருப்பதுதான் அவர்கள் ராணுவ அதிகாரிகளாகப் பணியாற்றப் பெரிய அளவில் முன்வராததற்குக் காரணம். ராணுவப் பணிக்கு இளைஞர்களைக் கவர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அரசு தீவிரமாக யோசித்தாக வேண்டும்.
 தளபதிகள் இல்லாமல் போர் வீரர்கள் மட்டுமே இருந்தால் அது பலமான ராணுவமாக இருக்காது. காலியாக இருக்கும் அதிகாரிகள் பணியிடங்களை உடனடியாக நிரப்புவதைப் போர்க்கால நடவடிக்கையாக செயல்படுத்தியாக வேண்டும். தயார் நிலையில் ராணுவம் என்பதை உறுதிப்படுத்துவது அரசின் அடிப்படைக் கடமை!
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.