அமெரிக்க அதிபர் ஒபாமா மேற்கொண்டுள்ள கியூபா பயணம் ஒரு வரலாற்று நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்கா, கியூபா மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்துமே இந்தப் பயணத்தின் விளைவுகள் குறித்து இருவிதமான கருத்துகளுடன் நோக்குகின்றன.
÷ஒபாமாவின் இந்தப் பயணத்தால் கியூபாவின் பழைமைத்தன்மை மாறும், கியூபா மக்கள் நவீன உலகின் காற்றைச் சுவாசிப்பார்கள் என்பது ஒரு சிலருடைய கருத்து. கியூபா தனது ராணுவ ஆட்சியின் அதிகாரத்தை விலக்கிக் கொள்ளாமல், மக்களைச் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்காத வரை அந்த நாட்டில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடாது என்பது மற்றொரு கருத்து. இந்த இரண்டு கருத்துகளுமே உண்மை; புறக்கணிக்க முடியாதவை.
÷இருப்பினும், பாறைகளை உடைத்து முளைப்பு விடும் செடிக்கு, அந்தப் பாறையில் ஏதாவது ஒரு சிறு இடம், சிறு பிளவு தேவையாக இருக்கிறது என்பதைப்போல, அரை நூற்றாண்டுக்கும் மேலாகக் கம்யூனிச நாடாகத் திகழும் கியூபாவின் "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' ஏதாவது ஒரு நிகழ்வின் மூலம் தொடங்கப்பட்டாக வேண்டும். அதன் தொடக்கமாக அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பயணம் அமைவது உறுதி.
÷அமெரிக்காவைப் பொருத்தவரை, கியூபா ஒரு பொருளாதாரச் சந்தை. தகவல்தொடர்பு, சுற்றுலா, வர்த்தகம், வால்மார்ட் போன்ற சங்கிலித் தொடர் நிறுவனங்களின் கடைவிரிப்பு என பல்வேறு வாய்ப்புகளை எதிர்நோக்கி இருக்கிறது.
÷கியூபாவில் வலைதள இணைப்புப் பெற தனிநபர்களுக்கு அனுமதியில்லை. அரசு அனுமதிக்கும் வலைதளக் கடைகள், அல்லது அரசு அலுவலகத்தில்தான் வலைதளத் தொடர்பு கொள்ள முடியும். இந்த இணைப்புகளின் வேகம், கட்டுப்பாடு எல்லாமும் அரசால் தீர்மானிக்கப்படும்; கட்டணம் மிகமிக அதிகம். ஒரு மணி நேரம் வலைதளம் பார்க்க வேண்டும் என்றால், கியூபா ராணுவ அரசு நிர்ணயித்துள்ள ஒரு மாத சம்பளத்தில் நான்கில் ஒரு பகுதி செலவாகிவிடும். அப்படியானால், எவ்வளவு செலவுமிக்கது என்பதைக் கணக்கிட்டுக்கொள்ளலாம்.
அதையும் மீறி, அங்கே "சாட்டிலைட் போன்கள்' மூலமாக வலைதள வசதியை ரகசியமாகப் பயன்படுத்துவோர் அதிகரித்து வருகின்றனர். இதற்கான கட்டணத்தை வெளிநாடு வாழ்உறவினர்கள் மூலம் செலுத்தி விடுவார்கள். ராணுவக் கட்டுப்பாட்டையும் மீறி வெளி உலகுடன் தொடர்பு வைத்துக் கொள்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டிருப்பதுதான், கியூபா அரசை அமெரிக்காவுக்கு நேசக்கரம் நீட்ட வைத்திருக்கிறது.
÷கியூபாவின் ராணுவ அரசு ஆதரவாளர்கள் பலரும், ஒபாமா வருகை, அமெரிக்காவுடன் உறவு ஆகியன குறித்து முகம் சுளிக்கிறார்கள். கியூபா கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிகை, "இந்த உறவுக்காக நமது புரட்சிகர லட்சியங்களை விட்டுவிடலாகாது' என்று தலையங்கம் தீட்டியுள்ளது.
÷88 ஆண்டுகளுக்குப் பிறகு கியூபா நாட்டுக்கு வருகை தரும் ஓர் அமெரிக்க அதிபரை மழைச்சாரல் மட்டும்தான் வரவேற்றது. மக்கள் வரவேற்க முடியாதபடி சாலையெங்கும் ராணுவக் கெடுபிடி. இருப்பினும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோ, அமெரிக்க அதிபர் ஒபாமா இருவரும் இணைந்து ஆற்றிய உரை கியூபா நாட்டில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
÷கியூபா மீது அமெரிக்கா கடைப்பிடிக்கும் வர்த்தகத் தடை நீக்கப்பட வேண்டும், கெளதமாலா கடற்படைத் தளத்தை கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கியூபா இரண்டு நிபந்தனைகளை முன்வைக்கிறது. வர்த்தகத் தடை நீக்கம் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஒபாமா தெரிவித்துள்ளார். ஆனால், எந்தத் தேதியிலிருந்து என்பது முடிவாகவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். கெளதமாலாவைத் திரும்ப ஒப்படைப்பது குறித்து அவர் எந்த பதிலும் கூறவில்லை. அத்துடன், கியூபாவில் மனித உரிமை மீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஒபாமா தெளிவாக வலியுறுத்தியுள்ளார்.
÷இதற்கு, கியூபா வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அமெரிக்க விவகாரப் பிரிவின் தலைவி ஜேசஃபைனா விடால் பதில் அளிக்கும்போது, அமெரிக்கா சொல்லும் மனித உரிமை, கியூபாவின் மனித உரிமை இரண்டுக்கும் "மாறுபட்ட விளக்கம்' உண்டு என்று கூறியுள்ளார்.
÷உலகம் முழுவதும் அனைவரும் அறிந்த உண்மை: கியூபாவில் மக்கள் சுதந்திரமாக செயல்பட இயலாது. அங்கு கல்வி, மருத்துவம் ஏறக்குறைய இலவசமாக கிடைத்துவிடும். ஆனால், மற்றபடி பொதுவாழ்வில் பேச்சுரிமை, எதிர்கருத்து, கேளிக்கை ஆகியவற்றுக்கு கட்டுப்பாடுகள் உண்டு. இந்தியாவில் எதிர்கருத்து வேறு, தேசவிரோதம் வேறு என்று சொல்லும் இடதுசாரிகள் கியூபா குறித்து ஏனோ பேசுவதில்லை. கியூபாவில் எதிர்கருத்து என்பது தேசவிரோதம்.
÷ரவுல் காஸ்ட்ரோ பத்திரிகையாளர்களுக்குப் பேட்டி அளிப்பதில்லை. ஆனால், இந்த முறை வேறு வழியில்லாமல் பேட்டி அளிக்க நேர்ந்தது. அரசியல் கைதிகளை விடுவிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்க, கோபத்தில் பொங்கி வெடித்துவிட்டார் ரவுல் காஸ்ட்ரோ. கியூபாவில் அரசியல் கைதிகள் யாருமில்லை, அனைவருமே குற்ற வழக்குக் கைதிகள்தான் என்றார்.
÷கியூபா ராணுவ அரசு அத்தனை சீக்கிரத்தில் அமெரிக்காவின் உறவுக்கு வளைந்து கொடுக்காது என்றாலும், எத்தனைக் காலம்தான் உலக நாடுகளை விட்டு தனிமைப்பட்டுக் கிடக்க முடியும்? ரகசியமாக, வெளியுலக நடப்புகளை தகவல்தொடர்புக் கருவிகள் மூலம் பார்ப்பது அதிகரிக்கும்போது, இந்த மக்களை இன்னும் எத்தனைக் காலத்துக்கு இப்படியே வைத்திருக்க முடியும்? ஆகவே, ஒரேயடியாக எல்லாவற்றையும் விட்டுவிடாமல், கொஞ்சம்கொஞ்சமாக இளகி, இணங்கி வருவார்கள். வேறு வழியே இல்லை.
÷ரஷியா, சீனா வழியில் இப்போது கடைசியாகக் கியூபா!